முதல்வர் ஸ்டாலினின் ஆசையை அதிமுக நிறைவேற்றும் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
திமுக அரசை கண்டித்து மதுரையில் இன்று (நவம்பர் 16) அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
‘மதுரையில் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை நிறைவேற்றவில்லை, சாலைகள் செப்பனிடப்படாமல் இருக்கிறது’ என்று கண்டனம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, “அதிமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சிக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்கி வருகிறது. எடப்பாடி பழனிசாமி இல்லையென்றால், மகளிருக்கு கொடுக்கப்படும் ரூ.1000 அவர்களுக்கு வந்திருக்காது.
இப்போது 1.13 கோடி பேருக்குதான் கொடுக்கின்றனர். தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே பணம் கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்த போதே சொல்லியிருந்தால் மக்களும் தகுதி பார்த்து வாக்களித்திருப்பார்கள். ஏமாந்துவிட்டார்கள்.
நகை கடன் தள்ளுபடி என்று கூறினார்கள். ஆனால் 35 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்குதான் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதம் 25 லட்சம் பேரின் நகை வங்கியிலேயே இருக்கிறது.
கல்விக் கடனையும் ரத்து செய்வோம் என்றார்கள். ஆனால் மூன்றரை ஆண்டு காலம் ஆகிறது. ஒருவருக்கு கூட தள்ளுபடி செய்யவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்றார்கள். ஆனால் 52 சதவீதம் மின்கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள்” என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தங்கமணி, “200 தொகுதிகளின் வெற்றி என்ற முதல்வர் ஸ்டாலினின் ஆசையை செயல்படுத்தப்போவது அதிமுகதான்.
2026 தேர்தலில் அதிமுக 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக ஒரு சதவிகித வாக்குகளை கூடுதலாக பெற்றது. திமுகவுக்கு 6 சதவிகித வாக்குகள் குறைந்தது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் இன்னும் 6 சதவிகிதம் குறையும் அந்த 12 சதவிகிதமும் எங்களுக்கு வரும்.
கூட்டணியை பொறுத்தவரை அதிமுகவில் யாரையும் சேர்க்க முடியாது என்று நான் சொல்லவில்லை. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் நேரத்தில் யாரை சேர்ப்பது என்று முடிவு செய்வார்.
மக்களின் முக மலர்ச்சியே இந்த ஆட்சிக்கு சாட்சி என்று திமுகவினர் சொல்கிறார்கள் அப்படியானால் ஏன் ஆறு சதவிகித வாக்கு குறைந்தது” என்று கேள்வி எழுப்பினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
ரிஷிகளின் தவத்தால் பாரதம் உருவானது : ஆளுநர் ரவி