நாட்டில் உள்ள 3000 பள்ளிவாசல்கள், தேவாலயங்களை இடிக்க பாஜகவும், சங்பரிவாரும் குறிவைத்திருக்கிறது என்று தமமுக தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6 ஆம் தேதியான இன்று, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் வழிபாட்டுரிமை பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட நிலையில், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமமுக தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது மேடையில் உரையாற்றிய ஜவாஹிருல்லா, “பாபர் எந்த ஒரு கோயிலையும் இடிக்கவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை.
அந்த பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டி அதை கட்ட ஆரம்பித்தவர் பாபருக்கு முன்பு டெல்லியை ஆட்சி செய்து கொண்டிருந்த சுல்தான் இப்ராஹிம் என்பவர்.
அவருக்கும் பாபருக்கும் 1526 ல் பானிபட் என்ற இடத்தில் யுத்தம் நடக்கிறது. அந்த யுத்தத்தில் சுல்தான் தோற்கடிக்கப்பட்டார். பாபர் வெற்றி பெற்று ஆட்சியை நிறுவுகிறார். அவருடைய ஆட்சி விரிவடைகிறது.
இன்றைய உத்திரப்பிரதேச மாநிலம் அன்று ஹவுது மாகாணம் என்றழைக்கப்பட்டது. ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒரு ஆளுநரை பாபர் நியமிக்கிறார். அப்படி ஹவுது மாகாணத்துக்கு நியமித்த ஆளுநர், தனது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ஆய்வு செய்தபோது அயோத்தியில் அரைகுறையாக ஒரு பள்ளிவாசல் இருப்பதை பார்க்கிறார்.
அதை கட்டிமுடித்துவிட்டு தன்னுடைய மன்னர் பாபர் பெயரை அந்த பள்ளிவாசலுக்கு சூட்டுகிறார். எனவே அது ஒரு கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்ட பள்ளிவாசல் அல்ல என்பதுதான் வரலாற்று உண்மை.
இதை ஜவாஹிருல்லா சொல்லவில்லை. நம்முடைய நாட்டின் 2 ஆவது குடியரசுத் தலைவராக இருந்த சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் மகன் சர்வப்பள்ளி கோபால் மிகப்பெரிய வரலாற்று ஆசிரியர் அவர் சொல்கிறார்.
அவரைப் போன்ற பல வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல, கிறிஸ்தவர்கள் அல்ல.
பாஜக வும், சங்பரிவாரும் இந்துக்களை வைத்து அரசியல் செய்வதற்காகவே பாபர் மசூதி விவகாரத்தை கையில் எடுத்தது. 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டிருந்தாலும் இன்று வரை போராட்டம் நடத்துவதற்கு காரணம்,
அராஜகவாதிகள், அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படக்கூடியவர்கள், இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் முதல் கடைநிலை தொண்டன் வரை அரசமைப்பு சட்டத்தை காலில் போட்டு மிதிக்கிறார்கள் என்பதை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கம் மட்டுமே.
சிறுபான்மை மக்களின் வழிபாட்டுரிமைகளை எல்லாம் பறித்து தங்களுடைய அரசியல் லாபத்துக்காக சங்கபரிவார் செய்யக்கூடிய அநியாயங்களை, அட்டூழியங்களை எடுத்துச் சொல்லவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
3000க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள், தேவாலயங்களை குறிவைத்திருக்கிறார்கள். பாஜகவும், சங்பரிவாரும் மதச்சார்பற்ற ஜனநாயக நெறிமுறைகளை வளைத்து சர்வாதிகாரத்தை நிலைநாட்டி வருகின்றனர்.
எனவே நமது உரிமைகளை காக்க ஒன்றுசேர்வது அவசியமாகிறது. பாஜகவும், சங்பரிவாரும் இந்தியாவிற்கு, ஜனநாயகத்திற்கு, மதச்சார்பின்மைக்கு எதிரானது” என்று பேசினார்.
கலை.ரா
குளிர்கால கூட்டத்தொடர்: திமுகவின் கோரிக்கைகள் என்னென்ன?
தர்ம சங்கடப்படுத்தாதீர்கள்: அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம்!