16 செல்வங்கள்… 16 குழந்தைகள் : நாடாளுமன்ற தொகுதிகள் குறைவதை சுட்டிக்காட்டி பேசிய ஸ்டாலின்

Published On:

| By Kavi

குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை மட்டுமே சூட்டுங்கள் என்று 31 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைத்து முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

சென்னை திருவான்மியூர். அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 31 இணைகளுக்கு இன்று (அக்டோபர் 21) திருமணம் நடத்திவைக்கப்பட்டது.

மணமக்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் ஸ்டாலின் சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். தமிழ்நாடு முழுவதும் இன்று மட்டும் 379 இணைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன.

மணப்பெண்ணுக்கு 4 கிராம் தங்கத் தாலி, தம்பதிகளுக்கு கட்டில், மெத்தை, பீரோ உள்பட ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “இங்கு ஒவ்வொரு ஜோடியும் வரும்போது ஒரு தட்டு கொடுத்தார்கள். அந்த தட்டை மாப்பிள்ளை கையில் தான் கொடுத்தார்கள். ஆக, மாப்பிள்ளை தட்டு ஏந்த வேண்டும். நாங்கள் குறைத்து பேசவில்லை. அதுதான் பெண்களுக்கு உரிய உரிமையை தந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கு ஒரு அடையாளம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த துறையில் சார்பில் பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறோம்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க ஒரு குழுவை அமைத்தோம். அந்தவகையில் கடந்த 3 ஆண்டுகளில் பணிகள் முடிந்து 2,226 கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 10,638 கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. ரூ.1,103 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. இதன்மூலம் 30 ஆயிரத்துக்கு அதிகமான பணிகள் கோயில்களில் நடந்து வருகிறது.

ரூ.6,792 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
தமிழில் குடமுழுக்கு, அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என முத்தாய்ப்பான பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கோயில்களில் அன்னதானம் திட்டம் மூலம் நாள்தோறும் 92,000 பேர் பசியாறுகின்றனர்” என்று கூறினார்.

மேலும் அவர், “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று வாழ்த்துவார்கள். 16 என்றால் 16 குழந்தைகள் அல்ல. 16 செல்வங்கள்.

16 வகையான செல்வங்கள் என்று கி.ஆ.பெ. விஸ்வநாதன் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அவை மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயல், வயது, வாகனம், பொன், பொருள், புகழ். இதுதான் அந்த செல்வங்கள். இப்போது யாரும் இந்த 16 செல்வங்களைப் பெற்று வாழ்க என்று வாழ்த்துவதில்லை. அளவோடு பெற்று வளமோடு வாழ்க என்று சொல்கிறோம்.

ஆனால் நாடாளுமன்ற தொகுதிகளெல்லாம் குறைகிறது என்ற நிலை வரும்போது ஏன் அளவோடு பெற்று வாழ வேண்டும் என்ற கேள்வி வருகிறது. நாமும் 16 குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாமே என்று சொல்லும் நிலைமையும் வந்துள்ளது. எது எப்படி இருந்தாலும் உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை மட்டுமே சூட்டுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

 

பிரியா

தடையை மீறி மக்களை சந்தித்த சீமான்… கரூரில் என்ன நடந்தது?

அம்மாவில் நடக்கும் பிரச்னைகளை மோகன்லால் நன்கு அறிந்தவர் : நடிகை மல்லிகா சுகுமாறன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share