1972 அக்டோபர் 17…. வரலாற்றை மாற்றிய எம்.ஜி.ஆர். எக்ஸ்பிரஸ்! 

அரசியல்

இன்று (அக்டோபர் 17) அதிமுகவின் 51 ஆவது நிறுவன தினம்.  1972 ஆம் ஆண்டின் இதே தினத்தில்தான்  மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகே அதிமுகவை கொடியேற்றித் தொடங்கினார் எம்.ஜி.ஆர்.

1972 October 17 admk starts mgr

திமுகவில் அண்ணா மறைவுக்கு பிறகு கலைஞருக்கும் எம்ஜிஆருக்குமான  நட்பு பெரிதாக பேசப்பட்டாலும் சில ஆண்டுகளிலேயே அந்த நட்பில் கீறல் விழுந்தது.

எம்.ஜிஆர்.அப்போது கட்சியின் பொருளாளராக இருந்தார். 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடந்த அண்ணாவின் 63 ஆவது பிறந்த நாள் விழாவில் எம்.ஜி.ஆர். பேசிய பேச்சு சர்ச்சையானது. 

“ராமச்சந்திரனுக்கு பங்களா இருக்கிறது என்றால் அது எப்போது வாங்கப்பட்டது? ஆட்சிக்கு வருவதற்கு முன் வாங்கப்பட்டதா? ஆட்சிக்கு வந்தபின் வாங்கியதா? என் மனைவி, உறவினர்கள் சொத்துகள் வாங்கினார்கள் என்றால் அது ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாங்கப்பட்டதா?  ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான்.

அந்த சம்பாத்தியத்தில் வாங்கியிருக்கிறான், மாவட்டச் செயலாளர்கள் மற்ற நிர்வாகிகள் சொத்துகள் வாங்கியிருந்தால் அதற்கு கணக்கு காட்டுங்கள். மாவட்டச் செயலாளர்களின் மனைவி, குடும்பத்தினர் பெயரில் சொத்துகள் வாங்கப்பட்டிருந்தால் அந்த கணக்கையும் காட்ட வேண்டும். இந்த பிரச்சினையை வரும் பொதுக்குழுவில் நானே கொண்டுவர இருக்கிறேன்.

1972 October 17 admk starts mgr

நம்மை சுத்தமானவர்கள் என்று மக்கள் முன்னால் நாம் நிரூபிக்க வேண்டும். நிரூபிக்க முடியாதவர்களை மக்கள் முன்னால் நிறுத்தி அவர்களை தூக்கி எறிவோம்” என்று ஆயிரம் விளக்கில் எம்.ஜி.ஆர். பேசிய பேச்சு திமுக தலைமையை உலுக்கியது. 

அடுத்த சில தினங்களில் அதாவது 1972  அக்டோபர் 12 ஆம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட்டம் திட்டமிடப்பட்டிருந்தது.’

எம்.ஜி.ஆர். திருக்கழுக்குன்றம் கூட்டத்தை அடுத்து அதிரடியாக பேசிய ஆயிரம் விளக்கு லாயிட்ஸ் சாலை கூட்டத்துக்கு தலைமை தாங்கியவர் அரங்கநாதன்.

அந்த கூட்டத்தில் ஆலந்தூர் மோகனரங்கன், கே.ஏ.கிருஷ்ணசாமி, கோவை செழியன், ஆர்.எம்.வீரப்பன், நாஞ்சில் மனோகரன், அப்போதைய சபாநாயகர் கே.ஏ. மதியழகன் ஆகியோர்  வரிசை கிரமமாக பேசிய பிறகு கடைசியாக எம்ஜிஆர் பேசினார்.

இவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது அவருடன் சென்றுவிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு எம்.ஜி.ஆருக்கும்  கலைஞருக்கும் இடையிலான உறவு விரிசல் அடைந்தது.  கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஜி.ஆர். மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைவர் கலைஞருக்கு கடிதம் எழுதினார்கள். 

அதன்படி அக்டோபர் 10 ஆம் தேதி  சட்ட திட்ட விதிகளை மீறி செயல்பட்டதற்காக எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து  இடைநீக்கம் செய்து  அறிவிப்பை வெளியிட்டார் திமுக தலைவரும் முதல்வருமான கலைஞர். 

இந்த அறிவிப்பு வெளிவந்தபோது எம்.ஜி.ஆர். இப்போது சென்னை அடையாறில் ஜானகி மகளிர் கல்லூரியாக இருக்கும்  சத்யா ஸ்டுடியோவில் ’நேற்று இன்று நாளை’ ஷூட்டிங்கில் இருந்தார்.

எம்.ஜிஆர். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை அறிந்து அவரது ஆதரவாளர்கள் கடும் கோபம் அடைந்தனர்.

எம்.ஜி.ஆர். மன்றங்கள் என்ற பெயரில் சுமார் 3 லட்சம் உறுப்பினர்கள் எம்.ஜி.ஆருக்கு அப்போது பக்க பலமாக இருந்தனர்.  எம்.ஜிஆர். எந்த அறிவிப்பும் அழைப்பும் கொடுக்காமலேயே பலரும் அப்போது எம்.ஜி.ஆரின் இல்லமான ராமாவரம் தோட்டத்துக்கு திரண்டு வர ஆரம்பித்தனர்.

இதற்கிடையே திமுக பொதுக்குழு கூட்டத்தில், “என்னுடைய இருபதாண்டு கால நண்பரை வலியோடு கட்சியில் இருந்து நீக்குகிறேன். காரணம் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதால்தான்” என்று பேசினார் திமுக தலைவரான கலைஞர்.
அடுத்தடுத்த அரசியல் காட்சிகள்  மாறத் தொடங்கின.

எம்.ஜி.ஆரை  கம்யூனிஸ்டு தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் சந்தித்தார்கள். அடுத்த சில தினங்களில் அதாவது அக்டோபர்  17 ஆம் தேதி எம்.ஜி.ஆர். மதுரையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  என்ற பெயரில் கட்சியைத் தொடங்க இருப்பதாக அறிவித்தார்.

காரணம் அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றுமாறு கேட்கிறேன் என்று அவர் திருக்கழுக்குன்றம் பொதுக்கூட்டத்திலும், ஆயிரம் விளக்கு பொதுக்கூட்டத்திலும் பேசியிருந்தார்.

இதையடுத்து அண்ணா திமுக என்ற பெயரில் தனிக் கட்சியைத் தொடங்குமாறு அப்போது தொண்டர்களே எம்.ஜி.ஆருக்கு முதலில் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில்தான்  1972அக்டோபர் 17ஆம் தேதி மதுரையில்  ஜான்சி ராணி பூங்கா அருகே அதிமுக என்ற கட்சி தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்காக எம்.ஜி.ஆர்,. சென்னையில் இருந்து மதுரைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸில்  புறப்பட்டார். சென்னையில் இருந்து திண்டுக்கல் வழியாக பாண்டியன் எக்ஸ்பிரஸ் மதுரையை சென்றடையும். இரவு  சென்னை எழும்பூரில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை திண்டுக்கல் செல்லும் வரை சரியான நேரத்துக்கு சென்றது பாண்டியன் எக்ஸ்பிரஸ். 

ஆனால் திண்டுக்கல்லுக்குப் பிறகுதான் எம்.ஜி. ஆரின் பயணத்தில் திருப்பம் ஏற்பட்டது. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஏராளமான  தொண்டர்கள் குவிந்தனர். அதுமட்டுமல்ல… ரயில் செல்லும் தண்டவாளம் முழுதும் எம்ஜிஆரின் ரசிகர்கள் திரண்டு நின்றனர்.

சிக்னல்கள் எதுவும் வேலை செய்யவில்லை. எம்.ஜி.ஆரின் ரசிகர்களே சிக்னல்களாக நின்றார்கள். ஒவ்வொரு இடத்திலும் எம்.ஜி.ஆர் முகத்தைப் பார்த்துவிட்டு அதன் பிறகே ரயில் செல்ல அனுமதித்தார்கள்.

1972 October 17 admk starts mgr

ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர். ரயிலில் இருந்து இறங்கி காரில் மதுரை சென்றுவிடலாமா என்று திட்டமிட்டார். 

இதுபற்றி ரயில்வே அதிகாரிகளிடம்  அவர் கேட்டபோது, ‘ஐயா… அதுமட்டும் வேண்டாம். நீங்க ரயில்லயே வாங்க. நீங்க ரயில்லதான் வர்றீங்கனு தகவல் தெரிஞ்சு மதுரை வரைக்கும்  மக்கள் நிற்கிறாங்க. நீங்க ரயில்ல இல்லைனு தெரிஞ்சுதுன்னா ரயிலை எல்லாம் அடிச்சு உடைச்சுடுவாங்க’ என்று வேண்டி எம்.ஜி.ஆரை ரயிலிலேயே மதுரைக்கு வரச் செய்தனர்.  

எம்.ஜி.ஆருக்கு ஆங்காங்கே கொடுத்த வரவேற்பால் பாண்டியன் எக்ஸ்பிரஸ் திண்டுக்கலில் இருந்து  மதுரைக்கு செல்வதற்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் பத்து மணி நேரம் எடுத்துக் கொண்டது.

இந்திய ரயில்வே வரலாற்றிலேயே ஓர் எக்ஸ்பிரஸ் ரயில் இவ்வளவு குறைந்த தூரத்தை இவ்வளவு தாமதமாக கடந்தது இதுவே முதலும் கடைசியுமாக இருக்கும்.

அதன் பிறகு பயணக் களைப்பெல்லாம் மக்கள் தந்த வரவேற்பால் பொடிப் பொடியாய் போக எம்.ஜிஆர் மதுரை சென்று மதுரை முத்து, பட்டுராஜன்,   உள்ளிட்டோர் முன்னிலையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க அண்ணா திமுக கொடியை ஏற்றிவைத்தார். 

1972 October 17 admk starts mgr

எம்.ஜி.ஆர் ஏற்றிய அண்ணா திமுக கொடியில் கறுப்பு சிவப்பு வண்ணத்தின் இடையே வெள்ளைத் தாமரை படமும் இடம்பெற்றிருந்தது. பிறகே கொடியில் அண்ணா இடம்பெற்றார்.

எம்.ஜிஆருக்கு கிடைத்த எலக்டிரிசிட்டி இன்று வரை தமிழக அரசியல்வாதிகள் யாருக்கும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

ஆரா

அதிமுக 51-வது துவக்கவிழா: எடப்பாடி – பன்னீர் தனித்தனியே கொண்டாட்டம்!

எடப்பாடி புறக்கணிப்பு: சபாநாயகர் விளக்கம்!

+1
1
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *