பரந்தூரில் அமையவுள்ள புதிய விமானநிலையத்திற்கு இடம் தருவோருக்கு மும்மடங்கு இழப்பீடு, மாற்று இடம், வீடுகட்ட பணம் வழங்கப்படும்.
என்று நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதி அளித்துள்ளார். .
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு 12 கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள், எடுக்கப்படுவதால்
பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறி விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறுகுறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 26) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.
அப்போது அமைச்சர் வேலு, “அந்நிய செலாவணியை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தில் வளர முடியும் என்று கருதியே இதுபோன்ற திட்டங்களை அரசு கொண்டு வருவதாகக் கூறினார்.
2029க்கு பிறகு சென்னை மீனம்பாக்கம் விமானநிலையம் செயல்படாத நிலை இருக்கிறது. எனவே புதிய விமானநிலையம் அமைக்க 11 இடங்களை சுற்றிப்பார்க்கப்பட்டது.
அதில் பரந்தூர், பன்னூர், திருப்போரூர், படாளம் ஆகிய 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.
படாளம், திருப்போரூரும் கல்பாக்கம் அனல்மின் நிலையத்திற்கு அருகில் இருப்பதாலும் பன்னூரில் குடியிருப்பில் அதிகம் பாதிக்கப்படும் என்பதாலும்,
பரந்தூரில் விமானநிலையம் அமைப்பதென்று முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார்.
இதுதொடர்பாக மக்களிடம் கேட்டபோது தங்கள் நிலத்துக்கு அதிக இழப்பீடு வேண்டும் என்றும் வீடுகளுக்கு மாற்று வீடுகள் தரவேண்டும் என்றும் தான் மக்கள் தங்களிடம் தெரிவித்ததாக கூறிய அவர்,
விமானநிலையத்திற்கு இடம் தருபவர்களுக்கு இப்போதுள்ள மதீப்பிட்டில் 3.5 மடங்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று வீடுகளை இழப்பவர்களுக்கு புதிய இடமும் வீடு கட்ட பணமும் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
அரசை பொறுத்தவரை விவசாயிகளையோ, பொதுமக்களையோ வஞ்சிக்கும் நோக்கம் இல்லை, அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திராவை முந்தும் வகையில்,
அந்நிய செலாவணியை ஈட்டவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் சென்னைக்கு அருகே மற்றொரு விமானநிலையம் அவசியம் தேவைப்படுகிறது என்று அமைச்சர் வேலு கூறினார்.
கலை.ரா
அன்புமணியை தொடர்ந்து திருமாவளவன் : பரந்தூர் மக்களிடம் கருத்து கேட்பு!