ideological war in Indian Politics

தேர்தலில் மக்களின் ஈடுபாடு: கருத்தியல் யுத்தமா? வாழ்வாதார பிரச்சினைகளா?

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை ideological war in Indian Politics

இந்திய அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்குக் கூர்மையானதொரு கருத்தியல் யுத்தமாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் அமைந்துள்ளது. இரண்டு அணிகள். NDA என்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி. INDIA என்ற காங்கிரஸ் முக்கிய பங்கேற்கும் இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கக் கூட்டணி.

இரண்டு அணிகளிலுமே பல முக்கிய கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு விட்டன. காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு முக்கிய தேசிய கட்சிகளும் அறிக்கைகளை வெளியிட்டு விட்டன. அவற்றிலிருந்து நாம் கருத்தியல் வேறுபாட்டை கீழ்கண்டவாறு புரிந்து கொள்ளலாம்.

NDA என்பதன் கருத்தியல்: பெருமுதலீட்டிய வளர்ச்சி, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகள், பார்ப்பனீய-இந்துத்துவ தேசிய கலாச்சார ஆதிக்கம், ஒன்றிய அரசை ஒற்றை தேசிய அரசாக மாற்றி அதிகாரத்தை ஒரே புள்ளியில் குவிப்பது. அதற்கு ஏற்றாற்போல இவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள முக்கியமான கருத்தியல் சார்ந்த முடிவுகள் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது போன்றவை.

INDIA என்பதன் கருத்தியல்: அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, மக்கள் நலன் நோக்கு, ஏழ்மை ஒழிப்பு, பன்மைத்துவ கலாசாரம், மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், கூட்டாட்சி அதிகாரப் பகிர்வு, மாநில உரிமைகளைப் பாதுகாத்தல். அதற்கு ஏற்றாற்போல அவர்கள் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் சமூக நீதி, பொருளாதார நீதி, கூட்டாட்சி நீதி சார்ந்தவை.

காங்கிரஸின், இந்தியா கூட்டணி கட்சிகளின் கருத்தியல் பரந்துபட்ட மக்கள் நலன் சார்ந்ததாகவும், முற்போக்கானதாகவும் இருந்தாலும் ஊடகங்கள், குறிப்பாக வட நாட்டு, ஆங்கில மொழி ஊடகங்கள் பாஜக-வே வெற்றி பெறும் என்றும், பிரதமர் மோடியை பெரும்பாலோனார் பிரதமராகத் தொடர விரும்புகின்றனர் என்றும் கருத்துக்கணிப்பு மற்றும் கருத்துத்திணிப்புகளை தொடக்கம் முதலே வெளியிட்டு வருகின்றன.

இந்தக் கணிப்பு-திணிப்புகளில் என்ன பிரச்சினையென்றால் கருத்தியல் சார்ந்த விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பதுதான். தேர்தலின் முடிவுகள் குறித்து ஆருடம் சொல்கிறார்களே தவிர, இரண்டு அணிகளில் எதன் கருத்தியல் நோக்கு நாட்டுக்கு நல்லது என்பதை விவாதிப்பதில்லை.

மக்களுக்கு கருத்தியலில் அக்கறையில்லையாம்!

தேர்தல்கள் குறித்த விவாதங்கள் பலவற்றில் ஒரு கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது. அது என்னவென்றால் சாமானிய மக்களுக்கு அவர்கள் வாழ்வாதாரப் பிரச்சினைகள்தான் முக்கியமானவை. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகள்தான் மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அதனால் ஏழை எளியவர்களுக்கு இந்துத்துவமா, மத சார்பின்மையா, பார்ப்பனீயமா, சமூக நீதியா, ஒன்றிய அரசின் மேலாதிக்கமா, கூட்டாட்சி தத்துவமா, ஒற்றை பண்பாட்டு தேசியமா, மாநில உரிமைகளா என்பதிலெல்லாம் அக்கறை கிடையாது.அவர்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சினைகள்தான் முக்கியம். குடிநீர், சுகாதாரம், உணவு, உடை, வசிப்பிடம் என்பதெல்லாம் முக்கிய பிரச்சினைகள் என்ற கருத்து பரவலாக இருக்கிறது.

மேலும், கருத்துச் சுதந்திரம் இருக்கிறதா, ஊடகங்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றனவா, சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு ஆளும் கட்சி பதில் அளிக்கிறதா, பிரதமர் பத்திரிகையாளர்களை சந்திக்கிறாரா  என்பதெல்லாம் எளிய மக்களின் அக்கறைகளுக்கு அப்பாற்பட்டவை என்றும் அறிவுஜீவிகளால் கூறப்படுகிறது.இதெல்லாம் உண்மை என்றே எடுத்துக்கொள்வோம். ஆமாம், ஏழைகளுக்கு, தினக்கூலி தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம்தான் முக்கியப் பிரச்சினை. அவர்களில் பெரும்பாலோருக்கு கருத்தியல் சிந்தனைகளை படித்தறிய, விவாதிக்க வாய்ப்போ, நேரமோ இல்லை என்பது உண்மைதான்.

ஆனால், இங்கேதான் முக்கியமான ஒரு கேள்வி எழுகிறது. சமூகத்தில் அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரது வேலை என்ன? அது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கும், கருத்தியலுக்கும் உள்ள தொடர்பை மக்களிடம் எடுத்துக் கூறுவதுதானே? அந்தப் பணியை அவர்கள் செய்கிறார்களா, இல்லையா என்பதை பொறுத்துத்தானே மக்களாட்சி தழைக்கும்?

மக்களுக்கு வாழ்வாதாரம்தான் பிரச்சினை என்பதால்  பார்ப்பனீயச் சொல்வடை சொல்வதுபோல அவர்களுக்கு “ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்” ஒன்றுதான் என்றால், நாம் எதற்காக தேர்தல்களையும், மக்களாட்சியையும் நம்ப வேண்டும்? எதற்காக கல்விக்கூடங்கள், ஊடக அலசல்கள், அரசியல் கட்சி பிரசாரங்கள்? எதற்காக தொழிற்சங்கங்கள், விவசாயிகளின் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், மாதர் சங்க அமைப்புகள்?  

இதைத்தான் அறிஞர் அண்ணா பணத்தோட்டம் நூலிலே அழகாக எடுத்துக் கூறுகிறார்.“வயலோரத்திலே இருப்பவனுக்கு தான் திராவிடன் என்று தெரியாது; ஏழை என்பது தெரியும்.நமக்கோ இரண்டும் தெரியும்.

ஆலையிலே உள்ளவனுக்கு ஆரிய-திராவிட பிரச்சினை அர்த்தமற்ற கூச்சலாகவே தெரியும். அவனுக்கு தன் அன்றாடக் கஷ்டம்தான் தெரியும். நமக்கோ அந்த இரண்டும் தெரியும்.

அவர்கள் நம்மை மறப்பது ஆச்சர்யமல்ல. நாம் அவர்களை மறப்பது மன்னிக்க முடியாத குற்றம். நம்மை அவர்கள் அறியார்கள்! நாம் அவர்களை அறிவோம்! அறிவதால் அவர்களுக்குப் பணிபுரிவோம்!”

பணிபுரிவதென்றால் என்ன? அவர்கள் போராட்டங்களில் பங்கேற்பது, அவர்களிடமும் கருத்தியல் சிந்தனையை உருவாக்குவது. கருத்தியல் தெளிவில்லாமல் வாழ்வாதாரப் பிரச்சினையை தீர்ப்பதெப்படி என்பதே கேள்வி. இதைப் புரிந்துகொள்ள இரண்டு காணொலிகளை விவாதிப்போம்.

கருத்தியல் தீர்மானிப்பதே வாழ்வாதாரம்!

நான் பார்த்த ஒரு காணொலியில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராஜா அவர்களிடம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கொடுப்பதைக் குறித்து கேட்கிறார்கள். அவர் அதற்கு எளிமையாக பதில் சொல்கிறார்.

இயற்கை வளங்கள் என்பவை, அதாவது நிலம், நீர், காற்று உள்ளிட்ட அனைத்தும் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானவை. ஆனால், மனித சமூகத்தில் சிலர் அதிக சொத்துகளைக் குவித்துக்கொண்டு, அதிக வருமானத்தை ஈட்டிக்கொண்டு இருக்கும் ஒரு பொருளாதார அமைப்பை உருவாக்கியுள்ளோம். அதனால் அரசு அவர்களுக்கு வரி விதித்து, அந்த வரியினை ஏழை மக்களுக்கு உதவ பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். இதுதான் சோஷலிச கருத்தியல். இதை மக்களுக்கு எடுத்துக் கூறுவது கடினமா என்ன?

இன்னொரு காணொலியில் பர்க்கா தத் என்ற ஊடகவியலாளர் CSDS-Lokniti என்ற அமைப்பை சேர்ந்த பேராசிரியரிடம் உரையாடுகிறார். அந்த அமைப்பு மக்களிடையே விரிவாக கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது. அந்தப் பேராசிரியர் எளிய மக்களுக்கு வேலை இல்லாமை, விலைவாசி ஏற்றம் ஆகியவைதான் பிரச்சினை. எதிர்க்கட்சிகள் அதைப் புரிந்துகொண்டு பேசுவதில்லை என்கின்றார்.

இது போன்ற ஆங்கில உரையாடல்களில் இந்த மேட்டுக்குடியினர் மொத்த பொறுப்பையும் எதிர்க்கட்சிகள் மீது சுமத்துவதும், பழி போடுவதும் வியப்பிற்குரியது. இவர்களுக்குத் தெரியும் பாஜக கார்ப்பரேட்களுக்கு எவ்வளவு வரிச்சலுகை அளிக்கிறது, வாராக்கடன்களை தள்ளுபடி செய்கிறது என்று. அவற்றை தவிர்த்து பெட்ரோல் மீதான வரியை குறைத்தால் விலைவாசி குறையும் என்று. இதை எதிர்க்கட்சிகள் கூறினால் அவர்கள் மக்களுக்குப் புரியாத கருத்தியலை பேசுவதாகக் கூறுகிறார்கள்.

சமூக நீதி குறித்து மக்களுக்கு அக்கறையில்லையா?

தேர்தலுக்கு பல மாதங்கள் முன்பிருந்தே இந்தியா கூட்டணி கட்சிகள் ஒரு முக்கியமான அம்சத்தை வலியுறுத்தி வருகின்றன. அது என்னவென்றால், ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு. பாஜக அரசு 2021-ம் எடுக்கப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பையே எடுக்கவில்லை. அதை எடுப்பதுடன், அதில் ஜாதிகளையும், பொருளாதார சூழலையும் சேர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

எதனால் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்றால், எழுபதாண்டு காலமாகியும் நமது குடியரசில் செல்வாக்கு மிக்க பதவிகளில் ஆதிக்க ஜாதியினரே பெருமளவில் உள்ளனர் என்பதுதான். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதியினர் அரசியல் பிரதிநிதித்துவத்தில் இடம் பெற்றாலும், கல்வி, திறன்கள் பெறுவதிலும், சமூகத்தில் அதிகாரமிக்க தொழில்களில், பதவிகளில் இடம் பெறுவதும் மிகவும் குறைவாகவே இருக்கிறது.

உதாரணமாக ஒன்றிய அரசுத் துறைகளை நிர்வகிக்கும் செயலர்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்று சதவிகிதம் பேரே உள்ளனர் என்பதை ராகுல் காந்தி சுட்டிக் காட்டியுள்ளார். இது எதைக் காட்டுகின்றது என்றால் பழைய வர்ண தர்ம சிந்தனை உருவாக்கிய படிநிலை அமைப்பு பல்வேறு நுட்பமான வகைகளில் இன்றும் தொடர்கிறது என்பதைத்தான். இதனை எப்படி மாற்றியமைப்பது என்பதை சிந்திக்கத்தான் விரிவான தரவுகளை உள்ளடக்கிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவைப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் இட ஒதுக்கீட்டுக்கான அதிக பட்ச வரம்பு 50% என்பதை தேவைக்கேற்ப உயர்த்த வேண்டும் என்றும் கூறுகின்றன.

பாஜக இந்த முக்கியமான பிரச்சினையில் எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை. அவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பை செய்ய விரும்பவில்லை என்பது தெளிவானது. அதேபோல இட ஒதுக்கீட்டு வரம்பை உயர்த்துவதிலும் அவர்களுக்கு நாட்டம் கிடையாது. பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான இட ஒதுக்கீட்டை, முன்னேறிய வகுப்பினருக்கு மட்டுமானது என்று வரையறுத்தது பாஜக அரசு. ஆனால், காங்கிரஸ் அதை அனைத்து வகுப்பினருக்குமானதாக மாற்ற உறுதியளித்துள்ளது.

இந்த சமூக நீதி அம்சங்களைக் குறித்து CSDS-Lokniti கருத்துக்கணிப்பில் எதுவும் கேட்கப்பட்டதாகவே தெரியவில்லை. இப்போதுள்ள இட ஒதுக்கீட்டு விகிதம் போதுமானதா, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் கருத்துக்கணிப்பில் கேட்கலாமே. வேலையின்மை குறித்து கேட்கிறார்கள். அதை முன்னேறிய வகுப்பினர், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று பல வகுப்பினரிடமும் கேட்கிறார்கள். அப்படியே அவர்களிடம் இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டுமா என்றும் கேட்கலாமே? ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையா என்றும் கேட்கலாமே?

வழமையாகச் சொல்வதுபோல இந்திய சமூகத்தில் ஈராயிரம் ஆண்டுகளாக நிலைபெற்ற கருத்தியல் என்பதே ஜாதீயம்தானே? பார்ப்பனீயம்தானே? அதை எப்படி எதிர்கொள்வது, சீர்செய்வது என்பதுதானே சமூக நீதி கருத்தியல்? இதனைக் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தாமல், யார் உங்களுக்குப் பிடித்த பிரதமர் வேட்பாளர் என்று கருத்துக்கணிப்பு நடத்துவதால் என்ன பயன்?

மக்களின் அன்றாட வாழ்வை, வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் கருத்தியல்

ஊடகங்களோ, உயர்தட்டு அறிவுஜீவிகளோ செய்யாவிட்டாலும் நாம் எந்தெந்த அம்சங்களில் இந்தத் தேர்தலில் கருத்தியல் மோதல் நிகழ்கிறது என்பதை புரிந்துகொள்வோம். அதற்கு உதவும் சிறிய அட்டவணையை தொகுத்துக் கொள்வோம். எல்லா அம்சங்களையும் பேச முடியாவிட்டாலும் முக்கியமான புள்ளிகளாவது தெளிவாக இருக்க வேண்டும்.

ideological war in Indian Politics
இந்த கருத்தியல் வேறுபாடுகள் எல்லாமே மக்களின் அன்றாட வாழ்வை, வாழ்வாதாரத்தை பாதிப்பவைதான். அதை மக்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்வதுதான் படித்தவர்களின், குடிமைச் சமூகத்தின், ஊடகத்தின், அரசியல் கட்சிகளின் கடமை. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். மக்கள் முன் இந்த வேறுபாடுகளை தெளிவாக வைத்தபின், அவர்கள் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதுதான் சரியான மக்களாட்சி. இவற்றை பேச மறுத்து தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மட்டுமே பேசுவது பொறுப்புள்ள செயல் அல்ல.  

கட்டுரையாளர் குறிப்பு:

2024 Lok Sabha polls an ideological war in Indian Politics by Rajan Kurai Article in Tamil

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: மல்டி வெஜிடபிள் சூப்

ரோகித் சர்மா சதம் வீண்… சென்னைக்கு வெளியே முதல் வெற்றி பெற்ற சிஎஸ்கே!

தாமரைனு தான் சொன்னேன்… சோலி முடிஞ்சி! : அப்டேட் குமாரு

CSKvsMI : தோனியின் ஹாட்ரிக் சிக்ஸ்… இமாலய ஸ்கோரை செட் செய்த சென்னை!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *