பாஜகவைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் அதிமுகவில் இணைகிறார்கள் என்று அம்மன் அர்ஜூனன் கூறியிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி பாஜகவில் இணைந்து தமிழ்நாட்டு அரசியலில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இணைய உள்ளனர் என்று சொல்லியிருந்தார்.
இது மற்ற கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன், ”பாஜக எம்.எல்.ஏக்கள் இரண்டு பேர் மதியம் 2.15 மணிக்கு அதிமுகவில் இணையப் போகிறார்கள்” என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி, வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் என மொத்தமே 4 பாஜக எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில், அம்மன் அர்ஜூனன் சொன்ன அந்த இரண்டு பேர் யார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் மதியம் 2.30 ஆகியும் அப்படி எந்த நிகழ்வும் நடைபெறவில்லை.
நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது!
இதற்கிடையே சேலத்தில் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், பாஜக எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேர் இன்று அதிமுகவில் இணைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரிகிறது. இதை யார் கூறினார்?” என திருப்பிக் கேட்டார்.
கோவையில் அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் இன்று பேட்டியளித்துள்ளதாக செய்தியாளர்கள் கூற, “வந்தால் சந்தோஷம்தான். அப்படி வந்தால் சொல்லி அனுப்புகிறேன்” என எடப்பாடி சிரித்தபடி பதிலளித்து சென்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
திமுகவில் இரண்டு அதிரடி மாற்றங்கள் : பின்னணி என்ன?
‘எந்த தொகுதியில் போட்டி?’ : உறுதி செய்த திருமாவளவன்