வருகிற சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தொடர்ந்து சொல்லி வருகிறார்.
அதேநேரம் 234 தொகுதிகளுக்கும் தலா ஒரு கோடி வீதம் 234 கோடிகள் தேர்தல் நிதி திரட்டும் திட்டத்தில் திமுக இறங்கி தீவிர வசூல் நடத்தி வருகிறது என்கிறார்கள் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள்.
வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி திமுகவின் தலைமை செயற்குழுக் கூட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இக்கூட்டத்தில்,’கழக ஆக்கப் பணிகள்’ பற்றி விவாதிக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மாசெக்கள் மாற்றம், 3 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று கட்சியை மறு சீரமைப்பு செய்தல் போன்றவை பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று கட்சிக்குள் ஒரு பேச்சிருக்கிறது.
அதேநேரம், ‘திமுக தலைமை சில வாரங்களுக்கு முன் கொடுத்த முக்கியமான ஒரு அசைன்மென்ட்டை இன்னும் சில மாவட்டங்களில் முழுமையாக முடிக்கவில்லை. அதுபற்றியும் முக்கியமாக விவாதிக்கப்படும்’ என்கிறார்கள்.
அந்த முக்கியமான அசைன்மென்ட் தேர்தல் வசூல்தான்.
”திமுக தலைமை ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் இரு வாரங்களுக்கு முன் முக்கியமான உத்தரவிட்டது. அதாவது ஒவ்வொரு மாசெ.வும் தங்களது மாவட்டத்துக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் இருந்தும் ஒரு கோடி ரூபாய் தேர்தல் நிதியாக திரட்ட வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. 234 தொகுதிகளுக்கும் ஒரு கோடி ரூபாய் என 234 கோடி ரூபாய் திரட்ட வேண்டும்.
மாசெ.வுக்கு நான்கு சட்டமன்றத் தொகுதி இருந்தால் நான்கு கோடி ரூபாய் திரட்டித் தர வேண்டும், மூன்று சட்டமன்றத் தொகுதிகள் இருந்தால் 3 கோடி ரூபாய் திரட்டித் தர வேண்டும்.
ஒவ்வொரு மாவட்ட திமுகவுக்கும் மாவட்டச் செயலாளர், மாவட்டப் பொருளாளர் இணைந்த ஜாயின்ட் அக்கவுன்ட் இருக்கிறது. அந்த வங்கிக் கணக்கில்தான் இப்படி திரட்டப்படும் நிதியை டெபாசிட் செய்ய வேண்டும்,
ஒரு நபரிடம் இருந்து அதிகபட்சம் 2 ஆயிரம் ரூபாய்தான் நன்கொடையாக வாங்க வேண்டும். அதற்கு மேல் வாங்கக் கூடாது. ஒவ்வொரு நாளும் எவ்வளவு வசூலாகிறதோ, அதை அன்றன்றே மாவட்ட திமுகவின் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு, அந்த விவரங்களை தலைமைக்கு அனுப்ப வேண்டும்.
மேலும், ரசீது அடிக்கட்டுகளை அறிவாலயத்தில் ஒப்படைக்க வேண்டும். 2000 ரூபாய் கொடுத்தவரின் பெயர், கையெழுத்து, அவரது செல் நம்பர் ஆகியவை அடிக்கட்டில் இடம்பெற வேண்டும் என்று விதிமுறைகளை வகுத்துள்ளது திமுக தலைமை.
இதையடுத்து கடந்த இரு வாரங்களாக மாவட்டச் செயலாளார்கள் இந்த வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இதற்காக ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் என அனைத்து நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளரால் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
இந்த அசைன்மென்ட்டுக்கு தலைமை கொடுத்த காலக்கெடு வரும் டிசம்பர் 31 ஆம் தேதியோடு முடிகிறது. எனவே தலைமைச் செயற்குழு கூட்டத்தில் இந்த விவகாரமும் விவாதிக்கப்படும். எத்தனை மாவட்டச் செயலாளர்கள் டார்கெட் அச்சீவ் செய்திருக்கிறார்கள், யார் யார் இன்னும் டார்க்கெட்டை தொடவில்லை என்ற பேச்சுதான் இப்போது மாசெக்கள் மத்தியில் பேச்சாக இருக்கிறது” என்கிறார்கள்.
–வேந்தன்
ஈரோட்டில் ஸ்டாலின்: இடைத் தேர்தல் பற்றி முக்கிய முடிவு!
‘சக எம்பிக்கள் மண்டையை உடைக்கத்தான் குங்ஃபூ படிச்சாரா? : ராகுல் மீது கிரண் ரிஜிஜூ விமர்சனம்!
Comments are closed.