“2024ல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களையும் அதிமுக கூட்டணிதான் வெல்லும்” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை பழங்காநத்தத்தில் உள்ள சோமசுந்தரம் பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை இன்று (ஆகஸ்ட் 26) நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார். இந்த நிகழ்வுக்கு பின் நிருபர்களிடம் பேசிய அவர்,
“மதுரை மேயர் நிதியமைச்சரின் நிழலாகச் செயல்படுகிறார். மதுரை மாநகராட்சியில் எந்தவொரு பணியும் செயல்படுத்தப்படவில்லை.
மாநகராட்சி இயங்குகிறதா என்பதே தெரியவில்லை. செயல்படாத அரசாக உள்ள திமுக அரசு, ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒன்றும், எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்றும் பேசி வருகிறது.
எல்லாக் காலத்திலேயும் பிற அரசியல் கட்சித் தலைவர்களை தரம் தாழ்த்திப் பேசும் அரசியல்வாதிகள் உண்டு.
தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்காக, விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக பல தலைவர்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவதும் பழகிய தலைவர்களையே தரம் தாழ்த்திப் பேசுவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் அவர்கள் யாரும் அரசியலில் நீடித்தது இல்லை.
நான், சிறுவயது முதல் இந்தக் கட்சியில் இருக்கிறேன். ஆக, நான் பார்த்தது வரை தலைவர்களை தரம் தாழ்த்தி பேசும் எவரும் அரசியலில் நீடித்தது இல்லை.
சமூக வலைதளங்கள் அதிமுகவைப் பற்றி எப்படிச் சொன்னாலும் 2026ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அமரும். அதுவும், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெறும்.
அதுமட்டுமல்ல, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மோசமான முடிவை மக்கள் புகட்டுவார்கள். 2024ல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களையும் அதிமுக கூட்டணிதான் வெல்லும்.
அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதற்குக் காரணம், மக்களுடைய நாடித்துடிப்பை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அதிமுக வீறுகொண்டு நடைபோடுகிறது. நீதிமன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும் கவலையில்லை.
அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகியும் மக்கள் அதிமுக செய்த சாதனைகளைத்தான் பேசுகின்றனர்.
திமுக அரசு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். முதல்வர் விளம்பரம் தேடாமல் மக்களுக்காகச் சிந்தித்து திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
இடையில் தலைவர்கள் கட்சி மாறுவது சகஜம். பின்னர், எல்லாம் சரியாகிவிடும். ஆகையால், தலைவர்கள் கட்சி மாறுவது குறித்து எங்களுக்குக் கவலையில்லை” என்றார்.
ஜெ.பிரகாஷ்
டிஜிட்டல் திண்ணை: அதிமுக அரசியலில் ரஜினி? வெளிவராத புதிய ரகசியங்கள்!