2 seats each for both communists
வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் தலா இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் முதலில் ஒற்றை இடங்களில் போட்டியிடும் கட்சிகளுக்கான உடன்பாடுகள் கடந்த வாரம் எட்டப்பட்டன.
கொமதேக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. அதே போல மதிமுகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு மதிமுக இன்னும் உடன்படாததால் கையெழுத்தாகவில்லை.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவற்றுடன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று (பிப்ரவரி 29) திமுக தலைமை அலுவலகத்தில் கையெழுத்தானது.
இதன்படி இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், “வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடனான மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.
யாருக்கு எத்தனை இடங்கள் எந்த இடங்கள் என்பதைக் காட்டிலும் நாடு முக்கியம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கருதுகிறது.
அந்த அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக தலைவர் முதல்வரும், மாநில செயலாளராகிய நானும் இதில் கையெழுத்திட்டுள்ளோம். எந்த தொகுதிகள் என்பதை பிறகு கலந்து பேசி முடிவு செய்வோம்.
சென்ற முறை இரண்டு சீட்டுகளில் போட்டியிட்டோம். இப்போது நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இரு தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டிருக்கிறோம். வேறு எந்த சிக்கலும் எங்களிடையே இல்லை” என்றார்.
அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“திமுகவோடு இரு கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஏற்கனவே இரு இடங்களில் போட்டியிட்ட நிலையில் கூடுதல் இடங்களிலும் நாங்கள் போட்டியிட வேண்டும் என்று கேட்டோம்.
ஆனால் ஏற்கனவே இருக்கும் கட்சிகளை விட கூடுதல் கட்சிகளும் வர இருக்கிற நிலையில், ஏற்கனவே போட்டியிட்ட இடங்களை அதிகப்படுத்தும் சூழ்நிலை இல்லை என்று திமுக தெரிவித்தது.
அந்த அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக உடன்பாடு ஆகியிருக்கிறது. இந்த உடன்பாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினும், மார்க்சிஸ்ட் மாநில செயலாளராக நானும் கையெழுத்திட்டிருக்கிறோம்.
எந்தெந்த தொகுதிகள் யாருக்கு என்பது பிறகு பேசி முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார் கே.பாலகிருஷ்ணன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
IPL 2024: மிஸ் செய்கிறாரா கோலி?… ‘க்ளூ’ கொடுத்த முன்னாள் கேப்டன்!
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம்: அறிவாலயத்தில் அறிவித்த மதிமுக
2 seats each for both communists