அதிமுக பொதுச்செயலாளராக உட்கட்சித் தேர்தல் மூலம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி… தன்னை எதிர்த்து பன்னீர்செல்வம் கொடுத்த சட்ட அஸ்திரங்களையும் எதிர்த்து சாதகமான தீர்ப்பை பெற்று தனது பொதுச் செயலாளர் பதவியை நிலைநாட்டி இருக்கிறார்.

இந்த நிலையில் அதிமுகவின் பொது செயலாளர் ஆன பிறகு முதன் முறையாக ஏப்ரல் 2 ஆம் தேதி காலை சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் இருந்து… தனது ஊரான சேலத்துக்கு புறப்பட்டார் எடப்பாடி. அமைச்சராக இருந்தபோதும் சரி, திடீரென முதலமைச்சர் ஆனபோதும் சரி… எடப்பாடி பழனிசாமி தனது சேலம் பாசத்தை மாற்றிக் கொண்டதே இல்லை.
முதலமைச்சராக இருந்தபோது கூட வாராவாரம் சேலம் சென்று திங்கள் தான் சென்னை திரும்புவார் எடப்பாடி.

இந்த பின்னணியில் அதிமுகவின் பொது செயலாளர் ஆன பிறகு ஏப்ரல் 2 ஆம் தேதி காலை புறப்படுவதற்கு முன்பே… பசுமைவழிச் சாலை இல்லத்தில் இருந்து அவரது சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லம் வரை வரவேற்புகளும் பேனர்களும் கனகச்சிதமாக திட்டமிடப்பட்டு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டன.
சென்னையில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள் முதல் சேலம் மாவட்ட செயலாளர்கள் வரை தங்களது மாவட்டங்களில் 10 அடிக்கு ஒரு வரவேற்பு பேனர், எங்கும் தொண்டர்கள் கூட்டம், ஆங்காங்கே எம்ஜிஆர் சிலைக்கு மாலை, சில இடங்களில் கூட்டங்களில் பேசுதல், என்று பலத்த ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

காலை 10 மணி அளவில் சென்னையிலிருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தன் வீட்டுக்கு செல்வதற்கு நேற்று மாலையாகிவிட்டது. அதன் பிறகும் அவரை சந்திக்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரிசை கட்டி நின்றனர்.
இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 3) யாரும் எதிர்பார்க்காத வகையில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 50 தட்டுகளில் சீர்வரிசை எடுத்து வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இன்று அதிகாலையிலேயே புதுக்கோட்டையில் இருந்து சுமார் 200 கார்களில் அணிவகுத்து புறப்பட்டார் விஜயபாஸ்கர். அவருடைய ஆதரவாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் அவரோடு கார்களில் வந்தனர்.
ஆடுகள், மாடுகள், சேவல்கள், நாட்டுக்கோழிகள், வாழைத் தார்கள், பலாப்பழங்கள், தர்பூசணி பழங்கள். பொம்மைகள், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி உருவப் படம் பொறித்த தட்டுகள் என்று புதுக்கோட்டை மண்ணிலிருந்து சீர்வரிசைகள் தனியாக லாரிகளில் சேலத்துக்கு எடுத்து வரப்பட்டன.
பற்றாக்குறைக்கு புதுக்கோட்டை பகுதிகளிலும் திருச்சி பகுதிகளிலும் நாடகங்களிலும் கட்சி நிகழ்ச்சிகளிலும் எம்ஜிஆர் போல வேடமிட்டு நடிக்கும் நடிகர்களையும் சேலத்துக்கு அழைத்து வந்து விட்டார் விஜயபாஸ்கர்.
வேட்டி கட்டிய எம்ஜிஆர், கோட் சூட் போட்ட எம்ஜிஆர் என்று வகை வகையான எம்ஜிஆர்கள் எடப்பாடி பழனிசாமி இல்லத்தை நோக்கி விஜயபாஸ்கரின் சீர்வரிசைகளோடு நடந்தனர்.
நெடுஞ்சாலை நகர் வீட்டுக்குள் சென்ற விஜயபாஸ்கர் வரிசையாக ஐம்பது சீர் தட்டுகளையும் எடப்பாடியிடம் கொடுக்க….அவற்றை வாங்கி வாங்கி எடப்பாடிக்கு கையே வலி கண்டுவிட்டது.

விஜயபாஸ்கரின் சீர்வரிசை தகவலை அறிந்த மற்ற மாவட்ட செயலாளர்களும் முன்னாள் அமைச்சர்களும் இனி அடுத்தடுத்து நெடுஞ்சாலை நகரை நோக்கி சீர்வரிசைகளோடு படையெடுக்க தொடங்கிவிட்டனர்.

தனிப்பட்ட மனிதர்களின் இந்த செயல்பாடுகளாக இதைப் பார்க்க முடியவில்லை. அதிமுக 2016 க்குப் பிறகு பல்வேறு அலைக்கழித்தல்களுக்கு ஆளாகி, இப்போதுதான் இயல்பு நிலைக்கு வந்திருக்கிறது என்ற அத்தொண்டர்களின் நம்பிக்கையையே சேலத்துக் காட்சிகள் காட்டுகின்றன.
வேந்தன்
தூத்துக்குடி : பொதுத்தேர்வை முடித்து வந்த மாணவிக்கு அரிவாள் வெட்டு!
Comments are closed.