முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இன்று (நவம்பர் 12) சிறையிலிருந்து விடுதலையான இலங்கையைச் சேர்ந்த 4 பேர் திருச்சி சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 வருடங்களுக்கு மேலாகப் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் மற்றும் ராபர் பயாஸ் ஆகிய 7 பேர் 30 வருடங்களுக்கு மேலாகச் சிறையில் இருந்து வந்தனர்.
இவர்களில் பேரறிவாளன் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்.

மீதமுள்ள 6 பேரும் பேரறிவாளனை விடுதலை செய்தது போல் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று (நவம்பர் 11) நளினி உட்பட 6 பேரை விடுதலை செய்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் நாகரத்னா அமர்வு தீர்ப்பு அளித்தது.
6 பேர் விடுதலை
6 பேரும் விடுதலை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியிருந்தாலும் விடுதலை தொடர்பான நீதிமன்ற உத்தரவு நகல் இன்று தான் வேலூர், புழல், மதுரை சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த பிறகே 6 பேரையும் இன்று சிறைத்துறை அதிகாரிகள் விடுதலை செய்தார்கள்.
4 இலங்கையர்கள்
விடுதலை செய்யப்பட்ட 6 பேரில் முருகன், சாந்தன், ராபர்ட் பாயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் இலங்கையர்கள். வெளிநாட்டவர்கள் இந்தியாவில் தங்க வேண்டும் என்றால் அவர்களிடம் சுற்றுலா விசா இருக்க வேண்டும்.
அப்படி இல்லையென்றால் அவர்கள் மீது வழக்கு ஏதேனும் இருக்கிறதா என்பதை விசாரித்து, அப்படி வழக்கு ஏதேனும் இருந்தால் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
ஆனால் 4 பேரும் தற்போது தான் விடுதலையாகியுள்ளார்கள் என்பதால் அவர்கள் மீது வழக்கு எதுவும் இல்லை.
இதனால் அடுத்தகட்ட நடவடிக்கையாக 4 பேரையும் அகதிகள் முகாமில் தங்கவைப்பது தான் சட்டம்.
முதல்வரிடம் வேண்டுகோள்
இந்நிலையில் நேற்று விடுதலை பற்றிய உத்தரவு வெளியான பிறகு தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜி.கே. முரளிதரன் மின்னம்பலத்திடம் பேசுகையில், ”6 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, விடுதலை செய்யப்பட்ட 6 பேரில் 4 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்” என்று கேள்வியும் எழுப்பியிருந்தார்.
6 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்த தமிழர் தேசிய முன்னணி கட்சியின் தலைவர் பழ. நெடுமாறன் முதல்வரிடம் ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார்.
அவர், “விடுதலையான 4 ஈழத் தமிழர்களால் இலங்கைக்கும் திரும்பிச் செல்ல இயலாது. அவர்களை முகாம்களில் தங்க வைக்காமல் அவர்களது உறவினர்களிடம் அனுப்பி வைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
முகாமிற்குச் செல்லும் 4 பேர்
இந்நிலையில், 4 இலங்கையர்களை என்ன செய்வது என்று சிறைத் துறை மற்றும் உள்துறை அதிகாரிகள் ஆலோசித்து ஒரு முடிவை எடுத்துள்ளனர்.
அதன்படி 4 பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைப்பதற்காக காவல்துறையினர் அவர்களைத் திருச்சி இலங்கைத் தமிழர்கள் முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இவர்கள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவதற்கு தற்போது எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
“உச்சநீதிமன்றமே விடுதலை செய்த பிறகும் திருச்சி முகாமுக்குக் கொண்டு செல்வது அநீதியிலும் அநீதியாகும். முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு முகாமுக்குக் கொண்டு செல்வதைத் தடுத்து, அவரவர் விரும்பும் இடங்களில் தங்க அனுமதிக்க வேண்டும்.
விடுதலை காற்று சுவாசிக்கட்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் திருச்சி மத்தியச் சிறை மற்றும் முகாமில் என்.ஐ.ஏ அதிகாரிகள் பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்பு இருப்பதாகவும் போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும் அதிரடியாகச் சோதனை நடத்தினர்.
அந்த திருச்சி சிறப்பு முகாமிற்குத் தான் இவர்கள் 4 பேரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மோனிஷா
மீண்டும் சவுக்கு சங்கருக்கு சிறை!
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின்… எடப்பாடி… ஓடும் காரில் மோடி நடத்திய மீட்டிங்!