உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மேஜர் ஜெனரல் பைசல் ஆகியோர் என்னை கொல்ல திட்டமிட்டனர் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த நவம்பர் 3ஆம் தேதி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக பஞ்சாப் மாகாணத்திலிருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணியாக சென்ற முன்னாள் பிரதமர் இம்ரான் கான்,
குஜ்ஜன்வாலா பகுதியில் கண்டெய்னர் லாரி மீது ஏறி நின்று தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது கண் இமைக்கும் நேரத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர் இம்ரான் கானை நோக்கி சுட்டார்.
இதில் அவரது வலது காலில் தோட்டா துளைத்து உடனடியாக கீழே விழுந்தார். அருகிலுள்ள ஷாகட் ஹான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று மருத்துவமனையில் இருந்தபடியே இம்ரான் கான் வீல் சேரில் அமர்ந்துகொண்டு நாட்டு மக்களிடம் உரையாடினார்.
அப்போது அவர், “என் மீது தாக்குதல் நடக்கும் என்பது எனக்கு ஒரு நாள் முன்னதாகவே தெரியும். நான் நான்கு தோட்டாக்களால் தாக்கப்பட்டேன். எனது வலது காலில் தோட்டாக்கள் துளைத்தன.
எனக்கு சிகிச்சையளித்த டாக்டர் பைசல் சுல்தான், வலது காலில் எக்ஸ் ரே எடுத்து பார்த்தபோது, திபியா (மூட்டுப்பகுதி) சேதமடைந்திருப்பதையும், முறிந்திருப்பதையும் காண முடிகிறது” என்றார்.
எனது காலில் இருந்த தோட்டா குண்டுகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. நான் லாரியில் ஏறி நின்ற போது தோட்டாக்கள் என்னை நோக்கி செலுத்தப்பட்டன. காலில் தோட்டாக்கள் துளைத்ததும் கீழே விழுந்தேன்.
இரண்டாவது குண்டு வந்தபோது இரண்டு பேர் இருந்தனர். இரண்டு குண்டுகளும் ஒரே நேரத்தில் என் மீது துளைக்கப்பட்டிருந்ததால் நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்.
நான் கீழே விழுந்ததால், என்னை துப்பாக்கியால் சுட்டவர்கள் நான் இறந்துவிட்டதாக நினைத்தார்கள்.
தீவிரவாதி என்று ஒரு சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தீவிரவாதி அல்ல.
இந்த முயற்சிக்குப் பின்னால் வேறு ஒரு திட்டம் இருந்தது. நாங்கள் அதை வெளிக்கொண்டு வருவோம்.
உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மேஜர் ஜெனரல் பைசல் ஆகியோர் என்னை கொல்ல திட்டமிட்டனர்.
முன்னாள் பஞ்சாப் கவர்னர் சல்மான் தசிர் கொல்லப்பட்டது போல் என்னையும் கொல்ல பாகிஸ்தான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த தருணத்தில் ராணுவ தளபதி மற்றும் தலைமை நீதிபதியிடம் பாகிஸ்தானை காப்பாற்ற வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார்.
செல்வம்
இரு உயிரை பறித்த கட்டடம்: அகற்றப்படாதது ஏன்?
சென்னை டூ இமயமலை: நித்தம் ஒரு வானம் எப்படி?