டிஜிட்டல் திண்ணை:  ஆட்சியே போனாலும்… ஆளுநருக்கு எதிரான 19 பக்க புகார்:  ஸ்டாலின்  பேச்சு, கடிதப் பின்னணி!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் சென்னையில் திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய வீடியோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது.

அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் இன்று ஜூலை 9ஆம் தேதி திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசு மகன் சிற்றரசு திருமணத்தை அறிவாலயத்தில் நடத்தி வைத்தார்.

இந்த விழாவிலே பேசிய முதலமைச்சர், ‘தேசிய அளவிலே எதிர்க்கட்சிகள் ஒற்றுமை ஏற்பட்டிருக்கிறது. பாட்னாவிலே முதல் கூட்டம் நடந்து அடுத்த கூட்டம் பெங்களூரில் நடைபெற இருக்கிறது. இதனால்  பாஜகவும் பிரதமர் மோடியும்  எரிச்சல் அடைந்துள்ளனர்.  பிரதமர் என்ற நிலையில் இருந்து இறங்கி வந்து அவர் உளறிக் கொண்டிருக்கிறார். ஆட்சிக்கு ஆபத்து என்ற நிலை ஏற்பட்டாலும் நாம் கவலைப்பட போவதில்லை’ என்று பேசியிருக்கிறார்.

இந்த ஆட்சியை கலைக்க சதி நடக்கிறது என்றெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே பேசியிருக்கிறார். ஆனாலும் இன்று,   ‘ஆட்சிக்கு ஆபத்து என்றாலும் கவலை இல்லை’ என்ற வகையில் ஸ்டாலின் பேசியதற்கு நேற்று டெல்லியில் நடந்த ஒரு சம்பவமும் காரணமாக இருந்திருக்கிறது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை பயனுள்ள சந்திப்பு அதாவது பர்பஸ்ஃபுல் சந்திப்பு என்று ராஜ்பவன் ட்விட்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆளுநருக்கும் முதலமைச்சருக்குமான அரசியல் ரீதியான மோதல் தமிழ்நாட்டில் பல மாதங்களாக நடந்து கொண்டிருந்த போதும்… அமைச்சர் செந்தில் பாலாஜியை மையமாக வைத்து மே, ஜூன், ஜூலை மாதங்களில் ஆளுநர்- முதலமைச்சர் மோதல் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஜப்பான் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நிலையில் மே 31 ஆம் தேதி, செந்தில் பாலாஜி மீதான உச்ச நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு அவர் மீது அரசியலமைப்பு ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதில் கடிதம் எழுதிய ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது வழக்கு இருந்த போது அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று குறிப்பிட்டு விளக்கி இருந்தார்.  இதன் பின் ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட பிறகு… அவர் வகித்து வந்த துறைகளை  தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகிய அமைச்சர்களுக்கு மாற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

துறை மாற்றப் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட  ஆளுநர், அதேநேரம்  ‘செந்தில்பாலாஜி  மருத்துவ சிகிச்சையில் இருப்பதால்’ என்ற காரணத்தை ஏற்க மறுத்தார். பிறகு செந்தில்பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய பரிந்துரை செய்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த முதலமைச்சர் அவரை துறை இல்லாத அமைச்சராக அரசாணை வெளியிட்டார்.

இந்த தொடர் கடிதப் பரிமாற்ற மோதல்களைத் தொடர்ந்து மே 29 ஆம் தேதி செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.  அன்று இரவே, அந்தக் கடிதத்தை  மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி நிறுத்தி வைப்பதாகவும் இது தொடர்பாக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலின் கருத்தைக் கேட்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆளுநரின் இந்த தொடர் முரண் தொடர்பாக அப்போதே முதலமைச்சர் ஸ்டாலின் கோட்டையில் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் அப்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு, அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, மூத்த வழக்கறிஞர்களும் எம்.பி.க்களுமான வில்சன், என்.ஆர். இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டனர். ஆளுநருக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்ட இந்தக் கூட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களது கருத்தைத் தெரிவித்தனர்.

சட்ட ரீதியாக தங்கள் பாயின்ட்டுகளை  எடுத்துக் கூறினர். அப்போது ஆ.ராசா, ‘ஆளுநர் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டுதான் செய்கிறார். எனவே சட்ட ரீதியான விளக்கமாக மட்டும் இல்லாமல் அரசியல் ரீதியான  பதிலடியாகவும் இது இருக்க வேண்டும். ஆளுநர் தனது தரப்புக்கு வலு சேர்க்கும் வகையில்  நமக்கு தொடர் கடிதங்கள் எழுதி  மாநில அரசின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான லீகல் கிரவுண்டை உருவாக்குகிறார். நாம் ஆளுநருக்கு எதிரான லீகல் கிரவுண்டை மட்டுமல்ல அரசியல் கிரவுண்டையும் உருவாக்க வேண்டும்’ என்று கூறினார்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி  விரிவான சட்டக் குறிப்புகளையும்,  அரசியல் ரீதியாகவும் சூடாக தயாரிக்கப்பட்ட அந்தக் கடிதத்தை ஆளுநருக்கு எழுதினார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த பின்னணியில்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி துறை இல்லாத அமைச்சர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க டெல்லி சென்றார். இதற்கிடையே மீண்டும் ஒரு ஆலோசனை செய்தார் ஸ்டாலின்.

ஏற்கனவே ஆளுநர் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் திமுக சார்பில் மெமோரண்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய அடுத்த சில நாட்களில் தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி தலைமையில்  திமுக பொருளாளாரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு,  துணைப் பொதுச் செயலாளரும் மக்களவை திமுக கொறடாவுமான  ஆ.ராசா,   மூத்த வழக்கறிஞர்கள் எம்.பி.க்களுமான வில்சன், என்.ஆர். இளங்கோ ஆகியோர்தான் அன்று அந்த புகார்களை குடியரசுத் தலைவரிடம் கொடுத்தனர்.

அதை நினைவுகூர்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்…அதற்குப் பிறகான ஆளுநரின் நடவடிக்கைகளை வரிசைப்படுத்தி மொத்தமாகத் தொகுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடிவெடுத்தார். அதன்படியே ஆளுநர் டெல்லி  செல்லும் முன்பே அவர் மீதான ஒட்டுமொத்த புகார்களையும் தொகுத்து  கடிதமாகத் தயாரித்துவிட்டார்.  ஜூலை 8 ஆம் தேதி  டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில்… அதே 8 ஆம் தேதி ஆளுநரின் ஒட்டுமொத்த  நடவடிக்கைகள் பற்றிய 19 பக்க கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார் ஸ்டாலின்.

அமித் ஷாவோடு பர்பஸ்ஃபுல் சந்திப்பு என்று ஆளுநர் ஒரு குறிப்பை கொடுத்த நிலையில்… உளவுத்துறை மூலமாக  தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ரவியின் தொந்தரவுகள் தொடரும் என்றே தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

செந்தில்பாலாஜியை கருவியாக வைத்து மாநில அரசுக்கு மேலும் நெருக்கடி தருவார்கள் என்று முதல்வருக்கு ரிப்போர்ட் கிடைத்திருக்கிறது. இந்த பின்னணியில்தான் இன்று (ஜூலை 9) அறிவாலயத்தில் நடந்த திருமண விழாவில் ஆளுநர் பற்றியெல்லாம் எதுவும் பேசாமல் நேரடியாக மோடியையே தாக்கிய ஸ்டாலின், ‘ஆட்சிக்கே ஆபத்து என்றாலும் கவலைப் பட போவதில்லை’ என்று பேசினார்.

அடுத்து டெல்லியின் அஸ்திரம் என்னவாக இருக்கும் என்பதை உணர்ந்து, அதை வெளிப்படையாக திருமண விழாவிலே போட்டு உடைத்துவிட்டார் ஸ்டாலின்” என்கிற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

ஆளுநர் ரவி நீக்கப்படுவதற்கு தகுதியானவர்” : மு.க.ஸ்டாலின்

ரசியாவில் நடந்தது சதிப்புரட்சியா? ஆயுதக் கிளர்ச்சியா? அதிகார மோதலா? 

 

+1
1
+1
0
+1
1
+1
7
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *