வைஃபை ஆன் செய்ததும் ஆடியோ வீடியோ சமாச்சாரங்கள் மீம்ஸ்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“நிதி அமைச்சர் பிடிஆர் பேசியதாக வெளியான இரண்டு ஆடியோக்கள் திமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் அடுத்தடுத்து ஆடியோக்கள் வெளிவரும் என்று பாஜக தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 29ஆம் தேதி திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலியில் சிலந்தி பக்கத்தில் ஆடியோ விவகாரம் குறித்து தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது திமுக. ’பிடிஆர் ஆடியோ போலியானது என்று அவரே விளக்கம் அளித்து விட்ட பிறகு எடப்பாடி பழனிச்சாமி அது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று அமித்ஷாவிடம் கோரிக்கை வைக்கிறார்.
அப்படி என்றால் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன், பொன்னையன் ஆகியோரின் ஆடியோ பற்றி எல்லாம் விசாரணை நடத்தலாமா.. பாஜக தரப்பிலிருந்து ஆடியோ வீடியோக்கள் இன்னும் இருக்கின்றன’ என்று சைலன்ட் மோடிலிருந்து அட்டாக் மோடுக்கு மாறி இருக்கிறது திமுக.

அதே நேரம் கடந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் திருப்தி இல்லாமல் விரக்தியில் இருக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், பெரிய அதிகாரம் இல்லாத அமைச்சர்களும் தங்களது விரக்தியை தங்களது சுற்றி உள்ளவர்களிடம் வெளிப்படுத்தி இருக்கின்றனர். இதை மிகவும் சாமர்த்தியமாக பதிவு செய்து பாஜக தரப்பு தன் வசம் வைத்திருக்கிறது என்பது தான் பாஜக வட்டாரத்தில் இருந்து கிடைக்கும் தகவல்.
இந்த வகையில் ஒரு மூத்த அமைச்சர் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கட்சி தலைமையை விமர்சித்து பேசிய பேச்சு பதிவுகள் இருப்பதாகவும் பாஜக வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
திமுகவினர் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் விரக்தி உரையாடல்கள் எப்படி பாஜக கைக்கு போகும் என்று விசாரணை நடத்திய போது தான் கார்ப்பரேட் அரசியல் இங்கே மூக்கை நுழைக்கிறது.
2021 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை நியமித்தது. அவரது ஐ பேக் டீம் இங்கே வந்து திமுகவுக்காக வேலை செய்தது. முக்கியமான நபர்கள் மட்டுமே பிரசாந்த் கிஷோரோடு வந்தார்கள். மற்றபடி அவர்களது உத்திகளையும் உத்தரவுகளையும் செயல்படுத்த வேண்டியவர்கள் தமிழ்நாட்டிலிருந்தே தேர்வு செய்யப்பட்டார்கள்.
தேர்தல் முடிந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட முக்கியமானவர்கள் சென்றுவிட்டாலும் அவர்கள் பயன்படுத்திய ஐபேக் செயல்பாட்டாளர்களில் சிலர் திமுகவிலேயே இன்னும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கின்றனர். சிலர் வெவ்வேறு தளங்களுக்கு சென்று விட்டனர்.
ஆனால் தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட பழக்கம் காரணமாக அவர்கள் தொடர்ந்து திமுக நிர்வாகிகளுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள். அவர்களிடம் அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் கட்சியில் தங்கள் நிலையையும் வேதனையையும் புலம்பி இருக்கிறார்கள். அந்த தேர்தல் உத்தி செயல்பாட்டாளர்கள் மூலம் தான் இந்த ரகசிய உரையாடல் பதிவுகள் வெளியே சென்றிருக்க வேண்டும் என்கிறார்கள் திமுக வட்டாரங்களில்.

அவர்கள் வேறு ஒரு முக்கியமான விஷயத்தையும் நினைவுபடுத்துகிறார்கள். தேர்தல் பணிக்காக ஐ பேக் அமர்த்தப்பட்ட போது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர் மறைந்த திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான ஜெ. அன்பழகன்.
அவர் ஸ்டாலினைப் பார்த்து, ‘நீங்கள் எங்கள் தலைவர். உங்கள் உத்தரவை கேட்டு நடக்கிறோம். ஆனால் உங்கள் பேரை சொல்லி கண்டவனும் உத்தரவு போட்டால் அதைக் கேட்டு நடக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இவர்களால் கட்சிக்கு கெட்ட பேர் தான் வரும்’ என்று அன்றே கட்சிக்கு அப்பாற்பட்ட தனியார் குழுவினர் பற்றி அன்பழகன் எச்சரித்தார்.
அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள் திமுக சீனியர்கள்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
மல்யுத்த வீரர்கள் போராட்டம்: கெஜ்ரிவால் ஆதரவு!
ரெய்டு எதிரொலி… ஆட்டிப் படைத்த ஆடிட்டர்- ஆடிப் போன அமைச்சர்கள்!