விஜய் தலைமையில் இன்று (நவம்பர் 3) நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தவெக கட்சியின் முதல் மாநாட்டை தொடர்ந்து பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உயர்மட்ட தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து 26 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
அவை பின் வருமாறு :-
1. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், கொள்கைத் தலைவர்களை உறுதியாகப் பின்பற்றும் தீர்மானம் நிறைவேற்றம்.
2. கொள்கைத் திருவிழா மாநாட்டை மாபெரும் வெற்றி பெற வைத்த கழக நிர்வாகிகளுக்கும், பந்தல் வடிவமைப்பாளர் ஜே.பி.விஸ்வநாதனுக்கும், மாநில மாநாடு நடத்த நிலம் வழங்கிய விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்.
3. தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களுக்குமான ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும் எப்போதும் போற்றிப் பாதுகாக்கும் வகையில் மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் பற்றிய விளக்கத் தீர்மானம் நிறைவேற்றம்.
4. ஒரே நாடு; ஒரே தேர்தல் என்ற அறிவிப்பும், அதைச் சட்டமாக்குதலுக்கும் முனையும் பாஜக அரசிற்கு எதிராக ஐனநாயகக் கொள்கை தீர்மானம் நிறைவேற்றம்.
5. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் உச்சபட்ச தண்டனை வழங்க ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் பெண்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம் நிறைவேற்றம்.
6. உண்மையான சமூக நீதியை நிலை நாட்டிட, தமிழக அரசு முதலில் உடனடியாகச் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அச்சாரமிடும் ஆய்வைக் காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக நீதிக் கொள்கை தீர்மானம் நிறைவேற்றம்.
7. மருத்துவம் போலவே கல்வியும் மாநிலப் பட்டியலுக்கே உரிமையானது. அதன்படி, எங்கள் உரிமையை ஒன்றிய அரசு எங்களுக்கே திரும்ப வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் நீட் தேர்வை மாநில அரசே நீக்கிவிட்டு, எங்கள் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற இயலும் என்பதை வலியுறுத்தி மாநிலத் தன்னாட்சி உரிமைக் கொள்கை தீர்மானம் நிறைவேற்றம்.
8. விவசாயம் மற்றும் விவசாய நிலங்களின் பாதுகாப்பை, ஒரு கொள்கையாகவே முன்னெடுக்கும் தமிழக வெற்றிக் கழகம், தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சட்டரீதியாகப் போராடவும் தயங்காது என்பதை வலியுறுத்தி விவசாய நிலங்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம் நிறைவேற்றம்.
9. தொழில் நகரமான கோவைக்கு வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைந்து தொடங்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றம்.
10. ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வைக் கொண்டுவர, பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும், ஈழத் தமிழர்கள் மற்றும் இலங்கை அரசால் சிறைப்படிக்கப்பட்டு, தாக்கப்படும் தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்மானம் நிறைவேற்றம்.
11. மொழி உரிமையே எங்கள் தமிழ்த் திருநாட்டின் முதல் உரிமை என்ற எங்கள் கொள்கைப்படி, எங்கள் தாய்மொழி காக்கும் எல்லா முயற்சிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சமரசமின்றிச் செயல்படும். தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக, மூன்றாவது மொழியைத் திணிக்க முயலும் ஒன்றிய அரசுக்கு எதிராக மொழிக் கொள்கை தீர்மானம் நிறைவேற்றம்.
12. அரசின் வருவாயைப் பெருக்க எந்த ஓர் அறிவார்ந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல், மின் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்று பொதுமக்கள் மீது மேலும் மேலும் வரிச் சுமையை மட்டுமே அதிகமாக விதித்து வரும் திமுக அரசுக்கு எதிராக மக்கள் மீது நிதிச் சுமைத் திணிப்பு சார்ந்த தீர்மானம் நிறைவேற்றம்.
13. அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில், தொடரும் கள்ளச் சாராய விற்பனை, போதைப் பொருட்களின் பழக்கம் போன்ற நிர்வாகச் சீர்கேடுகளைச் சரிசெய்யாமல், ஆளும் திமுக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து சட்டம் – ஒழுங்கு சீர்கேடு சார்ந்த தீர்மானம் நிறைவேற்றம்.
14. தேர்தல் வாக்குறுதியை வழக்கம்போலக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, ஏழை, நடுத்தர மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத மின்கட்டண உயர்வைத் திணித்துள்ள தமிழக அரசு, இரு மாதத்திற்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறையைக் கைவிட்டு, மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கத் தீர்மானம் நிறைவேற்றம்.
15. மகளிர் உரிமைத் தொகை, பரிசுத் தொகுப்பு என்று ஒரு புறம் அறிவித்துவிட்டு, மறுபுறம் மதுக்கடைகளைத் திறந்து, அதன் மூலம் அரசுக்கு வருவாயைப் பெருக்கி வருவது ஏற்புடையதல்ல. சமூகக் குற்றங்கள், சமூகப் பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக விளங்கும் மதுக்கடைகளைக் கால நிர்ணயம் செய்து மூட வலியுறுத்தும் கொள்கை தீர்மானம் நிறைவேற்றம்.
16. தென்னிந்தியாவிற்கான உரிய பிரதிநிதித்துவம் வழங்குகின்ற வகையில், உச்ச நீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைக்கவும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நீதிபதி ஒருவரை நியமித்து சட்டரீதியாக ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் உச்ச நீதிமன்றக் கிளையை அமைக்க தீர்மானம் நிறைவேற்றம்.
17. தமிழ் மண்ணின் மூவேந்தர்களான சேரர், சோழர், பாண்டியர் ஆட்சியின் வரலாற்றுப் பெருமைகளை உலகுக்குப் பறைசாற்றும் வகையில், பிரமாண்டமான அருங்காட்சியகத்தை தமிழத அரசு சென்னையில் கட்ட வேண்டும் என்று தமிழ்நாட்டின் தொன்மப் பெருமைப் பாதுகாப்புத் தீர்மானம் நிறைவேற்றம்.
18. தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்ட தலைவர்களை, எவ்விதச் சமரசமும் இன்றிப் போற்றுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கோரி விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்குப் பெருமை சேர்க்க வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றம்.
19. இஸ்லாமிய சகோதரிகளின் தமிழ்த் தொண்டை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமிய சகோதரி ஒருவருக்கு அரசு சார்பில் விருதும் பணமுடிப்பும் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் அரசு விருது வழங்க வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றம்.
20. தமிழ்நாட்டில் முதியோர் நலனை உறுதி செய்யும் கொள்கை வரைவை உருவாக்கி நிதி ஒதுக்கீடு செய்து, சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கோரி முதியோர் நல்வாழ்வை உறுதி செய்யத் தீர்மானம் நிறைவேற்றம்.
21. இயற்கைத் தாயின் செல்லப் பிள்ளையான கன்னியாகுமரிப் பகுதியில் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயல்கிறது. தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் இந்த இன்னொரு முயற்சி உடனடியாகக் கைவிடவேண்டும் என்று இயற்கை வளப் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம் நிறைவேற்றம்.
22. நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசால் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா இஸ்லாமிய சமூகத்தின் உரிமைகளைப் பறிப்பதாக இருக்கின்றது என்று கூறி எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கூட்டாட்சி அமைப்பிற்கு எதிரான தாக்குதலாக இருக்கின்ற வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இஸ்லாமியர் உரிமைத் தீர்மானம் நிறைவேற்றம்.
23. நீட் தேர்வால் தமிழ்நாட்டில் இருக்கும் மாணவ மாணவிகள், குறிப்பாக, கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினைச் சேர்ந்த மாணவ – மாணவிகள் அனைவருமே மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வு விலக்குப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண, கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கோரி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றம்.
24. ஆளும் அரசுகள் மேற்கொள்ளும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை ஆதரித்து வரவேற்பதையும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாகக் கருதுகிறோம். தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்திடும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்குகிறது. இதனை பாராட்டும் வகையில் தகைசால் தமிழர் விருது வழங்கும் அரசை வரவேற்கும் தீர்மானம் நிறைவேற்றம்.
25. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் சுமார் 2,376 எக்கர் நிலப் பரப்பளவில் அமைக்க உள்ளது. பெரும் வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்தை வரவேற்கும் தீர்மானம் நிறைவேற்றம்.
26. நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மீது தீராப் பற்றுடன், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த போராளிகள் சிலர் அண்மையில் மறைந்த நிகழ்வுகள், அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றன. இயக்கத்திற்காகவும் கழகத்திற்காகவும் நீண்ட காலமாகப் பணியாற்றி, உடல்நலக் குறைவால் திடீரெனக் காலமான புதுச்சேரி மாநில நிர்வாகி சரவணன் மற்றும் மாநாட்டில் பங்கேற்க வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த சீனிவாசன், விஜய்கலை, வசந்தகுமார், ரியாஸ், உதயகுமார் மற்றும் சார்லஸ் ஆகியோர் மறைவை கட்சி வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் : பெண் கைது!
திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர வாய்ப்பு! – கலெக்டர் அறிவிப்பு!
ஈழத்துக்கான பொது வாக்கு எடுப்பு உங்க சங்கீதா குந்தியல நடத்த முடியுமா புரோ?
துரிக்கிய கும்பலுக்கு எதுக்கு இந்த ஊத்த தீர்மானம்? எவனாவது விழிக்க சொன்னானா! புரோ?? லவடைகாபால்..