உலக முதலீட்டாளர் மாநாடு
தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர் மாநாடு 2024 ஜனவரி 7, 8 தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் மூலம் 6, 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 27 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

கட்சிப் பெயரை அறிவித்த விஜய்
நடிகர் விஜய் 2024 பிப்ரவரி 2 ஆம் தேதி, ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சிப் பெயரை அறிவித்தார். தனது கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலே இலக்கு என்றும் தெரிவித்தார் விஜய். இது தமிழ்நாட்டு அரசியலின் மிக முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.

ஆளுநர் வெளிநடப்பு
பிப்ரவரி 12 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் சட்டமன்றத்தில் வாசிக்க மறுத்தார். ‘தேசிய கீதம் உரிய வகையில் மதிக்கப்படவில்லை என்றும், அரசு தயாரித்த உரையில் தகவல் ரீதியாக தார்மீக ரீதியாக தன்னால் ஏற்க முடியாத பகுதிகள் இருப்பதாகவும் சொல்லி வெளி நடப்பு செய்தார் ஆளுநர்.
அரசு தயாரித்த உரையே அவையில் பதிவு செய்யப்படவேண்டும் என அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். இதனால் அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு அதிகமானது.

பாஜகவில் இணைந்த விஜயதாரணி
காங்கிரஸ் கட்சியின் மூத்த சட்டமன்ற உறுப்பினராக இருந்த விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணி, கடந்த வருடத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியில் இருந்தார். இதன் உச்சகட்டமாக பிப்ரவரி 25 ஆம் தேதி டெல்லியில் பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவி கிடைக்காமல் பாஜகவுக்கு போன விஜயதாரணி, இப்போது வரை முக்கிய அரசியல் பதவி எதுவும் இல்லாமல்தான் இருக்கிறார்.

40 க்கு 40 தட்டிய ஸ்டாலின்… 3ஆவது முறையாக பிரதமரான மோடி
இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு தேர்தல் ஆணையத்தால் மார்ச் 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்தது. ஜூன் 6ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வந்தன.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவில் தமிழ்நாடு – புதுச்சேரியில் 40 இடங்களையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. தேசிய அளவில் தனி மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு மூன்றாவது முறையாக தொடர்ந்து பிரதமராக பதவியேற்றார்.

இந்தியாவையே உலுக்கிய கள்ளச்சாராய மரணங்கள்…
ஜூன் 18 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷச் சாராயத்தை குடித்து காய்கறி மார்க்கெட் தொழிலாளர்கள் உள்ளிட்ட 67 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்தியா முழுதும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு உயிரிந்தழவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தது. திமுக அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

அதிரவைத்த ஆம்ஸ்ட்ராங் கொலை
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5 ஆம் தேதி மாலை, சென்னை பெரம்பூரில் அவரது வீடு கட்டுமானப் பணிகளை பார்வையிடச் சென்றபோது சிலரால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். தமிழகம் தாண்டி இந்தியாவையே அதிரவைத்தது இந்த கொலை. தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு பற்றி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா என பலரும் கண்டனம் தெரிவித்தனர். பல கட்சிகளைச் சேர்ந்த பலர் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டபோதும், இன்று வரை இந்த கொலை வழக்கில் துப்பு துலங்கவில்லை.

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணம்!
தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார் முதல்வர் ஸ்டாலின். செப்.12-ம் தேதி வரை 17 நாட்கள் அங்கு தங்கி தமிழ்நாடு திரும்பினார்.

வெளியே வந்தார்- மீண்டும் அமைச்சரானார் செந்தில்பாலாஜி
2023 ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 26 ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. அடுத்த இரு நாட்களில் அதாவது செப்டம்பர் 29 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மீண்டும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் செந்தில்பாலாஜி.

துணை முதல்வர் ஆனார் உதயநிதி
தமிழ்நாட்டின் துணை முதல்வராக அமைச்சரும், முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் செப்டம்பர் 28 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். பல மாதங்களாக திமுகவினர் மத்தியில் நிலவிய எதிர்பார்ப்பு இதன் மூலம் நிறைவேறியது.

சலசலப்பைக் கிளப்பிய சிறுத்தைகளின் மது ஒழிப்பு மாநாடு…
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை அடுத்து தேசிய அளவில் மது விலக்குக் கொள்கை வேண்டும் என்று வலியுறுத்தி உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டை அக்டோபர் 2 ஆம் தேதி நடத்தினார் விசிக தலைவர் திருமாவளவன். இதில் அதிமுகவும் கலந்துகொள்ளலாம் என்று ஏற்கனவே அவர் கருத்து தெரிவித்ததால், கூட்டணி சர்ச்சை ஏற்பட்டது. ஆனாலும் திமுகவின் கூட்டணிக் கட்சிகளை மட்டுமே அழைத்து இம்மாநாட்டை முடித்தார் திருமாவளவன்.

சென்னை ஏர்ஷோ மரணங்கள்…
இந்திய விமானப் படையின் விமான சாகச நிகழ்ச்சி அக்டோபர் 7 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. சுமார் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்ட இந்த நிகழ்வில் வெயில் மற்றும் மருத்துவ காரணங்களால் 5 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனக் குறைவு என்ற விமர்சனங்களையும் திமுக அரசு எதிர்கொண்டது.

பாசிசம்-பாயாசம்… மாநாட்டில் மாஸ் காட்டிய விஜய்
அக்டோபர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தினார் விஜய். லட்சக்கணக்கானோர் கூடிய இம்மாநாட்டில், தனது கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் பிரகடனப்படுத்தினார் விஜய். ஒன்றிய பாஜக அரசு பாசிசம் என்றால், மாநில திமுக அரசு என்ன பாயாசமா என்ற ரீதியில் விஜய் கேட்ட கேள்வி அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதமானது.

வட மாவட்டங்களை வதைத்த ஃபெஞ்சல் புயல்!
நவம்பர் 30 ஆம் தேதி தமிழ்நாட்டின் மாமல்லபுரத்துக்கும், புதுச்சேரியின் காரைக்காலுக்கும் இடையே கரைக் கடக்கும் என வானிலை மையத்தால் கணிக்கப்பட்ட ஃபெஞ்சல் புயல்… கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட்டங்களிலும் புதுச்சேரியிலும் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. புதுச்சேரி அரசு குடும்ப அட்டைக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவிக்க தமிழக அரசு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்தது.
ஒன்றிய அரசிடம் இந்த முறை நிவாரணம் கேட்டும் கிடைக்கவில்லை.

விசிகவில் கரையைக் கடந்த ஆதவ் புயல்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் -விசிக துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்துகொண்ட எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டுவிழா டிசம்பர் 6 ஆம் தேதி நடந்தது. இது அரசியல் அரங்கில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ‘ 2026 இல் மன்னராட்சியை ஒழிப்போம். இனி ஒரு முதல்வர் பிறப்பின் அடிப்படையில் வரக் கூடாது’ என ஆதவ் அர்ஜுனா பேசினார். திருமாவளவன் கலந்துகொள்ள வேண்டிய இந்த விழாவில் கூட்டணி நிர்ப்பந்தம் காரணமாக அவர் கலந்துகொள்ள முடியவில்லை என்று விஜய் பேசினார். ஆதவ் அர்ஜுனா இதன் காரணமாக விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின் அவராகவே கட்சியில் இருந்து விலகினார்.

அடக்கி வாசித்த அதிமுக பொதுக்குழு
டிசம்பர் 15 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆனால் மத்திய பாஜக அரசிடம் வலியுறுத்தல் தீர்மானங்களையே நிறைவேற்றியது. இது அரசியல் அரங்கில் விமர்சனத்துக்கு உள்ளானது. உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் பற்றி அவமரியாதையாக பேசியதாக சர்ச்சை வெடித்தது. இதிலும் அதிமுக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. எனவே பாஜக-அதிமுக கூட்டணி மீண்டும் உருவாகுமோ என்ற விவாதம் ஏற்பட்டது.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சர்ச்சை!
சென்னை அண்ணா பல்கலை மாணவி ஒருவர் ஞானசேகரன் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் அரசியல் அரங்கில் வெடித்தது. பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் போராட்டம் நடத்தின. விஜய் ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தார். இந்த விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டது பெரும் விமர்சனத்தைக் கிளப்பியது.

திருக்குறள் வாரத்தோடு முடியும் வருடம்!
குமரி முனையில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் இனி ஒவ்வொரு வருடமும் கடைசி வாரம் திருக்குறள் வாரமாக கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தொகுப்பு: வேந்தன்
2024 : சங்கி முதல் கங்குவா பிளாப் வரை… சினிமா உலகம் சந்தித்த சம்பவங்கள்!
குமரியில் கண்ணாடி பாலம் கட்டியது யார்? – எடப்பாடிக்கு எ.வ.வேலு பதில்!