நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுமுகங்கள் துறைக்கு ரூ.20,043 கோடி ரூபாய் தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (பிப்ரவரி 19) இந்த ஆண்டுகான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுமுகங்கள் துறைக்கான அறிவிப்பில்,
“பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் சாலைக் கட்டமைப்பின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்த இந்த அரசு உறுதியாக உள்ளது.
முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், இதுவரை 1,262 கி.மீ நீளத்திற்கு 2,587 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அகலப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 4,881 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 2824 கோடி ரூபாய் செலவில் 16 புறவழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பருவமழைக் காலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்படாமல் இருக்க, 2006 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,113 உயர்மட்டப் பாலப் பணிகள் எடுக்கப்பட்டு, 683 உயர்மட்டப் பாலப் பணிகள் முடிவடைந்து பொது மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
மீதமுள்ள 430 உயர்மட்டப் பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிவகாசி நகருக்கு வெளிவட்ட சாலை அமைக்கும் பணியும், மன்னார்குடி நகருக்கு வட்டச் சாலை அமைக்கும் பணியும், திண்டுக்கல் நகருக்கு புறவழிச் சாலை அமைக்கும் பணியும்,
திருச்சி ஸ்ரீரங்கம் இடையே உயர் மட்ட பாலம் அமைக்கும் பணியும், அவினாசி முதல் மேட்டுப்பாளையம் வரை நான்குவழிச் சாலையாக அகலப்படுத்தும் பணியும்,
விழுப்புரம் மாவட்டம், மாரங்கியூர்-ஏனாதிமங்கலம் சாலையில் கோரையாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி ஆகியவை 665 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலுள்ள 14.6 கி.மீ. நீளமுள்ள பகுதியில் காணப்படும் பெருமளவிலான போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் வகையில், நான்குவழி உயர்மட்ட வழித்தடம் ஒன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு (CRIDP) 8,365 கோடி ரூபாயும் சென்னை எல்லைச் சாலை திட்டத்திற்காக 2,267 கோடி ரூபாயும் சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்திற்கு 908 கோடி ரூபாயும் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 40 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கடலூர் சரக்குத் துறைமுகம், தற்போது 150 கோடி ரூபாய் செலவில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அத்துறைமுகத்தை ஆண்டொன்றிற்கு சுமார் 35 இலட்சம் டன் சரக்குகள் கையாளும் வசதி கொண்டதாகத் தரம் உயர்த்திட, உரிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இதன் மூலம், தமிழ்நாட்டின் மத்திய மண்டலம் பெரும் பொருளாதார வளர்ச்சி பெறும்.
தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த முக்கிய சாலைக் கட்டமைப்புத் திட்டங்களை, சிறந்த மேலாண்மை முறைகளை பின்பற்றிச் செயல்படுத்திட, ஒரு சட்டப்பூர்வ அமைப்பை உருவாக்க முடிவெடுக்கப்பட்டு, ‘தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம்’ (Tamil Nadu State Highways Authority) அமைத்திடும் சட்ட முன்வடிவு நடப்புக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும்.
இதன் மூலம், அரசு தனியார் பங்களிப்புடன் மாநிலத்தில் சாலைக் கட்டமைப்பு வளர்ச்சிக்கான முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க இயலும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்கு 20,043 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மகளிர் உரிமைத் தொகை : இந்த ஆண்டுக்கான நிதி எவ்வளவு?
TN Budget 2024 : பள்ளி கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு!