ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து 9000 கிலோ மீட்டர் பயணித்து 655 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு 1 கோடியே 3 லட்சம் பேர் பயனடையும் வகையில் திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக முதல்வர் கூறியிருக்கிறார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் உரையாற்றிய முதலமைச்சர், ஆட்சிப் பொறுப்பேற்றபின் மேற்கொண்ட எனது பயணங்கள் குறித்து பின்னோக்கிப் பார்க்கும் போது எனக்கே மலைப்பாக இருக்கிறது.
கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 655 நிகழ்ச்சிகளில் நான் பங்கெடுத்துள்ளேன். ஓராண்டு என்பது 365 நாட்களாக இருந்தாலும், ஒரு நாளைக்கு இரண்டு நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அளவுக்கு நான் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளேன்.
அதிலே 551 நிகழ்ச்சிகள் அரசு நிகழ்ச்சிகள். இடையில் கொரோனா தாக்கப்பட்டு சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டியதாக இருந்தது. கால் வலி மற்றும் முதுகு வலி காரணமாக சில நாட்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்தேன். இத்தகைய இடர்பாடுகள் இல்லாமல் இருந்தால் இன்னும் 50 நிகழ்ச்சிகள் அதிகம் ஆகியிருக்கும்.
மொத்தமாகச் சொல்வதாக இருந்தால் கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 9 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களைச் சந்தித்து விட்டு வந்திருக்கிறேன்.
நாள்தோறும் உழைப்பதாகச் சொல்வார்கள், நான் நொடிக்கு நொடி உழைத்து வருகிறேன். என்னை வருத்திக் கொண்டு நான் அலையவில்லை. யாரும் பாராட்ட வேண்டும் என்பதற்காகவும் நான் ஓயாத அலைச்சல்களை உருவாக்கிக் கொள்ளவில்லை.
நான் என்னுடைய இயல்பில் தான் இருக்கிறேன். இதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. தலைவர் கலைஞர் எங்களுக்கு இப்படித்தான் உழைக்கக் கற்றுக் கொடுத்தார்கள். அவரிடம் கற்ற பாடங்கள் என்னை இப்படி உழைக்கத் தூண்டுகிறது.
என்னுடைய அறையில் ‘டேஷ் போர்டு‘ வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு நாளும் எந்தளவுக்கு முன்னேறிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை தொடர்ந்து நான் கண்காணித்து வருகிறேன்.

தீட்டிய திட்டங்கள் அனைத்தும் எந்தளவுக்கு ஒவ்வொரு நாளும் நகர்ந்து கொண்டிருப்பதை அறிவதன் மூலமாக அரசாங்கத்தை முடுக்கிவிட்டுக் கொண்டு இருக்கிறேன்.
இரவுத் தூக்க நேரம் மட்டுமே எனது ஓய்வு நேரமாக இருக்கிறது. பொறுப்பு கூடக்கூட ஓய்வு என்பது குறைந்துவிடும். ‘மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதாக இல்லை’ என்றார் புரட்சியாளர் மாவோ. அப்படித்தான் பணிகள் அதிகம் வந்து, என்னை செயல்பட வைத்துக் கொண்டே இருக்கிறது.
9 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சுற்றி வந்து மக்களைச் சந்தித்தேன், விழாக்களில் கலந்து கொண்டேன் என்றால் அதன் மூலமாக பயனடைந்த மக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் மூலமாக ஒரு கோடியே 3 இலட்சத்திற்கும் அதிகமான பேர் பயனடைந்துள்ளார்கள். அதாவது ஒரு கோடிப் பேருக்கு தனிப்பட்ட முறையில் உதவிகள் செய்து கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதன் மூலமாக பயனடைந்தவர்கள் இவர்கள். மொத்தமுள்ள மாவட்டங்களில் 28 மாவட்டங்களில் நலத் திட்ட விழாக்கள் நடந்துள்ளன.
முடிவுற்ற மொத்தப் பணிகள் 7 ஆயிரத்து 430, இதன் மொத்த மதிப்பு 3 ஆயிரத்து 50 கோடி ரூபாய் ஆகும். இதுவரை அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கப்பட்ட மொத்தப் பணிகள் 13 ஆயிரத்து 428, இதன் மொத்த மதிப்பு 4 ஆயிரத்து 744 கோடி ரூபாய் ஆகும்.
இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்புகளின்கீழ், தமிழ்நாடு முழுவதும் இதுவரை அனைத்து அரசுத் துறைகளின் சார்பிலும் 2 இலட்சத்து 57 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் மூலமாக அரசு எந்தளவுக்கு வேகத்துடன் செயல்படுகிறது என்பதை அறியலாம்.
ஏதோ முதலமைச்சர் செயல்படுகிறார், அமைச்சர்கள் செயல்படுகிறார்கள், தலைமைச் செயலகம் செயல்படுகிறது என்பதாக இல்லாமல் ஒட்டுமொத்தத் தமிழ்நாடே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
பத்து ஆண்டுகளாகத் தேங்கிக் கிடந்த தமிழ்நாட்டை முன்னோக்கி ஓட வைத்திருக்கிறோம். தேய்ந்து கிடந்த தமிழ்நாட்டை வளப்படுத்தி வருகிறோம் என்றார்.
கலை.ரா
“ஆயிரம் கை மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை” – ஆளுநருக்கு சூசகமாக பதிலளித்த முதல்வர்!
கோலிக்கு ஆதரவு: ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த பாகிஸ்தான் வீரர்!