நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டு வருகின்றன.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதை தொடர்ந்து இரண்டு கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் ஈடுபட்டு வந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி இதற்கு சம்மதிக்கவில்லை.
இந்தநிலையில், தமாகா தலைவர் ஜிகே வாசன் நாளை (பிப்ரவரி 26) செய்தியாளர்களை சந்தித்து பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து அறிவிக்க இருக்கிறார் என்று பாஜக கூட்டணியில் தமாகா அறிவிக்க தயாராகும் ஜி.கே.வாசன் என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் நேற்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்
இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தலை சந்திக்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று (பிப்ரவரி 26) தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “நேற்று மாலை பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்து என்னை சந்தித்தார். சுமார் 30 நிமிடங்கள் தமிழக அரசியல் நிலவரம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசினோம்.
நாளை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நேரில் அழைப்பு விடுத்தார். நேற்று காலை பாஜகவில் இருந்து மேலிட தலைவர்களும் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறேன். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து தமிழ் மாநில காங்கிரஸ் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வாட்ஸ்அப் வெப் யூசர்களுக்கு புதிய அப்டேட்!
நீலகிரி: மகளிருக்காக 99 கட்டணமில்லா பேருந்துகள் இயக்கம்!