அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் டிசம்பர் 19 ஆம் தேதி அவரும் அவரது மனைவி விசாலாட்சி பொன்முடியும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். தண்டனை விவரத்தை டிசம்பர் 21 ஆம் தேதி அறிவிக்கிறார் நீதிபதி ஜெயச்சந்திரன்.
அரசியல் வட்டாரத்திலும் சட்ட வட்டாரத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது இந்தத் தீர்ப்பு,
அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் பின்னணி என்ன? இந்தத் தீர்ப்பின் முழு விவரம் என்ன?
பொன்முடி மீது என்ன வழக்கு?
பொன்முடி 2006 முதல் 2011 வரை அன்றைய முதல்வர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் சுரங்கத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 2011 ஆம் ஆண்டு அதிமுக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
இந்த நிலையில் 2011 செப்டம்பர் 26 ஆம் தேதி அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை பொன்முடி மீது சொத்துக் குவிப்பு வழக்குக்கான முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தது.
அவரும் அவரது மனைவி பி. விசாலாட்சியும் தாங்கள் சமர்ப்பித்த வருமான ஆதாரங்களுக்கு மாறாக ரூ.1.7 கோடி அதிகமாக சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
செக் பீரியடு
சொத்துக் குவிப்பு நடந்ததாக கூறப்படும் காலத்தைத்தான் இவ்வழக்கில் செக் பீரியடு என்பார்கள். அந்த வகையில் ஏப்ரல் 13, 2006 முதல் மே 13, 2010 வரை செக் பீரியடாக லஞ்ச ஒழிப்புத் துறை இவ்வழக்கில் குறிப்பிடுகிறது. 2006 ஏப்ரல் 13 ஆம் தேதி பொன்முடி தம்பதியருக்கு ரூ.2.71 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும், மே 13, 2010 முடிவில் அவர்களின் சொத்துக்கள் ரூ.6.27 கோடியாக அதிகரித்ததாகவும் DVAC இன் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த காலக்கட்டத்தில் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட வருமானம் மற்றும் செலவினங்களை ஒப்பிட்டுப் பார்த்தால்… அவர்களால் ரூ.1.7 கோடிக்கு கணக்கு காட்ட முடியவில்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறை குற்றம் சாட்டியது.
எனவே, 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் (பிசிஏ) பிரிவு 13 (2) இன் கீழ் அமைச்சருக்கு எதிராக குற்றவியல் முறைகேடு குற்றம் சாட்டலாம் என்றும், இந்த குற்றத்துக்கு அவரது மனைவியும் அவருக்கு உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டியது மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை.
விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
இந்த வழக்கு விசாரணை விழுப்புரத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. முழுமையான விசாரணைக்குப் பிறகு, விழுப்புரத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அவர்கள் இருவரையும் ஏப்ரல் 18, 2016 அன்று விடுதலை செய்தது.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு விசாரணை நீதிமன்றம் கூறிய முக்கியக் காரணங்களில் ஒன்று…
சொத்துக்களைப் பெறுவதற்காக அமைச்சர் பொன்முடி தனது மனைவிக்கு முறைகேடாகச் சம்பாதித்த பணத்தைக் கொடுத்தார் என்பதை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்பது தான்.
”அமைச்சரின் மனைவிக்கு விவசாயம் மற்றும் அவரது பெயரில் நடத்தப்படும் சில தொழில்கள் மூலம் தனிநபர் வருமானம் இருக்கிறது. பொன்முடியின் மனைவி விசாலாட்சி தனது தொழிலுக்கு அட்வான்ஸ் இன்கம் டாக்ஸ் செலுத்தி வருவதும் தெரிகிறது.
கணவன் மனைவியாக இருக்கும் பொன்முடி மற்றும் விசாலாட்சி இருவரும் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தாலும், பொன்முடியின் உடந்தையோடு வருமானத்துக்கு மீறிய சொத்துகளை விசாலாட்சி வாங்கியதாக போதிய ஆவண ஆதாரங்களுடன் அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது.
இந்த வழக்கில் பொன்முடிக்கு உடந்தையாகி விசாலாட்சி வரம்பு மீறிச் சொத்துக்களைப் பெற்றதாகக் கூறுவதற்கு எந்த ஒரு சிறு ஆதாரமும் இல்லை. அதனால் இருவரும் விடுவிக்கப்படுகிறார்கள்” என்று சிறப்பு நீதிபதி டி.சுந்தரமூர்த்தி தீர்ப்பு எழுதினார்.
லஞ்ச ஒழிப்புத் துறை மேல் முறையீடு
சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 2017ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது லஞ்ச ஒழிப்புத் துறை.
சுவாரஸ்யமாக, அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன்தான் இந்த மேல்முறையீட்டு மனு மீது பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். பிப்ரவரி 2, 2017 அன்று அது உயர்நீதிமன்றத்தில் முதல் முறையாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அதன்பிறகு, கடந்த ஆறு ஆண்டுகளில் பல்வேறு நீதிபதிகள் முன் மேல்முறையீடு பட்டியலிடப்பட்டது. அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டது.
அக்டோபர் 3, 2023 முதல் நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு எம்.பி/எம்.எல்.ஏ.க்கள் மீதான சிறப்பு நீதிமன்றங்களுக்கான பொறுப்பு (portfolio judge)ஒதுக்கப்பட்டது. இதையடுத்து நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பழைய மேல்முறையீடுகளுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்து அவ்வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அதில் ஒன்றுதான் 2017 இல் லஞ்ச ஒழிப்புத் துறை செய்த பொன்முடி வழக்கின் மேல் முறையீடு.
இந்த அப்பீலின் இறுதி விசாரணையில் அமைச்சர் மற்றும் அவரது மனைவி சார்பில் வழக்கறிஞர்கள் இளங்கோ மற்றும் ஆர். பசந்த் ஆகியோர் வாதிட்டனர். கூடுதல் அரசு வழக்கறிஞர் பாபு முத்து மீரான் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக வாதிட்டார்.
விசாரணை நீதிமன்ற தீர்ப்பு தெளிவான தவறு- உயர்நீதிமன்றம்
டிசம்பர் 19, 2023 அன்று தீர்ப்பை வழங்கிய திரு. நீதிபதி ஜெயச்சந்திரன், ”விசாரணை நீதிமன்றத்தின் விடுதலை உத்தரவு தெளிவாகத் தவறானது, வெளிப்படையான பிழையானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது தீர்ப்பில், “விசாரணை நீதிமன்றம், ஆதாரங்களை மேலோட்டமாகப் படித்து, A1 பொன்முடி மற்றும் A2 விசாலாட்சி ஆகியோரை தனித் தனியாக அணுக வேண்டும் என்று கூறியிருக்கிறது. இது அடிப்படையில் விசாரணை நீதிமன்றத்தின் தவறான அணுகுமுறையாகும். A2 வான விசாலாட்சி மீதான குற்றச்சாட்டின் பொருள் என்னவென்றால், அவர் A1 (அரசு ஊழியரான பொன்முடி) யின் மனைவியாக இருப்பதால்தான். இதை விசாரணை நீதிமன்றம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது.
குறிப்பிட்ட இந்த செக் பீரியடில் அதாவது முறைகேடான சொத்துகள் சம்பாதித்ததாக கூறப்படும் காலத்தில் விசாலாட்சி பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்களுக்கான வருமானம் ஈட்ட மூலதனம்/ஆதாரம் இல்லாததை முதலில் விசாரணை நீதிமன்றம் ஆராய்ந்திருக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல… விசாலாட்சி வணிகம் மற்றும் விவசாய நிலம் ஆகியவற்றின் மூலம் ஈட்டிய வருமானம் அவர் ஈட்டிய சொத்து மதிப்புக்கு ஈடாக இல்லை என்பதை நிரூபிக்க டிவிஏசி கொடுத்த அனைத்து ஆதாரங்களையும் விசாரணை நீதிமன்றம் புறக்கணித்திருக்கிறது.
எனவே ஒரு வழக்கில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்றுகள் புறக்கணிக்கப்பட்டால், அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டியது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் கடமை. எனவே, விடுவிப்பு உத்தரவை ரத்து செய்து, அமைச்சர் மற்றும் அவரது மனைவி இருவரையும் குற்றவாளிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையை முடிவு செய்வதற்கு முன் டிசம்பர் 21 அவர்கள் ஆஜராகவேண்டும்” என்று தீர்ப்பளித்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
வேந்தன்