3+1 அதிமுகவுடன் கூட்டணியா? வைகோ கூட்டும் அவசரக் கூட்டம்!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாளை (மார்ச் 7) கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், உயர் நிலை திட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரே ஒரு மக்களவைத் தொகுதிதான் தருவதாக திமுக தெரிவித்திருக்கிறது. ஆனால், மதிமுகவோ ஒரு மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவைத் தொகுதி வேண்டும், சொந்தச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று கோரிக்கை வைத்தது.
ஆனால் இதை திமுக ஏற்கவில்லை. ஒரே ஒரு இடத்துக்கு மேல் எதுவும் தர இயலாது என்று திமுக திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
பிப்ரவரி 29 ஆம் தேதி மதிமுகவின் குழு அறிவாலயத்துக்கு சென்று பேச்சு நடத்திவிட்டு வெளியே வந்தபோது… மதிமுகவின் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ், “உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அதன் பின் மார்ச் 1 ஆம் தேதி வைகோ, முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அதன் பின் ஆறு நாட்கள் ஆகியும் மதிமுகவை திமுக சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இந்த நிலையில், மதிமுகவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தூது அனுப்பினார். இதை மின்னம்பலத்தில், ‘வைகோவுக்கு எடப்பாடி தூது’ என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டோம்.
இந்த நிலையில்தான், அதிமுக தரப்புடன் மூன்று மக்களவைத் தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா இடமும் கேட்டு அதிகாரபூர்வமற்ற ஆரம்பநிலை பேச்சுகள் தொடங்கியுள்ளதாக மதிமுக வட்டாரங்களிலேயே கூறுகிறார்கள்.
இப்படிப்பட்ட அரசியல் பின்னணியில் தான் மார்ச் 7 ஆம் தேதி மதிமுகவின் அவசர நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் வைகோ.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
MS Dhoni: சிஎஸ்கே கேப்டன் தோனியின் ‘புதிய’ ரோல் வெளியானது!
மகளுக்காக மீண்டும் ரிஸ்க் எடுக்கும் ரஜினி?