கரூரில் புதிய விமான நிலையம் அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அமைச்சரிடம் வைக்கப்பட்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னையில் ‘கிரீன் பீல்டு’ விமான நிலையம் குறித்து விவாதிப்பதற்காக, அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஜூலை 26) புதுடெல்லி சென்று, அங்கு மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை சந்தித்துப் பேசினார்.
அதன்பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்து மத்திய அமைச்சரிடம் இன்று (ஜூலை 26) விவாதித்தோம். ஏற்கெனவே சென்னையைச் சுற்றி நான்கு இடங்களில் இந்த புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்து அளித்தோம். அதில் சென்னைக்கு தெற்கே உள்ள இரண்டு இடங்கள் பல்வேறு காரணங்களால் தகுதியாக இருக்காது என மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கரூரில் விமான நிலையம்
அதைத் தொடர்ந்து சென்னை ஸ்ரீபெரும்புதூர் பக்கத்தில் இருக்கக்கூடிய பரந்தூர், பன்னூர் ஆகிய இடங்கள் தேர்வுசெய்யப்பட்டு, அங்கு விமான நிலையம் அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறது என மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, அந்த இரண்டு இடங்களில் சைட் கிளியரன்ஸ் இருக்கிறதா என விவாதித்து வருகிறோம்.
இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்திய பிறகு முடிவெடுக்கப்படும். அடுத்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட விமான நிலையங்களில் விரிவாக்கப் பணிகள் குறித்து மத்திய அரசிடம் பேசியிருக்கிறோம்.
அதில் நிலம் எடுப்புப் பணிகள் குறித்து ஆலோசித்து இருக்கிறோம். குறிப்பாக, சென்னை விமான நிலையத்தில் maintanince and repair specalityக்கு இடம் ஒன்று தேவையாக இருக்கிறது. சிட்கோ நிறுவனம் மூலம் அதை தமிழக அரசுக்கு ஒதுக்கித் தரவேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.பி. ஜோதிமணி ஆகியோர் முதல்வர் ஸ்டாலினிடம், கரூரில் விமான நிலையம் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். நிச்சயமாக அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வரும் சொல்லியிருந்தார். இதையடுத்து, கரூரில் புதிய விமான நிலையம் அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் மத்திய அமைச்சரிடம் வைக்கப்பட்டது” என்றார்.
ஜெ.பிரகாஷ்