“தமிழ்நாட்டிலிருந்து 39 எம்.பி.க்களை டெல்லிக்கு அனுப்ப, அடுத்த 60 நாட்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்” என அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய ’என் மண் என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழா பல்லடத்தில் இன்று (பிப்ரவரி 27) நடைபெற்றது.
அதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய நிலையில், அதற்கு முன்னதாக அண்ணாமலை பேசினார்.
அவர், “தமிழ்நாட்டில் பிரதமர் மோடியின் புகழ் பட்டித்தொட்டியெங்கும் பரவி உள்ளது. இன்று நடைபெறுவது சரித்திரக் கூட்டம். தமிழ்நாட்டின் மாற்றம் பல்லடத்தில் இருந்து தான் தொடங்குகிறது என்று வரலாற்றில் பதிவாக போகிறது.
ஈரோடு மஞ்சளுக்கு நிஜாமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரியத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். இதன்மூலம் மஞ்சள் ஏற்றுமதிக்கு மிகப்பெரிய தளத்தை அவர் உருவாக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு இருப்பதற்கு பிரதமர் மோடி என்ற ஒரே மனிதர் மட்டுமே காரணம். தோடர் இன மக்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது.
இவற்றின் நினைவாக தான் அவருக்கு மஞ்சள் மாலை, தோடர் பாரம்பரிய சால்வை, ஜல்லிக்கட்டு காளை நினைவுச்சின்னம் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கியுள்ளோம்.
என் மண் என் மக்கள் யாத்திரைக்கு நாம் கடுமையாக உழைத்திருக்கிறோம். அதன் நிறைவு விழாவாக இது இருந்தாலும் நாம் செய்யவேண்டிய செயல்கள் இன்னும் ஏராளம் உள்ளது.
வரும் மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் பாஜக 450 எம்.பி.,க்களை பெற்று மோடி 3வது முறையாக பிரதமர் ஆக வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் பாஜக கூட்டணியே வெற்றி பெற வேண்டும்.
தமிழ்நாட்டிலிருந்து 39 எம்.பி.க்களை டெல்லிக்கு அனுப்பும் வரை நமக்கு ஓய்வு என்பதே இல்லை. அதற்காக அடுத்த 60 நாட்கள் நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மோடியுடன் கலந்து கொண்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யார் யார் தெரியுமா?
விபத்தில்லாமல் பணியாற்றிய ஓட்டுநர்களுக்கு… தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசு!