2022 இறுதியில் தொழில்நுட்ப மாநாடு, புத்தாக்க மாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கம் இயக்கம் சார்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கக்கூடிய வகையில் உன்னத நோக்கோடு திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 14 ஆம் இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தமிழ்நாடு தொழில்நுட்ப புத்தாக்க மையம் (i-TNT Hub) சுமார் 54.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அண்ணா பல்கலைக் கழகத்தில் அமைப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஐஐடி ஆராய்ச்சி பார்க் போன்று தொழில்நுட்ப புத்தாக்க மையம்

25,000 சதுர அடியில் அமையவிருக்கும் இந்த மையமானது இந்திய தொழில் நுட்பக் கழக ஆராய்ச்சி பூங்காவை (IIT Research Park) போன்று உலகத்தரம் மிக்க நிறுவனங்களை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இந்த உயர் தொழில்நுட்ப துறைகளுக்கான காப்பகம் தமிழ் நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் மற்றும் வளர்ந்து வரும் எதிர்கால தொழில்நுட்பங்கள் சார்ந்து இயங்கும் அனைத்து புத்தொழில் முனைவோர்களுக்கும் பயன் தரும் வகையில் இயங்கும்.
தொழில் முனைவோர்கள் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்காக “ஸ்டார்ட் அப் தமிழ்நாடு பிராண்ட் லேப்ஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இளம் தொழில் முனைவோர்கள் சந்திக்கும் பல்வேறு சந்தைப்படுத்தல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வணிகம் பெருகும்” என்றார்.
என்னென்ன மாநாடு?
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான புத்தொழில் காப்பகங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் முன்னோக்கிய பாய்ச்சலில் போய்க் கொண்டிருக்கிறது.
நான் முதல்வன் திட்டத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். தொழில்நுட்ப மாநாடு, புத்தாக்க மாநாடு என இந்த ஆண்டு இறுதியில் 2 மிகப்பெரிய மாநாடுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
- க.சீனிவாசன்