தேர்தலில் முறைகேடு செய்யும் அதிகாரிகளுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது போதாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மக்களவை முதற்கட்ட தேர்தல் நாளை (ஏப்ரல் 19) தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடைபெறுகிறது.
இதற்கிடையே கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவின் போது, பா.ஜ.க.வுக்கு ஒரு முறை பட்டனை அழுத்தினால் 2 வாக்குகள் பதிவாகும்படி மென்பொருள் அமைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.
9 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவுக்காக ஒரு முறை பட்டனை அழுத்தும்போது பா.ஜ.க. தவிர மற்றவர்களுக்கு ஒரு ஒப்புகைச் சீட்டு மட்டுமே வருகிறது என்றும், பா.ஜ.க.வுக்கு மட்டும் 2 ஒப்புகைச் சீட்டு வருகிறது என்றும் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பதிவான வாக்குகளுடன் விவிபேடு ஒப்புகை சீட்டையும் 100 சதவிகிதம் எண்ண வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நடந்து வரும் நிலையில் மனுதாரர்கள் சார்பில் மேற்கூறிய புகாரும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கினை இன்று காலை முதல் விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அமர்வு, தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.
வழக்கு விசாரணையில், விவிபேட் மற்றும் ஈவிஎம் எந்திரங்கள் எப்படி செயல்படுகின்றன? அதில் முறைகேடுகள் சாத்தியமா?” என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், ஒப்புகை சீட்டு எண்ணுவது மற்றும் ஈவிஎம் எந்திரங்களில் கட்சி சின்னங்களை பொருத்துவது அதிகாரிகளுக்கு எந்த அளவிற்கு தொடர்பு உள்ளது? அவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பிருக்கிறதா?
ஈவிஎம் எந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், கட்சியின் சின்னங்களை பொருத்துவதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? அந்நிறுவனங்களுக்கு இதுதொடர்பான தரவுகள் தெரிந்திருக்குமா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்விகளை அடுக்கினர்.
இதற்கு தேர்தல் ஆணையத்தின் கூடுதல் செயலரை அழைத்து, அவரிடமிருந்து விளக்கமும் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் “தேர்தல் நடத்தை மற்றும் தேர்தலின் போது விதிமீறலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது போதுமானதாக இல்லை. இது நாட்டின் மிக தீவிர பிரச்சனை என்பதால் முறைகேடு செய்யும் அதிகாரிகளுக்கான தண்டனை அதிகரிக்கப்பட வேண்டும்” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது அணை” : டி.கே சிவகுமார் உறுதி!
“ஜிபே மூலம் வாக்காளர்களுக்கு பணம்”: அண்ணாமலை மீது திமுக புகார்!