ஜாசன்
18-வது மக்களவை செய்ய வேண்டியது என்ன என்பதை நாம் சொல்வதற்கு முன் 17-வது மக்களவை நடவடிக்கைகள் வரலாறு படைத்திருக்கின்றது. முதலில் அது என்ன என்று பார்ப்போம்.
நாடாளுமன்றம் என்பது மக்களுக்கான திட்டங்களை உறுதி செய்யும் ஒரு இடம் என்பதை நாடாளுமன்றத்தின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறவு என்பது பரஸ்பரம் அது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
உதாரணத்துக்கு 17-வது மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டம். இது அவர்களின் பாராளுமன்ற செயல்பாட்டுக்கு ஒரு சிறந்த உதாரணம். விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வேளாண் சட்டம் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
குடியரசுத் தலைவர் அந்த சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கினார். ஆனாலும் அந்த சட்டத்தை மக்கள் விரும்பவில்லை. அந்த சட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு வர தொடங்கியது. வேறு வழியின்றி அதே நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் வேண்டாம் என்றும் இந்த சட்டம் திரும்பப்பெறப்படுகிறது என்று தீர்மானத்தை அரசு கொண்டுவந்து நிறைவேற்றியது.
இது பாஜக அரசு வேளாண் சட்டத்தில் விவசாயிகள் விஷயத்தில் சரியான ஒரு புரிதல் இல்லாமல் அவசர அவசரமாக நிறைவேற்றியது அது தொடர்ந்து வேறு வழியின்றி அதை அவர்களே திரும்பப் பெற வேண்டி இருந்தது.
அதே சமயம் பாராளுமன்றம் என்பது ஆக்கபூர்வமான விவாதத்திற்கான ஒரு களம். 2019 முதல் 2024 வரை ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 272 அமர்வுகளே நடந்திருக்கின்றன. பொதுவாக ஆண்டுதோறும் 135 நாட்கள் விரிவான விவாதங்கள் நடைபெறும்.
ஆனால் 17-வது மக்களவையில் ஒவ்வொரு ஆண்டும் அவை நடைபெற்ற நாட்கள் 55 ஆக சுருங்கிவிட்டது. இது ஆரோக்கியமான ஜனநாயக முறை என்று ஏற்றுக்கொள்ள முடியாது. முதல் மக்களவையில் 677 நாட்கள் பாராளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடந்திருக்கின்றன.
அதேபோல் 2-ஆம் மக்களவையில் 581 நாட்கள். மூன்றாவது மக்களவையில் 578 நாட்கள் என்று படிப்படியாக குறைந்து. இப்போது 272 நாட்கள் மட்டுமே நடவடிக்கை என்பதுகூட ஒரு வரலாறு தான் ஆனால் தவறான எல்லோரும் ஏற்றுக் கொள்ள முடியாத வரலாறு.
17-வது மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் அனுமதிக்கப்படவில்லை. ஒத்திவைப்பு தீர்மானம் என்பது மக்களின் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு வாய்ப்பு.
இதன் மூலம் ஆக்கப்பூர்வமான விவாதம் பிரச்சனையின் உண்மை நிலை வெளிக்கொண்டு வருவது என்பதெல்லாம் இயல்பாக இந்த விவாதத்தில் நடப்பதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால் அதற்கு சென்ற மக்களவையில் அந்த வாய்ப்பு இல்லாமல் போனது. இதே போல் கவன ஈர்ப்பு தீர்மானமும் அனுமதி இல்லை.
ஒரு முக்கிய பிரச்சனையில் நாட்டில் நடந்த ஒரு அவலத்தை அரசின் கவனத்தை ஈற்று அதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான நல்வாய்ப்பு. தடுத்து நிறுத்த நடவடிக்கை இதெல்லாம் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் சாத்தியம். ஆனால் அதுவும் சென்ற மக்களவையில் காணாமல் போனது. இதற்கு ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இரண்டுமே பொறுப்பாகும்.
நிதிநிலை அறிக்கை பொருத்தவரை அக்கபூர்வமான விவாதங்களுக்குப் பிறகு நிதிநிலை அறிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் என்பதுதான். பாராளுமன்ற மரபு ,வரலாறு, நடைமுறை என்று சொல்லிக் கொண்டே போகலாம். நான்காவது மற்றும் ஐந்தாவது நாடாளுமன்றங்களில் நிதிநிலைஅறிக்கை சம்பந்தமாக 101 மணி நேரம் விவாதம் நடந்திருக்கிறது. ஆனால் 17-வது மக்களவையில் நிதிநிலை அறிக்கை விவாதம் 35 மணி நேரம் மட்டுமே நடந்திருக்கிறது.
17-வது மக்களவை படைத்த இன்னொரு வரலாறு துணை சபாநாயகர் இல்லாதது. அரசியலமைப்பு சட்டம் 93-வது பிரிவின் படி மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு கூடும் முதல் கூட்டத்தில் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். அடுத்த சில தினங்களில் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் இதுதான் பாராளுமன்ற மரபு மற்றும் நடைமுறை.
ஆனால் அந்த மரபு நடைமுறையும் 17-வது மக்களவையில் முடங்கிப் போனது. துணை சபாநாயகர் சம்மந்தமான ஒரு பொதுநல வழக்கு தற்சமயம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
17-வது மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 206 முறை இடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மக்களவையில் கடைசி குளிர் கால கூட்டத் தொடரில் 146 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள்.
இதெல்லாம் 17-வது மக்களவையின் மோசமான ஒரு வரலாற்றுப் பக்கம். இதில் யார் செய்தது சரி தவறு என்பதை லேசாக பதினெட்டாவது மக்களவைக்கான தேர்தலில் மக்கள் கோடிட்டு காட்டி இருக்கிறார்கள். இதை இன்றைய ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இருவரும் உணர வேண்டும்.
ஆளுமை மிக்க தலைவர் என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திரா பிரதமராக இருந்த காலத்தில் கூட பாராளுமன்றத்தில் ஆக்கபூர்வமாக விவாதங்கள் நடந்தது. சுதந்திரா கட்சி பாராளுமன்ற மூத்த உறுப்பினர் பிலுமோடி விவாதங்களின் போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி விமர்சனம் செய்வார்.
அந்த விமர்சனங்களுக்கு இந்திராகாந்தி அம்மையார் பொறுமையாக பதில் சொல்லி இருப்பதை பாராளுமன்ற நூலகத்தில் உள்ள ஆவணங்களை பார்த்தாலே இன்றைய இளம்பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்து கொள்ளலாம். பிலுமோடியின் விமர்சனத்தை தாங்கிக் கொள்ளாத காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை சி.ஐ.ஏ ஏஜென்ட் என்று பாராளுமன்றத்தில் விமர்சனம் செய்தார்கள்.
இதனைத் தொடர்ந்து நான் சி.ஐ.ஏ ஏஜென்ட் என்ற ஒரு அட்டையை சட்டை பையில் குத்திக்கொண்டு சில நாட்கள் அவைக்கு வந்ததும் காங்கிரஸ் உறுப்பினர்களே சிரித்து விட்டார்கள். அதன்பிறகு சி. ஐ.ஏ ஏஜென்ட் என்ற விமர்சனம் அவர் மீது இல்லாமல் போனது .
ஒரு முறை பாராளுமன்றத்தின் சென்ட்ரல் ஹாலில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஜி விஸ்வநாதன் பிலுமோடி இருவரும் காபி பருகிக் கொண்டிருந்தார்கள். அவர்களைக் கடந்து இந்திரா அம்மையார் போனபோது சத்தமாக பிலுமோடி “மேடம் வாருங்கள் எங்களுடன் காப்பி சாப்பிட என்று ஆங்கிலத்தில் அழைத்தார் .இந்திரா அம்மையார் அவர்களை நோக்கி வந்து “காப்பி எங்கே” என்று கேட்க உடனே அவருக்காக காப்பியை விஸ்வநாதன் வாங்கி அவரிடம் தந்தார் இந்திரா அம்மையார் புன்முறுவலுடன் அதை வாங்கி பருகி விட்டு நன்றி சொல்லிவிட்டு போனார்.
அந்த காலத்தில் பாராளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் எதிர்க்கட்சி ஆளுங்கட்சி என்ற பேதம் இல்லாமல் நடந்தது என்பதற்கு உதாரணம் இது. இந்திராகாந்தி ஆட்சியில் தான் அதிக அளவு நம்பிக்கை இல்லா தீர்மானம் அவர்கள் ஆட்சி மீது கொண்டுவரப்பட்டது. ஒன்பது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை இந்திரா காந்தி அம்மையார் சந்தித்தார். அப்போதெல்லாம் எதிர்க்கட்சிக்களுக்கான பதில் ஆக்கபூர்வமாகத்தான் இருந்தது .
1968-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்த மசோதாவில் தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் அந்த மசோதாவை ஆதரித்து பேசினார். அப்போது அவர் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத் தீர்மானத்தை 20 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் தமிழக சட்டசபையில் கொண்டு வராமல் தடுத்து விட்டது.
மாநிலங்களின் பெயர் மாற்றத்திற்கு சட்டசபை ஒப்புதல் தேவை என்று உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒப்புதலை வரவிடாமல் தடுத்தது காங்கிரஸ் தான். தமிழ்நாடு பெயர் மாற்றத்தை எதிர்த்த காங்கிரஸ் தமிழ்நாட்டில் மெட்ராஸ் மாநில காங்கிரஸ் என்று பெயர் பலகை வைத்துக் கொள்ளவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் என்று தான் பெயர் பலகை வைத்திருக்கிறது.
இதிலிருந்தே அவர்கள் எந்த அளவுக்கு முரண்படுகிறார்கள் என்று ஏன் முரண்படுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியும் என்று சொன்னார் முரசொலி மாறன். அதுமட்டுமல்ல தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்காக உண்ணாவிரதம் இருந்து இறந்து போன தியாகி சங்கரலிங்க நாடாருக்கும் அஞ்சலியும் நன்றியையும் தெரிவித்து அந்த சபை குறிப்பில் அதை ஒரு ஆவணம் ஆக்கினார் முரசொலி மாறன்.
ஆனால் காங்கிரஸ் கட்சி அவருக்கு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை என்ற தனது ஆதங்கத்தையும் அந்த அவையில் பதிவு செய்தார் முரசொலி மாறன். முரசொலி மாறனின் விமர்சனங்களை காங்கிரஸ் கட்சி அமைதியாக கேட்டுக்கொண்டது எதிர்த்து எதுவும் சொல்லவில்லை.
இன்னும் சொல்லப்போனால் இந்த தீர்மானத்தை கொண்டு வருவதற்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டார் உள்துறை அமைச்சர். இதுதான் ஆக்கபூர்வமான வரலாறு.
புதிதாக அமைய உள்ள பதினெட்டாவது மக்களவையில் 280 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் மக்களுக்கு எது தேவை என்ற ஒரு அடிப்படை புரிதல் ஒரு அனுபவமாக நிச்சயம் தெரிந்து கொண்டிருப்பார்கள் இவர்கள்.
அதே சமயம் தேசியக் கட்சிகள் இப்போதும் வறுமை ஒழிப்பு வேலையில்லாத் திண்டாட்டம் இதைத்தான் முக்கியமாக தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வறுமை வேலையில்லாத் திண்டாட்டம் பொருளாதார ஏற்றத்தாழ்வு என்ற தொடர்கதை இருந்தால் இதற்கு யார் பொறுப்பு ஆட்சியாளர்கள் தான்.
பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளாக நியாய விலை கடைகளில் இலவசமாக உணவு பொருட்கள் வழங்கியதை பெருமையாக தேர்தல் பிரசாரத்தில் பேசிக் கொண்டிருந்தார். மக்களுக்கான உணவை அவர்களுக்கு தர வேண்டியது அரசின் கடமை என்பதை அவர் புரிந்து கொள்ளாமல் அவர் ஏதோ பெரிய சாதனை செய்தது போல் பேசியதைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
திராவிட கட்சிகள் இலவசங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்துவதில்லை விலையில்லா பொருட்கள் என்றுதான் சொல்வது வழக்கம் மகளிர் உதவித்தொகை கூட இது உதவித்தொகை அல்ல உங்கள் உரிமைத் தொகை என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
பாராளுமன்றம் என்பது ஆக்கபூர்வமான விவாதங்களுக்கான ஒரு தளம், எதிர்க்கட்சிகள் அரசின் குறைகளை சுட்டிக் காட்டத் தயங்க கூடாது. அதேபோல் மக்களுக்கு பயனுள்ள அரசின் திட்டங்களைஅரசியல் ரீதியான எதிர்ப்பை தவிர்த்து பாராட்ட முன்வர வேண்டும். எதிர்க்கவும் சரி பாராட்டவும் சரி தயக்கம் கூடாது.
இன்னும் சொல்ல போனால் எதிர்க்கட்சிகளுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய கடமையை அவர்கள் என்றும் மறக்கக்கூடாது. ஆளும் கட்சிக்கும் அவர்கள் சொல்லும் தவறுகளை கூர்ந்து கவனித்து கேட்கும் பொறுமை வேண்டும் அதற்கான பெருந்தன்மை அவர்களுக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும். நாம் அதிகாரத்தில் இருக்கிறோம் நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று எண்ணம் ஒருபோதும் வரக்கூடாது.
குறிப்பாக பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் கடைசியாக பேசும்போது 400 இடங்களுக்கு மேலாக அதிகமாக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் வருவேன் என்று சொன்னதை பதினெட்டாவது மக்களவை நுழைந்தவுடன் பிரதமர் மோடி அதை நினைவு கொள்ள வேண்டும்.
வாக்காளர்கள் அவர்கள் நினைத்தால் தட்டியும் கொடுப்பார்கள், இல்லையென்றால் குட்டியும் உட்கார வைப்பார்கள் என்பதை பிரதமர் மோடிக்கு புரிய வைத்திருக்கிறது. இந்த 18-வது மக்களவை. அது அவருக்கு தெரியாமல் இருக்கும் ?.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜூன் 20 சட்டமன்றம் கூடும் : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு