பிடிஆர் காரின் மீது காலணி வீசிய விவகாரம் : 3 பெண்கள் கைது!

அரசியல்

தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணியை வீசியதாக பாஜக மகளிர் அணியை சேர்ந்த மூன்று பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு ஆகஸ்ட்13ஆம் தேதி பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்திவிட்டு திரும்பினார். அப்போது விமான நிலைய வளாகத்தில் திரண்டிருந்த பாஜகவினர் அவரது கார் மீது காலணியை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன் பாஜகவிற்கு கடும் கண்டனங்களும் எழுந்தன.

இந்தச் சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகளை கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை  காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

முதற்கட்டமாக  பாஜக மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் குமார், மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் பாலா உட்பட 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். 6 பேரையும் வரும் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் செருப்பு வீசிய பெண்ணையும், அவர்களின் கூட்டாளிகளையும் தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான தனிப்படையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருமங்கலம் அருகே வாகைகுளத்தில் பதுங்கியிருந்ததாக வந்த தகவலை அடுத்து விரைந்து சென்ற தனிப்படையினர் சரண்யா, தனலட்சுமி, தெய்வயானை ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

அவர்கள் மீது 4 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களில் தனலட்சுமி தான் அமைச்சரின் கார் மீது காலணியை வீசியவர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • க.சீனிவாசன்

மீண்டும் சர்ச்சை : கோபுரத்தின் மீது ஏறி கொடியேற்றிய பாஜகவினர்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *