“தமிழ்நாடு அரசால் 3,337 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன” என முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 19) சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி நாள் கூட்டம் இன்று (அக்டோபர் 19) நடைபெற்று வருகிறது.
இன்றைய சபை நிகழ்வுகளில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்த நிலையில்,
தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110ன்கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகளில் 2021-22 மற்றும் 2022-23ம் நிதியாண்டுகளில் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, ஆளுநர் உரையில் 77 அறிவிப்புகள்,
எனது செய்தி வெளியீட்டின் மூலமாக 150 அறிவிப்புகள், சட்டமன்ற பேரவையின் விதி எண் 110ன் கீழ் 60 அறிவிப்புகள், மாவட்ட ஆய்வுப் பயணங்களின்போது வெளியிட்ட 77 அறிவிப்புகள், எனது உரைகளின் வழியாக 46 அறிவிப்புகள்,
நிதிநிலை அறிக்கை வாயிலாக 255 அறிவிப்புகள், வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் 237 அறிவிப்புகள், அமைச்சர் பெருமக்களால் மானியக் கோரிக்கைகளின்போது வெளியிடப்பட்ட 2,425 அறிவிப்புகள் என மொத்தம் 3,337 அறிவிப்புகள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளன.

அறிவிப்புகள் மீதான தொடர் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் உள்ள அரசுபள்ளிகளில் ரூ.1,050 கோடியில் புதிதாக 7,200 வகுப்பறைகள் கட்டப்படும். பழுதடைந்த சாலைகளை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
பழுதடைந்த சாலைகளை மேம்படுத்த நடப்பு நிதியாண்டில் ரூ.2,200 கோடி வழங்கப்பட்டு ரூ.4,067 கி.மீ சாலை மேம்படுத்தப்படும்.
649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 55,567 கி.மீ. சாலைகளில் 6,045 கி.மீ. நீள சாலைகள் சேதமடைந்துள்ளன.
சிங்கார சென்னை 2.0 மாநில நிதிக்குழு திட்ட நிதி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நபார்டு வங்கி உதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து 7,388 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16,390 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளும், படிப்படியாக மேம்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
ஜெ.பிரகாஷ்
காங்கிரஸ் தேர்தலில் முறைகேடு: சசிதரூர் திடீர் புகார்!
இமாச்சல் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!