தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஏப்ரல் 18) புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை 2023-24 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் கீழ் 106 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், நல வாழ்வு மையங்கள், சித்தா, ஓமியோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேம்படுத்த மொத்தம் 917 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற நலவாழ்வு மையங்கள், கண், பல் மற்றும் சித்தா மருத்துவமனைகளில் உரிய நேரத்தில் முறையான சிகிச்சைகள் வழங்குவதற்கு ஏற்ப சிடிஐ, எம்.ஆர்.ஐ ஸ்கேன் அதிநவீன உயிர்காக்கும் உபகரணங்கள்ரூ. 298 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
தொற்று மற்றும் தொற்றா நோய்களுக்கான நோய் கண்டறியும் அடிப்படை மற்றும் சிறப்பு ஆய்வக பரிசோதனைகள் ஆகியவை அனைத்து நிலை மருத்துவமனைகளிலும் உணவு பகுப்பாய்வு பரிசோதனை மையங்களிலும் எளிய முறையில் கிடைத்திடும் வகையில் ஒருங்கிணைந்த ஆய்வக கட்டமைப்புகள் நுகர்பொருட்கள் மற்றும் ஆய்வக கருவிகள் என ரூபாய் 304 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
மகப்பேறு குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தை நலனுக்காகத் தீவிர சிகிச்சை பிரிவுகள், பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவுகள், அதிநவீன உயர்ரக உபகரணங்கள் மற்றும் இல்லங்களில் இளம் குழந்தைகள் பராமரிப்பு சேவை என 43 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் தாய் சேய் நல சேவைகள் மாநில அளவில் மேம்படுத்தப்பட உள்ளது.
ஈரோடு, திருப்பத்தூர், கன்னியாகுமரி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் 3 கோடியே 31 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.
நகராட்சி மற்றும் மாநகராட்சியில் பணிபுரியும் 60,583 தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்கள் நகர்புற நலவாழ்வு மையங்களில் நடத்தப்படுவதுடன், ஒவ்வொரு தூய்மை பணியாளருக்கும் வருடத்திற்கு ஒரு முறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும்.
மேலும் தூய்மை பணியாளர்களின் நலனுக்காக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் தனி அறை அமைத்து தரப்படும்.
மாரடைப்பு ஏற்பட அதிக சாத்தியங்கள் இருக்கக் கூடிய நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மாரடைப்பு அறிகுறிகள் ஏற்படும் சூழ்நிலைகளில் உயிர்காக்கும் இருதய பாதுகாப்பு மருந்துகள் 3 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும். இது அனைத்து ஆரம்ப சுகாதார மற்றும் துணை சுகாதார நிலையங்களில் கையிருப்பு இருப்பதை உறுதி செய்யப்படும்.
மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த 4,133 காலி பணியிடங்களுக்கு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.
செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்பினை கண்காணிக்க 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தலா 2 சிசிடிவி கேமரா 10 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் பொருத்தப்படும்.
பன்னாட்டு மருத்துவ மாநாடு ஒன்று நடத்தப்படும். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை ஆராய்ச்சி பணியை ஊக்குவிக்கும் வகையில் நடப்பாண்டு பொதுச்சுகாதார மாநாட்டின் போது 100 திறனாய்வு கட்டுரைகள் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
38 மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து ”health walk road” என்ற பெயரில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைப்பயிற்சி செய்வதற்கான நடைபாதை உருவாக்கப்படும். ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மக்களுக்கு நடைப்பயிற்சி அளிக்க வேண்டும்” என்று அறிவித்தார்.
மோனிஷா
சித்தா பல்கலை மசோதா: இரண்டாம் முறையும் திருப்பி அனுப்பிய ஆளுநர்
’குலசாமி’ இசை வெளியீட்டு விழா…கலந்துகொள்ளாத விமல்…வருத்தம் தெரிவித்த அமீர்