தவறான சிகிச்சையால் உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் மிகப்பெரிய கால் பந்தாட்ட போட்டி நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் இன்று(நவம்பர் 17) நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “துரதிஷ்டவசமாக மாபெரும் தவறு நடந்திருக்கிறது. பிரியாவின் இழப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது.
பெரும் கனவை சுமந்துகொண்டு கால் பந்தாட்ட வீராங்கனையாக இருந்தவருக்கு தவறான சிகிச்சை கொடுத்து காலை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டு இறுதியில் உயிரையே இழந்திருக்கிறார்.
இதுபோன்ற நிகழ்வு தமிழகத்தில் நடந்ததில்லை. மருத்துவக் கட்டமைப்பு என்பது மிக நன்றாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழகம்.
குறிப்பாக இந்த மருத்துவமனை முதலமைச்சர் தொகுதியில் இருப்பது வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
அரசு நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னால்கூட பல அரசு மருத்துவமனைகள் இந்தநிலையில் தான் இருக்கின்றன.
ஊடகங்கள் மூலமாக பிரியாவின் இறப்பு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதுபோன்ற பல மரணங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
எனவே தமிழகத்திற்கு மருத்துவத்துறையில் இருந்த பெயரை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு இருக்கிறது.
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ராமன் விஜயனுடன், பாஜக நிர்வாகிகள் வந்து இன்னும் 5 நாட்களில் 2 விஷயங்களை செய்வதாக பிரியா குடும்பத்தினரிடம் உறுதி அளித்திருக்கிறோம்.
வீராங்கனை பிரியாவின் பெயர் சென்னை முழுவதும் நிலைத்திருக்கும்படி, அவரது பெயரில் சென்னை முழுவதும் மிகப்பெரிய அளவில் கால் பந்தாட்ட போட்டியை நடத்த இருக்கிறோம். அதற்காக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரை அழைத்து வருவோம்.
பிரியா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அடையாளம் காட்டும் 10 கால்பந்தாட்ட வீராங்கனைகள் விளையாட்டு பயிற்சிக்கான முழு செலவை பாஜக ஏற்றுக்கொள்ளும்” என்றார்.
கலை.ரா
Comments are closed.