சென்னையில் தொழில் வரியினை 35 சதவீதம் உயர்த்தி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (ஜூலை 30) காலை தொடங்கியது. அப்போது மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இறப்பிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் முக்கிய தீர்மானங்களாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்வு, தொழில் வரி 35 சதவீதம் உயர்வு ஆகியவை பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு சட்டம் 1998 பிரிவு 1/7 A-1 மற்றும் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023 பிரிவுகள் 274-288ல் தொழில்வரி நிர்ணயம் செய்யவும் மற்றும் வசூல் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தொழில் வரி விகிதங்கள் திருத்தி அமைக்கலாம் எனவும் அத்தகைய திருத்தம் 25%க்கும் குறையாமலும், 35%க்கும் மிகாமலும் இருக்க வேண்டும் என விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு வரி உயர்த்தப்பட்டது. தற்போது உள்ள அட்டவணை தொகையில் 35% தொழில்வரி உயர்த்துவதற்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி தற்போதுஆறு மாத கால நிகர வருமான வகைகளில் தொழில் வரி உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாத வருமானம் 21 ஆயிரம் ரூபாய்குள் உள்ள நபர்களுக்கு வரி உயர்வு இல்லை,
21,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை வருமானம் உள்ள நபர்களுக்கு வரி 135 ரூபாயிலிருந்து 180 ரூபாயாகவும்,
30,000 ரூபாய் முதல் 45,000 ரூபாய் வரை வருமானம் உள்ள நபர்களுக்கு 315 ரூபாயில் இருந்து 430 ரூபாயாகவும்,
45,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை உள்ள நபர்களுக்கு 690 ரூபாயில் இருந்து 930 ரூபாயாக வரி உயர்த்திட தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த வரியை 6 மாதத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டும். மேலும் தொழில் வரி விகிதத்தை திருத்துவது குறித்து மாநகராட்சியின் பரிந்துரைகளை அங்கீகரிக்க தமிழ்நாடு முழுவதும் ஒரே சீராக தொழில்வரி நிர்ணயம் செய்ய அரசுக்கு முன்மொழிவினை அனுப்பவும் மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தனுஷுக்கு செக் வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம் : கார்த்தி கண்டனம்!
தங்கம், வெள்ளி விலை தொடர் சரிவு… இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!