கேரளாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 30ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்கியது.
தென் மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீடு, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, உள்கட்டமைப்பு வசதி, சுகாதாரம், மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப்பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண ஆண்டுதோறும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று (செப்டம்பர் 3) கூட்டம் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்றே சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், முதலமைச்சர் ஸ்டாலின் தங்கியிருந்த ஹோட்டலுக்கே நேரில் சென்று அவரை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது முல்லைப் பெரியாறு அணை, பேபி அணையை பலப்படுத்துதல், சிறுவாணி விவகாரம், நெய்யாறு பிரச்சினை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியது.
அதில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் புதுச்சேரி, அந்தமான், லட்சத்தீவு போன்ற யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்களும் இந்தக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மதியம் 2 மணி வரையில் நடைபெறும் இந்தக்கூட்டத்தில் பல முக்கியப் பிரச்சினைகள் விவாதிக்கப்பட இருக்கிறது.
மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு கிடைக்கக்கூடிய நிலுவைத்தொகையை கேட்டுப் பெறவும், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா இடையிலான நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலை.ரா
குலாம் நபி ஆசாத்தின் அடுத்த நகர்வு… அமித்ஷா நடத்திய ஆலோசனை!