டிஜிட்டல் திண்ணை: எதிர்க்கட்சிகளின் 3 ஆவது கூட்டம் சென்னையில்- ஸ்டாலின் ஸ்கெட்ச்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் பற்றிய ஷார்ட்ஸ் வீடியோக்கள் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“ஜூன் 23 ஆம் தேதி பிகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜூன் 22 ஆம் தேதியே அங்கு சென்ற தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கூட்டத்தில் கலந்துகொண்டார்.

பிகார் முதல்வர் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பிகார் துணை முதல்வரும் ஆர்.ஜே.டி. தலைவருமான தேஜஸ்வி யாதவ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஆம் ஆத்மி தலைவர் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் கடந்த மார்ச் 1 ஆம் தேதி தனது பிறந்தநாள் கூட்டத்தில் விடுத்த செய்தியை மேலும் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்திருக்கிறார். தேசிய அளவில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டுமானால்… முதலில் நமக்குள் இருக்கும் சிறுசிறு கருத்து வேறுபாடுகளை அகற்ற வேண்டும். முதலில் மாநில அளவில் நாம் கூட்டணி அமைக்க வேண்டும், மாநிலத்தில் செல்வாக்குள்ள கட்சியின் தலைமையில் அக்கூட்டணியை அமைக்க வேண்டும்.

முடியவில்லை என்றால் இடப் பங்கீடு செய்துகொள்ள வேண்டும். அதுவும் முடியவில்லை என்றால் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். தேர்தலுக்குப் பின் கூட்டணி என்றால் மக்கள் நம்ப மாட்டார்கள் என்பதால் இப்போதே நாம் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய ஸ்டாலின்…
தமிழ்நாட்டில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் என தொடர் வெற்றி பெற்ற தங்களது கூட்டணி பற்றி எடுத்துரைத்தார்.

எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது. இமாலசப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில் அங்கே அடுத்த கூட்டம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டத்தை சென்னையில் நடத்துவதற்கு ஸ்டாலின் விரும்புகிறார். இதற்கான விருப்பத்தை அவர் நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

முதல் கூட்டத்தில் பரஸ்பர கலந்துரையாடல் நடைபெற்றது, அடுத்த கூட்டத்தில் ஸ்டாலின் வலியுறுத்தியபடி கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் குறைந்தபட்ச செயல் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படவேண்டும் என்றும் ஸ்டாலின் விரும்புகிறார்.

கலைஞர் 90 களில் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியின் குறைந்த பட்ச செயல் திட்டம் வகிப்பதில் முதன்மையானவராக செயல்பட்டார். அதுபோல தேசிய அளவில் அமைய இருக்கும் இந்த புதிய கூட்டணியின் குறைந்த பட்ச செயல் திட்டம் என்பது சமூக நீதி அடிப்படையிலானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஸ்டாலின்… சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் குறைந்தபட்ச செயல் திட்டம் பற்றிய இறுதி முடிவெடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னும் சில மாதங்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஓர் தெளிவான வடிவம் பெற்று குறைந்த பட்ச செயல் திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்பது ஸ்டாலினுடைய பார்வையாக இருக்கிறது. இதற்கான முன்னெடுப்புகளில் திமுக இனி தீவிரமாக இயங்கும் என்கிறார்கள் திமுக சீனியர்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

ஷர்மிளா பணி நீக்கம்: போனில் தொடர்பு கொண்டு உறுதியளித்த கனிமொழி

டிசிஎஸ் நிறுவனத்தை உலுக்கிய லஞ்ச முறைகேடு: வசமாக சிக்கிய 4 அதிகாரிகள்!

குஷ்பு மருத்துவமனையில் அனுமதி!

3rd meeting of the opposition parties in Chennai
+1
0
+1
0
+1
0
+1
8
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *