விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வருகிற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்து விட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக டாக்டர் அபிநயா போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் ஜூன் 24ஆம் தேதி முதல் விக்கிரவாண்டியில் முகாமிட்டிருக்கும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், இடைத்தேர்தலுக்காக வித்தியாசமான வியூகங்களை அமைத்துள்ளார்.
ஜூன் 24ஆம் தேதி மாலை விக்கிரவாண்டி கும்பகோணம் சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்ட கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தினார் சீமான். இந்த கூட்டத்துக்கு பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
அந்தக் கூட்டத்தில் பேசிய சீமான், “கடந்த மக்களவைத் தேர்தலில் 35 லட்சத்திலிருந்து 36 லட்சம் வாக்குகளை நாம் பெற்றிருக்கிறோம். தனித்து நின்று யாருடைய தயவும் இல்லாமல் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளோம்.
அதுவும் கரும்பு விவசாயி சின்னத்தைப் மாற்றி கடைசி நேரத்தில் மைக் சின்னத்தைக் கொடுத்தார்கள். அதையும் கடந்து போராடி நாம் இந்த வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். இவ்வளவு நடந்தும் கரும்பு விவசாயி சின்னம் நம்முடையதுதான் என்று கருதி அதற்கு 85 ஆயிரம் பேர் வாக்களித்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலிலும் நமக்கு மைக் தான் கிடைக்கும்.
இனி நமக்கான வாய்ப்புகள் மிகவும் ஒளிமயமாக இருக்கின்றன. கடந்த மக்களவைத் தேர்தலில் நமது நிர்வாகிகள் இன்னமும் செம்மையாக வேலை பார்த்து இருந்தால் நாம் 50 லட்சம் வாக்குகளை கடந்திருப்போம்.
இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நாம் நமக்கான நல்வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிமுக இப்போது களத்தில் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சி கிட்டதட்ட தனித்து தான் இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியோடு அது கூட்டணி வைத்துள்ளது என்றாலும் இங்கே பாரதிய ஜனதா கட்சிக்கு எந்த பலமும் இல்லை.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி அதிகார பலன்களை பயன்படுத்தி வெற்றி பெற்றாலும் இரண்டாம் இடத்திற்கு நாம்தான் வர வேண்டும். நாம் தமிழர் கட்சி இரண்டாம் இடம் பெற்றால் அது மிகப் பெரிய வரலாற்று திருப்புமுனையாக அமையும்.
எனவேதான் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் ஒரு பட்டியலை சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளோம். திமுகவில் வாக்குச்சாவடிக்கு வாக்குச்சாவடி அமைச்சர்கள் பணியாற்றுகிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சியிலும் அவர்கள் கட்சி இருக்கிற மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் இங்கே வந்து வேலை பார்க்கிறார்கள்.
அதே பாணியை நாமும் இந்த முறை கையில் எடுத்து 234 தொகுதிகளில் இருந்தும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்ற வேண்டும். விக்கிரவாண்டி தொகுதியை 24 தேர்தல் தொகுதிகளாக பிரித்து கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் பணியாற்ற வேண்டும். அதற்கான பட்டியல் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நான் இனி இங்குதான் இருப்பேன். அவரவர் ஊரிலிருந்து கிளம்பி விக்கிரவாண்டிக்கு வந்து கிடைக்கும் இடத்தில் தங்கி, கிடைக்கும் உணவை சாப்பிட்டு நாம் தமிழர் கட்சிக்காக பணியாற்ற வேண்டும். அண்ணன் நான் பொதுக்கூட்டங்களிலும் வாகன பரப்புரையிலும் ஈடுபடுவேன். நீ என் பின்னாலேயே வந்து கொண்டிருக்க வேண்டாம்.
உனக்கு என்று கொடுக்கப்பட்ட வாக்குச்சாவடி இருக்கும் பகுதியில் தங்கிக் கொண்டு தினமும் இரண்டு முறை அந்த வாக்குச்சாவடியில் உள்ள மக்களை சென்று சந்தியுங்கள்.
பாமகவை பற்றி திட்ட வேண்டாம், திருமாவளவன் பற்றி திட்ட வேண்டாம், அதிமுக பற்றி திட்ட வேண்டாம், மதிமுக பற்றியும் திட்ட வேண்டாம், ஸ்டாலினை பற்றி மட்டும் திட்டுங்கள். இந்த ஆட்சியின் அவலத்தை எடுத்துச் சொல்லுங்கள்.
இங்கே திமுகவுக்கும் நமக்கும் இடையில் தான் போட்டி என்ற நிலையை பரப்புரை களத்தில் நாம் உருவாக்க வேண்டும். பொதுக்கூட்டம் வாகனப் பிரச்சாரத்தை விட திண்ணைப் பிரச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். வீடு வீடாக சென்று உட்காருங்கள். இந்த இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைய வேண்டும்” என்று அந்த கூட்டத்தில் உத்தரவிட்டிருக்கிறார் சீமான்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் கையிலெடுக்காத வியூகத்தை இப்போது கையிலெடுத்திருக்கிறார் சீமான்.
இந்த கலந்தாய்வு கூட்டத்துக்கு அடுத்த நாள் நேற்று ஜூன் 25ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், “நான் அதிமுகவுக்காகவும் வேலை செய்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சிக்காகவும் வேலை செய்திருக்கிறேன். அந்த கட்சி தொண்டர்கள் எங்களைத்தான் ஆதரிப்பார்கள்” என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக கலந்து கொள்ளாததை பயன்படுத்திக் கொண்டு இரண்டாம் இடத்தை பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் சீமான். அதற்காக தமிழ்நாடு முழுதிலும் இருந்தும் நாம் தமிழர் நிர்வாகிகள் விக்கிரவாண்டியை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள்.
-ஆரா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு!
கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட் : அப்பாவு உத்தரவு!