அதிமுக பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வாதம் நிறைவடைந்த நிலையில் வழக்கு நாளை(ஜனவரி 11) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வில் இன்று(ஜனவரி 10) நீண்ட விளக்கம் அளித்தது.
அதில் “ஜூன் 23பொதுக்குழு கூட்டத்திலேயே ஜூலை 11கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியிட்டதால் நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. ஜூலை 11பொதுக்குழு தனக்கு தெரியாது என்று ஓபிஎஸ் கூறவில்லை.
ஜூலை 11அன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் 150உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கவில்லை. 2665பொதுக்குழு உறுப்பினர்களில் 2190பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
2460பேர் தீர்மானங்களை ஏக மனதாக ஆதரித்துள்ளனர். 2539பேர் பொதுக்குழுவுக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.
82சதவீதம் பேர் பொதுக்குழுவை கூட்டவேண்டும் என்று ஆதரவு தெரிவித்தனர். ஆனால் 20பேர் ஆதரவு தெரிவித்தாலே போதுமானது.
ஜூன் 23ஆம் தேதி கூட்டத்தில் கையெழுத்தாகிய பொதுக்குழு அறிவிப்பில், தீர்மானங்கள் 3 முதல் 7 வரையிலான கருத்து அடிப்படையில், ஒற்றைத் தலைமை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ஓபிஎஸ் தரப்பின் பிரச்சனை நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்பது அல்ல. மாறாக, ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இல்லாமல், அவைத் தலைவர் ஜூலை 11 கூட்டத்தை அறிவித்துள்ளார் என்பது தான் அவரது பிரச்சனையாக உள்ளது.
11 ஜூலை கூட்டத்தில் பதவிகள் நீக்கப்பட்டதால், அது அன்றோடு முடிவடைந்து விட்டது, மேலும் நான்கு ஆண்டுகள் பொறுப்பு உள்ளது என்ற பேச்சுக்கே இடமில்லை.
அ.தி.மு.க.வின் பொதுக்குழுவுக்கு தான் அனைத்து அதிகாரங்களும் இருக்கிறது என்பது சாதாரண தொண்டனுக்கும் தெரியும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அது தெரியாதா?
பொதுக்குழுவுக்கு கட்சியின் விதிகளை கட்டமைக்கவும், அமல்படுத்தவும் முழு அதிகாரம் உண்டு . அப்படி இருக்கும்போது ஓ.பி்எஸ் தரப்பு அடிப்படை உறுப்பினர்களை கூட்ட வேண்டும் என்று ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது?.
அ.தி.மு.க. பொதுக்குழுவை என் விருப்பப்படி ஈபிஎஸ் மட்டுமே கூட்டியது போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயல்கிறார்கள்.
கட்சியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் கட்சியின் நலனுக்காகவே இருக்க வேண்டுமே தவிர, தனிநபர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கானது அல்ல. அது இல்லை என்று ஓபிஎஸ் தரப்பு எவ்வாறு மறுக்க முடியும்?” என்று எடப்பாடி தரப்பில் வாதிடப்பட்டது.
ஜூன் 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது சரியான உறுப்பினர்களின் எண்ணிக்கை மனுதாரரிடம் கேட்டு வழங்குவதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த கட்சியும், ஒரு திசையில் இயங்க ஓபிஎஸ், வைரமுத்து மட்டும் வேறு திசையில் இயங்குவதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதத்தை நிறைவு செய்தது.
இதனைத் தொடர்ந்து அதிமுக கட்சி, அதிமுக தலைமை நிலைய செயலாளர் ஆகியோர் சார்பாக வாதங்கள் அடுத்தடுத்து வைக்கப்பட உள்ளன. வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
மெட்ரோ தூண் இடிந்து விழுந்து தாய், மகன் பரிதாப பலி!
அதிமுக விதிகள் சொல்வது என்ன? – நீதிபதிகளிடம் ஈபிஎஸ் விளக்கம்!