இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று சொல்பவர்களை மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் ”எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழா இன்று (டிசம்பர் 6) நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்று நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகத்தை வழங்கினார்.
இதன்பின் பேசிய விஜய், “அம்பேத்கரின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். இப்படி ஒரு விழாவை ஏற்படுத்தி எனக்கு அந்த வாய்ப்பு கொடுத்த விகடன் குழுமத்துக்கு நன்றி.
எல்லாருக்கும் பிடித்த இடம் என்ன என்று கேட்டால், நியூயார்க் என்பார்கள். ஆனால், 100 ஆண்டுகளுக்கு முன்பே நியூயார்க் சென்று, கொலம்பியா பல்கலையில் படித்து டாக்டர் பட்டம் வாங்கி சாதித்த மாணவர் ஒருவர் இருந்தார்.
அவர் எந்த சூழலில் படித்து சாதித்தார் என்பதுதான் பெரிய விஷயம். அன்று அந்த மாணவரை, ‘நீ இந்த சாதியில் பிறந்து ஏன் இப்படி செய்கிறாய் என்று அவர் வாழ்ந்த சமூகமே பேசியது. அதையும் மீறி அந்த மாணவர் பள்ளிக்கூடம் போனால், அவரால் சரிசமமாக உட்கார்ந்து படிக்க முடியவில்லை. ஏன் தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை.
அத்தனை சக்திகளும் அவருக்கு எதிராக இருந்த போதும், ஒரு சக்தி மட்டும் தான் தொடர்ந்து படிக்க சொன்னது.
அது தான் அந்த மாணவர் உள்ளே இருந்த வைராக்யம். அந்த வைராக்யம் தான், அவரை பிற்காலத்தில் இந்த நாட்டின் ஒரு தலைசிறந்த அறிவார்ந்த மனிதராக மாற்றுவதற்கான காரணமாக இருந்தது. அவர்தான் அம்பேத்கர்.
வன்மத்தை கக்கிய இந்த சமூகத்திற்கு, அவர் திரும்ப என்ன செய்தார் என்பது தான் அவரின் சாதனை. பிறப்பால் அனைவரும் சமம் என்ற உயரிய கோட்பாட்டை கொண்டவர்” என்றார்
மேலும் அவர், “நம் நாடு முழு வளர்ச்சி அடைய வேண்டுமென்றால், ஜனநாயகத்தின் ஆனிவேரான சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்தப்படுகிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இளைஞர்களிடையே ஏற்பட வேண்டும்.
அப்படியானால், தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்து அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய வ்லிமையான கோரிக்கை. அதுபோன்று ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளில் ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும்.
அதை ஒன்றிய அரசு செய்ய வேண்டும். அம்பேத்கரை பற்றி யோசித்தால் நிச்சயம், சட்டம் ஒழுங்கு சமூக நீதியை பற்றி பேசாமல் இருக்க முடியாது.
இன்றும் மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று நமக்கு நன்றாக தெரியும். ஆனால் அதை கண்டுக்கவே, கண்டுக்காத ஒரு அரசு ஆண்டு கொண்டிருக்கிறது.
அங்கே அப்படி என்றால், இங்கே இருக்குற அரசு எப்படி இருக்கிறது? வேங்கை வயல் ஊரில் என்ன நடந்தது? சமூக நீதி பேசும் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? இத்தனை ஆண்டுகளில் ஒரு துரும்பைக் கிள்ளிப் போடவில்லையே.
இதையெல்லாம் பார்த்தால் அம்பேத்கர் வெட்கப்பட்டு தலை குணிந்து போய்விடுவார். பெண்களுக்கு எதிராக, பெண் குழந்தைகளுக்கு எதிராக, மனித உயிர்களுக்கு எதிராக ஒன்றா, ரெண்டா நடக்கிறது.
இதையெல்லாம் தடுக்க மக்களை நேசிக்கிற ஒரு நல்ல அரசு அமைய வேண்டும்.
இங்கு தினசரி நடக்கும் பிரச்சினைகளுக்கு சம்பிரதாயத்திற்காக மக்களுடன் இருப்பதைப் போல நடிக்கிறார்கள். சம்பிரதாயத்திற்காக மழைநீரில் நின்று போட்டோ எடுக்கிறார்கள். இதில் எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடில்லை.
என்ன செய்வது, நாமும் சம்பிரதாயத்திற்கு அது போல செய்ய வேண்டியுள்ளது. நான் எப்போதும் மக்களுடன் உரிமைகளுக்காகவும், உணர்வு பூர்வமாகவும் இருப்பேன். மக்கள் உணர்வுகளை மதிக்க வேண்டும்.
எனவே, மக்களின் உணர்வை மதிக்க தெரியாத, மக்களின் சமூக நீதி பாதுகாப்பை உறுதி செய்யாத கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களோடு நான் விடும் எச்சரிக்கை…
‘நீங்கள் உங்களோட சுயநலத்திற்காக பலவழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணிகள் அனைத்தும், 2026ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள்” என்று கூறினார்.
முன்னதாக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் 2026 தேர்தலில் 200 இடங்களில் வெல்வோம் என்று கூறி வரும் நிலையில், விஜய் இவ்வாறு கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
2019 பாபர் மசூதி தீர்ப்பு மதச்சார்பின்மைக்கு எதிரானது: முன்னாள் நீதிபதி நாரிமன்