2025 பொங்கல் பரிசு தொகுப்பு… மீண்டும் பணப்பரிசு மிஸ்ஸிங் – பொதுமக்கள் ஏமாற்றம்!

Published On:

| By christopher

பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு இன்று (டிசம்பர் 28) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும்.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணப்பரிசு இல்லை!

எனினும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் பணப்பரிசு வழங்குவது தொடர்பான அறிவிப்பு எதுவும் இடம்பெறாதது பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக 2500 ரூபாய், அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்த பிறகு 2022 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு போன்ற 21 பொருட்கள் இடம்பெற்றன. அப்போது பணப்பரிசு வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், 2023ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டும் ரொக்க பரிசு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகாதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

கிறிஸ்டோபர் ஜெமா

INDvsAUS : சர்வதேச அரங்கில் முதல் சதம் கண்ட நிதிஷ் குமார்… மயிரிழையில் மிஸ் ஆன சச்சின் சாதனை!

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு தினமும் 10 முட்டை கொடுத்தாரா ஞானசேகர்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share