இரண்டாவது கட்டமாக இன்று (ஜூலை 3) நடைபெற உள்ள கல்வி விருது விழாவில் பங்கேற்பதற்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தற்போது நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்திற்கு வருகை தந்துள்ளார். அவர் இன்றும் உரையாற்ற இருப்பது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கடந்த 2023-24 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இதன் முதற்கட்ட விழா கடந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற்றது. அதில் தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இருந்து 127 தொகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு விஜய் விருது, பாராட்டு சான்றிதழுடன் ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்த நிலையில் சென்னை திருவான்மியூரில் இன்று 2வது கட்டமாக விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 107 தொகுதிகளில் இருந்து 642 மாணவ மாணவிகளுக்கு விஜய் விருது வழங்கவுள்ளார்.
மேலும் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 28 தொகுதிகளில் இருந்து 168 மாணவ மாணவியர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கி ஊக்கத் தொகை வழங்க உள்ளார்.
அதன்படி விழா நடைபெறும் அரங்கத்திற்கு தவெக தலைவர் விஜய் தற்போது வந்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற விழாவில் மாணவர்கள் மத்தியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய அவர், 2ஆம் கட்ட நிகழ்வில் தான் பேசப்போவதில்லை’ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக விஜய் இன்றும் உரையாற்ற உள்ளதாக தவெக நிர்வாகிகள் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த முறை படிப்பின் அவசியம், அரசியல் புரிதல், போதை பழக்கத்திற்கு எதிராக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசிய அவர், இன்று மாணவர்கள் மத்தியில் என்ன பேசப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னையில் தீக்கிரையான அரசு ஏ.சி பேருந்து: காரணம் என்ன… அரசு விளக்கம்!