1,500 தமிழக அரசு பேருந்துகளை ஸ்கிராப் செய்வதை ஒன்றரை ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கட்கரியிடம் தமிழக அமைச்சர் சிவசங்கர் கோரிக்கை விடுத்தார்.
வர்த்தக ரீதியில் 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களையும், தனி நபர்கள் பயன்படுத்தும் 20 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்களையும் அழிக்கும் அல்லது பயன்பாட்டிலிருந்து நீக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வர்த்தக ரீதியில் 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு கூறியிருந்தது. இது ஸ்கிராபிங் கொள்கை என கூறப்படுகிறது.
இந்த கொள்கைப் படி, தமிழக போக்குவரத்துக் கழகங்களின் கீழ் உள்ள 20,926 பேருந்துகளில் சுமார் 1,500 பேருந்துகள் கழிவு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தசூழலில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச போக்குவரத்து அமைச்சர்களை அழைத்த மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று (ஏப்ரல் 17) டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரும் கலந்துகொண்டார்.
அப்போது அமைச்சர் சிவசங்கர், “தானியங்கி வாகன சோதனை மையம் தனியார் பங்களிப்புடன் 18 இடங்களில் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகங்கள் பேட்டரியில் இயங்கும் மின்சார பேருந்துகள் ஜிசிசி முறையில் வாங்குவது குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 12.04.2022 முதல் நேரடி தொடர்பில்லா பழகுநர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட நடவடிக்கைகளை எடுக்கும் தமிழ்நாட்டில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட அரசு மற்றும் அரசு சார்புடைய துறையின் வாகனங்கள் 2,500க்கும் மேல் உள்ளது, அரசு பேருந்துகள் 1,500 உள்ளன.
இவற்றை கழிவு செய்தால் பல வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்படும். அது பொதுமக்களுக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் ஒன்றரை ஆண்டுகள் நீட்டிப்பு செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து மற்ற மாநில அமைச்சர்களும் தங்கள் மாநிலத்தில் உள்ள போக்குவரத்து நிலை குறித்து பேசினர்.
இந்த கூட்டத்தில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை மறுஆய்வு செய்தல், வாகன கட்டமைப்பு நிலையங்களை அமைத்தல், மின் பேருந்துகளுக்கு நிதியளித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்குவதை முறைப்படுத்துதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டம் குறித்து சாலை போக்குவரத்து துறை அமைச்சகம், “நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டில் சாலைப் போக்குவரத்து முக்கியப்பங்கு வகிப்பதுடன், சுமூகமான சரக்கு மற்றும் பொதுமக்கள் போக்குவரத்தை உறுதி செய்கிறது.
போக்குவரத்து தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் மேம்படுத்தப்பட்ட சாலைப் போக்குவரத்துக்கும், பாதுகாப்பான சாலைப் பயணத்திற்கும் முனைப்பான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருட்களான ஹைட்ரஜன், சுத்திகரிக்கப்பட்ட இயற்கை வாயு உயிரி-எரிபொருள், எத்தனால் கலப்பு எரிபொருள் மற்றும் மின்சார வாகனங்கள் மூலம் பசுமை நெடுஞ்சாலைகளை உருவாக்க மத்திய அரசு பிரத்யேக பணிகளை மேற்கொண்டு வருகிறது” என தெரிவித்துள்ளது.
மாநில அமைச்சர்களுடன் விவாதித்தது பற்றி நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில், “மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்களின் ஒத்துழைப்புடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பாரதத்தின் கூட்டாட்சித் தன்மையை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு புதுமையான தீர்வுகள் பற்றி விவாதிக்கப்பட்டன” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியா
சித்த பல்கலை மசோதா: இரண்டாம் முறையும் திருப்பி அனுப்பிய ஆளுநர்
’குலசாமி’ இசை வெளியீட்டு விழா…கலந்துகொள்ளாத விமல்…வருத்தம் தெரிவித்த அமீர்