மோடி வென்ற கதை!

அரசியல் ஐந்து மாநில தேர்தல் சிறப்புக் கட்டுரை

மோகன ரூபன்

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் நான்கு மாநில முடிவுகள் வெளிவந்துவிட்டன.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று வட இந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்துள்ளது. தென்னிந்திய மாநிலமான தெலங்கானாவை காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது.

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்த அளவுக்கு முக்கியமானது? இப்படி ஒரு கேள்வியை யாராவது கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்?

தேர்தல் நடந்து முடிந்துள்ள ஐந்து மாநிலங்களில் மொத்தம் 88 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்தியாவின் மொத்த வாக்காளர்களில் ஆறில் ஒரு பங்கினர், இந்த ஐந்து மாநில தேர்தலில் வாக்காளர்கள். ஆகவே, ஐந்து மாநில தேர்தல் என்பது ஒரு மினி நாடாளுமன்றத் தேர்தல் மாதிரிதான் என்பது சில அரசியல் நோக்கர்களின் கருத்து.

பரபரப்புடன் நடந்து முடிந்த இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலை பாரதிய ஜனதா எதிர்கொண்ட விதமே தனி. எந்தவித பதற்றமோ, பயமோ இன்றி பாரதிய ஜனதா இந்த தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது.

இந்தியாவில் மொத்தம் 4,033 சட்டமன்றத் தொகுதிகள். தேர்தல் நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களில் உள்ள மொத்த சட்டமன்றத் தொகுதிகள் 679. இந்த 679 தொகுதிகளில் 306 தொகுதிகள் காங்கிரஸ் கட்சி, கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தலில் வென்ற தொகுதிகள்.

தவிர, இந்த ஐந்து மாநிலங்களில் ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிதான் நடந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் மட்டும்தான் பாரதிய ஜனதா ஆட்சி.

‘அப்படியானால் காங்கிரஸ் கட்சி இந்தமுறை 2 மாநிலங்களில் ஆட்சியைத் தக்க வைத்தாக வேண்டும். ஏற்கெனவே வென்ற 306 தொகுதிகளை விட இந்தமுறை அதிக தொகுதிகளில் வெல்ல வேண்டும். ஆகவே, தேர்தல் பதற்றம் காங்கிரசுக்குத்தான், தனக்கு இல்லை’ என்று பாரதிய ஜனதா கருதியது.

ஆகவே, பயமோ, பதற்றமோ இல்லாமல் தேர்தலை எதிர்கொண்டு, முடிவு வெளியான நான்கு மாநிலங்களில் மூன்று மாநிலங்களில் பாரதிய ஜனதா  முடி சூட்டிக் கொண்டுள்ளது.

இருவேறு வியூகங்கள்

ஐந்து மாநில சட்டமன்றத்தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் இருவேறு வியூகங்களுடன் செயல்பட்டன. முதல்வர் வேட்பாளர் யார்  என்று அறிவிக்காமல் பாரதிய ஜனதா தேர்தலை எதிர்கொண்டது. காங்கிரஸ் கட்சி, முதல்வர் வேட்பாளர் யார் என அறிவித்து களமிறங்கியது.

வசுந்தரா ராஜே

எடுத்துக்காட்டாக ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியாவை முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க முன்னிறுத்தவில்லை. மத்திய பிரதேசத்தில் கமல்நாத்தை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்தி பரப்புரை செய்தது.

கமல்நாத்

ஆளும் அரசுக்கு எதிராக மக்களிடம் இருந்த அதிருப்தியை சமாளிக்க, பாரதிய ஜனதா, அதிக அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களை வேட்பாளர்களாக களமிறக்கியது.  காங்கிரஸ் கட்சியோ புதுமுக வேட்பாளர்களை இறக்கிவிட்டு மக்களின் அதிருப்தியை சமாளிக்க முயற்சித்தது.

மணிமணியான தேர்தல் வாக்குறுதிகள், சாதிவாரி கணக்கெடுப்பு என்ற துருப்புச் சீட்டு, அந்தந்த மாநிலங்களில் மாநிலத் தலைவரை சுதந்திரமாகச் செயல்பட விடும் நடைமுறை. இப்படி சரியாகத்தான் களமாடியது காங்கிரஸ் கட்சி.

பாரதிய ஜனதாவோ உள்ளூர் தலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரங்கள், பிரதமர், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் புடை சூழ பிரசாரம் செய்தது.

பாரதிய ஜனதா வழக்கமாக கையில் எடுக்கும் இந்துத்துவா என்ற சீட்டை இந்த முறை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துக் கொண்டது. இருந்தும்கூட தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளன.

200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் கரன்பூர் தொகுதி தவிர 199 தொகுதிகள் தேர்தலைச் சந்தித்தன. 75.45% வாக்குகள் பதிவாகின. கடந்த 30 ஆண்டுகளாக ராஜஸ்தானில் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் மாறிமாறி ஆட்சிக்கு வருவதுதான் வரலாறு. இந்தமுறையும் அதுபோலவே நடந்திருக்கிறது.

ராஜஸ்தானில் ஏறத்தாழ 114 தொகுதிகளில் வென்று பாரதிய ஜனதா ஆட்சியமைக்க உள்ளது. காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட், ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டார்.

ராஜஸ்தானில் காங்கிரசுக்கு நேர்ந்த சறுக்கலுக்கு இரண்டு காரணங்களை அரசியல் நோக்கர்கள் சொல்லுகிறார்கள்.

1. முதல்வர்  இடையே இருந்த முறுகல்

2. ராஜஸ்தான் பழங்குடியின மக்களை காங்கிரஸ் சரிவர கையாளத் தவறியது.

230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலமாக பாரதிய ஜனதாவின் ஆட்சி நடந்து வந்திருக்கிறது. முதல்வர் சிவராஜ்சிங்  சௌகானுக்கு மக்கள் இந்தமுறை இறுதியாகவும், உறுதியாகவும் விடை கொடுத்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ‘காங்கிரஸ் கட்சியின் புதிய முதல்வரே’ என்று கமல்நாத்துக்கு வாழ்த்துப் பதாகைகள் கூட தயாராக வைக்கப்பட்டிருந்தது.

அசோக் கெலாட், சச்சின் பைலட்

இருந்தும், மத்திய பிரதேசத்தில் ஏறத்தாழ 160 இடங்களைக் கைப்பற்றி பாரதிய ஜனதா, ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்த வெற்றிக்கு 3 காரணங்களைச் சொல் கிறார்கள் பாரதிய ஜனதாவினர்.

‘பா.ஜ.க.வின் நலத்திட்டங்கள் மக்கள் மனதைத் தொட்டிருக்கின்றன’ என்று கூறியிருக்கிறார் முதல்வர் சிவராஜ்சிங்  சௌகான். ‘லட்லி பெஹ்னா  (அன்பு சகோதரி) திட்டம், ஆட்டத்தின் போக்கையே எங்களுக்கு சாதகமாக மாற்றி விட்டது’ என்றிருக்கிறார் ஜோதிராதித்ய சிந்தியா.

‘பூத் அளவிலான பா.ஜ.க தொண்டர்கள் ஒவ்வொரு பூத்திலும் 51% வாக்குப் பதிவை உறுதி செய்ததுதான் இந்த வெற்றிக்குக் காரணம்’ என்கிறார்கள் இன்னும் சிலர்.

மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பிரகலாத் படேல், பக்கன்சிங் குலாஸ்தே, பாரதிய ஜனதாவின் தேசியப் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய வர்கியா ஆகியோரது கூட்டு தேர்தல் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரான கமல்நாத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்பட காங்கிரஸ் அனுமதித்திருந்தது. ஆனால், அதுவே காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்குக் காரணமாகவும் கருதப்படுகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்திருக்கும் மாநிலம் சத்தீஸ்கர்தான். முதல்வர் பூபேஷ் பாகேல் ஆட்சியை மீண்டும் தக்கவைப்பார் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் 50 தொகுதிகளைத் தாண்டி பாரதிய ஜனதா வெற்றிநடை போட்டுள்ளது.

பூபேஷ் பாகேல்

‘சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட சறுக்கலுக்கு ஊழல் குற்றச்சாட்டு கள்தான் காரணம்’ என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க. முன்னாள் முதல்வர் ராமன்சிங்.

நான்கு மாநில தேர்தல் முடிவுகளில் காங்கிரசுக்கு ஆறுதல் பரிசாக கிடைத்திருப்பது தெலங்கானா மட்டுமே. 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானாவில் 60க்கும் மேற்பட்ட இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் நிலையில் உள்ளது.

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள்.

1. காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவரான ரேவந்த் ரெட்டியை, காங்கிரஸ் கட்சி, சுதந்திரமாகச் செயல்பட விட்டது. (இந்த வியூகம், மத்திய பிர தேசத்தில் வேலை செய்யவில்லை. ஆனால், தெலங்கானாவில் வேலை செய் திருக்கிறது)

2. சுனில் கனுகொலு. பிரசாந்த் கிஷோர் போல சுனில் கனுகொலுவும் தேர்தல் வியூக வகுப்பாளர். கர்நாடகத்தில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கு காரணம் இவர் தான். இந்தமுறை தெலங்கானாவிலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு இவர் வகுத்த வியூகங்களும் ஒரு காரணம் என்கிறார்கள்.

நான்கு மாநில தேர்தல் முடிவில் பாரதிய ஜனதா பெற்ற வெற்றியை ‘மோடி மேஜிக்’ என்று ஸ்மிர்தி இரானி பாராட்டியிருக்கிறார்.

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகள் நான்கு மாநிலத் தேர்தல்களில் தனித்தனியாகவே களம் கண்டன. காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட சறுக்கலுக்கு இதுவும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

சரி. கடைசியாக முடிவுரைக்கு வருவோம். ‘ஐந்து மாநில தேர்தலையோ, நான்கு மாநில தேர்தல் முடிவுகளையோ, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குரிய முன்னோட்டமாகவோ, இறுதிப் போட்டிக்கு முன்னதான அரை இறுதிப் போட்டியாகவோ கருத முடியாது’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

‘காரணம். சட்டமன்றத் தேர்தல் வேறு. மக்களவைத் தேர்தல் வேறு. இரண்டும் இருவேறு வகையான தேர்தல்கள்’ என்கிறார்கள் அவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கட்டுரையாளர் குறிப்பு:

BJP plans to make Telangana a political laboratory by Mohana Ruban

மோகன ரூபன்:  மூத்த பத்திரிகையாளர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், இயற்கை ஆர்வலர்.

உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரை பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார், அரசியல் மட்டுமல்லாமல் வரலாறு, அறிவியல் துறைகளிலும் ஆர்வம் மிக்கவர். உலக அளவிலான புதிய தகவல்களை தேடிப் படித்து தமிழில் தந்து வருபவர். அந்தோணியார் காவியம், உவரியும் ஓபீரும், சந்தன உவரியில் சாலமன் கப்பல், திமிங்கல வேட்டை (மோபி டிக்), பிணந்தின்னிக் கழுகு (அமெரிக்க வல்லரசு சதிகள் பற்றியது), ஆண்டுவன் சேரல் (வரலாற்றுப் புதினம்), கவின் மிகு கானகம் உள்ளிட்ட 17 நூல்களின் ஆசிரியர்.

தெலங்கானா தேர்தல்: மாற்றம் வருமா? -17

தெலங்கானா தேர்தல்: பின்னடைவில் பி.ஆர்.எஸ் கட்சி?-16

ஓட்டுக் கேட்ட ஆளுநர்… சிறுகட்சிகள் கையில் லகான்! க்ளைமேக்ஸை நோக்கி ராஜஸ்தான்-15

பா.ஜ.க எடுத்த ஆயுதம்: அரசியல் ஆய்வகமாகும் தெலங்கானா -14

மத்திய பிரதேசத்தில் ஆட்சிமாற்றமா? 13

ஒருபக்கம் ஊழல் குற்றச்சாட்டு; மறுபக்கம் மதவாதம் : சத்தீஷ்கரில் பா.ஜ.க.வின் இரட்டைவியூகம்! 12

கிடுக்கிப்பிடியில் சிக்கிய கே.சி.ஆர்: விறுவிறுப்பாகும் தெலங்கானா தேர்தல் 11

மணிப்பூர் ஆகிவிடுமா மிசோரம்? தேர்தல் நிலவரம் க்ளைமாக்ஸ் ரிப்போர்ட்! 10

ம.பி. தேர்தலில் மாற்றத்துக்கான காற்று!-9

சத்தீஷ்கர்: முதல்வரை எதிர்த்து நிற்கும் மருமகன்! பிரியங்காவின் பிரம்மாண்ட வாக்குறுதிகள்!-8

மிசோரம் தேர்தல் : ‘ஓ! பா.ஜ.க.வின் கேம் பிளான் இதுதானா?’-7

கழன்று செல்லும் தலைவர்கள்.. கலகலக்கும் காங்கிரஸ்!-6

மிசோரம்: தேர்தல் மல்லுக்கட்டில் மலை மாநிலம்!-5

தெலங்கானா வடக்கின் தெற்கு, தெற்கின் வடக்கு!  5 மாநில தேர்தல் அலசல் மினி தொடர்-4

சோழன் ஆண்ட சத்தீஷ்கர்- 5 மாநில தேர்தல் -அலசல் மினி தொடர்-3

ராவணனின் மாமனார் வீடு ராஜஸ்தான் யாருக்கு?-2

5 மாநில தேர்தல்… வெற்றி வாய்ப்பு யாருக்கு?  அலசல் மினி தொடர்!-1

 

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *