அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் இன்று (மார்ச் 18) மூன்று வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.
அதன்படி இந்த தேர்தலில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
அதேவேளையில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.
அதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்க கோரி ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ”பொதுக்குழு தீர்மானம் எதிர்த்த வழக்கில் பதில் மனு தாக்கலுக்கு நேற்று அவகாசம் கேட்டுவிட்டு அன்று மாலையே பொதுசெயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டவிரோதமானது. இது நீதிமன்ற நடவடிக்கையை மீறும் செயல் மட்டுமின்றி, நீதிமன்ற கண்ணியத்துக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் செயல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ”பொதுக்குழு தீர்மானம் எதிர்த்த வழக்கு ஏற்கெனவே நிலுவையில் இருக்கும்போது, தற்போது பொதுசெயலாளர் தேர்தலுக்கு அவசரமாக அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் போட்டியிட விரும்புவோரை சட்டவிரோதமாக தடுத்துள்ளனர். எனவே அறிவிக்கப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா அனுமதி அளித்துள்ளார். இதனையடுத்து, வழக்கு நாளை காலை 10 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று பன்னீர் ஆதரவாளர்களான ஆர். வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோரும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்துள்ளனர்.
இதன் மூலம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா