சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸின் கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டதை அடுத்து அவரிடம் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான நடிகர் கருணாஸ் இன்று (ஜூன் 2) சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலமாக செல்ல திட்டமிட்டிருந்தார். அதற்காக சென்னை விமான நிலையத்திற்கு அவர் வந்த நிலையில், வழக்கம்போல் அவரது உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது எச்சரிக்கை ஒலி எழும்பியதால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவர் கொண்டு வந்த கைப்பையை கைப்பற்றி சோதனை செய்தபோது, அதில் 40 துப்பாக்கிக் குண்டுகள் இருந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடர்பாக கருணாஸிடம் விசாரணை நடத்தினர். அதற்கு அவர், தனது சொந்த பாதுகாப்புக்காக முறையான உரிமம் பெற்று கை துப்பாக்கியை தான் வைத்திருப்பதாகவும், குண்டுகள் இருப்பது தெரியாமல் பையை எடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் தேர்தல் நடத்தை விதிகளால் நடிகர் கருணாஸ் தனது துப்பாக்கியை ஏற்கனவே சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்ததுள்ளதால், அதற்கான ஆவணங்களை சரிபார்த்து குண்டுகளை அவரிடமே பாதுகாப்பு படையினர் திரும்ப வழங்கினர்.
மேலும் அவரிடம் இனிமேல் இதை போல் விமான சட்ட விதிகளுக்கு மாறாக துப்பாக்கி குண்டுகளை விமானத்தில் எடுத்துச் செல்ல கொண்டு வராதீர்கள் என்று அறிவுறுத்திய பாதுகாப்பு படையினர், விமானத்தில் கருணாஸ் பயணிக்க அனுமதி மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
இதனையடுத்து அவர் தனது காரிலேயே திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் காரணமாக திருச்சி செல்ல வேண்டிய விமானம், சென்னை விமான நிலையத்தில் இருந்து 30 நிமடங்கள் தாமதமாக சென்றது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
“இந்த பிறந்தநாளை கொண்டாடவில்லை” : இளையராஜா உருக்கம்!
செஸ் அரங்கில் பிரக்ஞானந்தா வீறுநடை… அதானி வாழ்த்து!