அரவக்குறிச்சி தேர்தலில் 30 கோடி செலவா? செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை பதில்!

அரசியல்

”அண்ணாமலை ஏதேனும் ஊழல் செய்தானா என்று காவல்துறை அதிகாரிகளை வைத்து விசாரணை நடத்திக் கொள்ளட்டும்”  என்று  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பதிலாக  தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘அதிமுகவுடன் கூட்டணி வைத்தால்  நான் மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்’ என்று 17 ஆம் தேதி நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார்.

இதுகுறித்து பிறகு விளக்கம் அளித்த அண்ணாமலை, “நான் சொன்னது எனது தனிப்பட்ட கருத்து. கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும். தேர்தலில் பணம் கொடுக்காத அரசியலை நடத்த வேண்டும். நான் கடந்த ஒன்பது வருடமாக காவல்துறையில் சிறுக சிறுக சேர்த்த பணமெல்லாம் அரவக்குறிச்சி தேர்தலில் செலவாகிவிட்டது.

இப்போது நான் கடனாளியாக இருக்கிறேன். தமிழ்நாட்டுக்கு இப்போது க்ளீன் பாலிடிக்ஸ்தான் தேவை. பணம் இல்லாத அரசியலைதான் நான் முன்னெடுப்பேன்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் மார்ச் 20 ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் குறித்து தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி,

“எனக்குத் தெரிந்து எட்டு ஒன்பது வருடத்தில் எந்த ஒரு  காவல்துறை அதிகாரியும் முப்பது கோடி ரூபாய் வரை  சம்பளம் வாங்கி சேர்த்திருக்க முடியாது. அரவக்குறிச்சி தேர்தலில் அவருடைய செலவு ரூ.30 கோடி என்று நினைக்கிறேன். அதிலும் அவரை மாதிரியே ஒரு எக்செல் ஷீட்டிலே சொந்த நிதி என்ற இடத்தில்  ’நில்’ என இருக்கிறது.

வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்தார். போலீஸ் ஆபீசராக இருந்து கர்நாடகாவில் சிறுக சிறுக சேர்த்த பணம். அவருக்கு யார் யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பது பற்றியெல்லாம்  தனியாக விவாதிப்போம்” என்றார்.

இந்த  பின்னணியில் இன்று (மார்ச் 23) சென்னை விமான  நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசினார் அண்ணாமலை.

“ஆட்சி, அதிகாரம் எல்லாம் உங்களிடம் உள்ளது. செல்போனை ஒட்டுக் கேட்கிறீர்கள்.  எழுபதாயிரம் போலீஸையும்  முழு அரசு அதிகாரிகளையும் அண்ணாமலை மீது ஏவி விடுங்கள். கர்நாடகாவில் ஒன்பதரை வருடத்தில் அண்ணாமலை ஒரு பைசா லஞ்சம் வாங்கியிருக்கிறான் என்று  ஒருவரை அழைத்து வந்து பிரஸ்மீட் பண்ணச் சொல்லுங்கள். அப்புறம் நான் பதில் சொல்கிறேன்.

அண்ணாமலை என்ற ஒரு மனிதனை எதிர்க்க இவ்வளவு பேரா? தமிழக வரலாற்றில் இதுதான் முதல் முறை. காரணம், அந்த மனிதன் ஏதோ சிஸ்டத்தை கலைக்கிறான் என்று அர்த்தம்.

காவல்துறையில் இரு ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து கர்நாடகாவுக்கு அனுப்புங்கள், என் ஊருக்கு அனுப்புங்கள்.  தமிழ்நாடு முழுதும்  பதிவுத் துறை அலுவலகங்களில்  அண்ணாமலை சொத்து வாங்கியிருக்கிறானா..  அண்ணாமலை பெயரிலோ, அண்ணாமலை ரத்த சொந்தங்கள் பெயரிலோ, அண்ணாமலை நண்பர்கள் பெயரிலோ சொத்து வாங்கியிருக்கிறானா என்று விசாரணை நடத்துங்கள்.  அரசும் அதிகாரமும் உங்களிடம் இருக்கும்போது நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்?” என்று கேட்டார்.

”ஆளுநரும் டெல்லி செல்கிறார், நீங்களும் டெல்லி செல்கிறீர்கள் என்ன பர்பஸ்?” என்ற கேள்விக்கு,  ‘ஆளுநரும் டெல்லி செல்கிறார் என்று நீங்கள் சொல்லிதான் எனக்குத் தெரிகிறது. நான்பாட்டுக்கு போகிறேன் அண்ணா’ என்று சொல்லிவிட்டு கிளம்பினார் அண்ணாமலை.

வேந்தன்

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை!

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: மீண்டும் தாக்கல் செய்த முதல்வர்

கிருஷ்ணகிரி ஆணவ கொலை: எடப்பாடி கவன ஈர்ப்பு தீர்மானம்!

30 crore spent on elections Annamalai
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *