ஒரே மாதத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மத்திய அரசில் உள்ள அனைத்து அமைச்சர்களையும் பிரதமர் மோடி தமிழகத்துக்கு அனுப்பி வைக்கவுள்ளார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னை, மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று (அக்டோபர் 16) நடைபெற்று வரும் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “மத்திய அரசில் உள்ள அனைத்து அமைச்சர்களையும் ஒரு மாதத்துக்குள் தமிழகத்துக்குச் சென்று மத்திய அரசின் பயனாளிகளைச் சந்திக்க வேண்டும். பயனாளிகளுக்கு ஏதேனும் குறை இருக்கிறதா பிரச்சினை இருக்கிறதா என கேட்டு வர வேண்டும் என இந்த 30 நாட்களுக்குள் 76 அமைச்சர்களை அனுப்புகிறார் பிரதமர் மோடி.
அடுத்த 20 நாட்களில் 50 அமைச்சர்கள் வர இருக்கிறார்கள். இவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகர தலைநகரங்களுக்கும் சென்று பார்வையிடுவார்கள்.
மத்திய அரசுத் திட்டம் எப்படிச் செயல்படுத்தப்படுகிறது? லஞ்சம் இல்லாமல் நேர்மையாகத் திட்ட உதவிகள் வழங்கப்படுகிறதா? என பார்வையிடுவார்கள்.
தமிழகத்தில் 75 இடத்தில் நடக்க இருக்கும் மத்திய அரசு நலத் திட்ட உதவிகளின் துவக்க விழாவை இன்று பியூஸ் கோயல் துவக்கி வைக்கிறார்.
ரூ.2 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடு, ரூ. 2 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு, ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு, தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார்.
ஒரே மாதத்தில் 76 அமைச்சர்களை இதுவரை அனுப்பியதற்கான வரலாறு இல்லை.
தற்போது கோவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி இருக்கிறார். பெரம்பலூர், அரியலூர் என அனைத்து பகுதிகளுக்கும் மத்திய அமைச்சர்கள் செல்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.
2024ஆம் ஆண்டு தேர்தலிலும் ஆட்சியைத் தக்கவைக்க மத்திய பாஜக முயன்று வரும் நிலையில், தமிழகத்துக்கு அடுத்தடுத்து அமைச்சர்கள் வருகை தருவார்கள் என்று அண்ணாமலை கூறியிருப்பது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பிரியா
காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் அதிமுக திட்டமல்ல: அமைச்சர் துரைமுருகன்
இன்னும் இரு மாதங்களில் பிகார் முதல்வர் மாற்றம்?