36 மணி நேரத்தில் 15 கொலைகள்: எங்கே போகிறது தமிழகம்? எடப்பாடி கேள்வி!

அரசியல்

”சட்டம் – ஒழுங்கை முதல்வரே நேரடியாக கையில் வைத்திருந்தும் 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்தது எப்படி? இதுதான் அவர் மக்களை பாதுகாக்கும் லட்சணமா?” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்டு 24) வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

திமுக ஆட்சியில், சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டை கடந்த 15 மாதங்களில் நான் பலமுறை எடுத்துக் கூறியுள்ளேன்.

ஆனால், குற்றங்களைத் தடுப்பதில் நிர்வாகத் திறமையற்ற இந்த முதல்- அமைச்சர் ஆர்வமின்றி, விளம்பர மோகத்தில் திளைத்துள்ளதால், இன்று தமிழகம் முழுவதும் கொலைக் களமாக மாறி வருவது கண்டு மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் காவல் துறை செயலிழந்து கிடப்பது வெட்கக்கேடானது.

கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன என்று செய்திகள் வருகின்றன. இது, மக்களை குலை நடுங்கச் செய்துள்ளது.

இந்தக் கொலைகள் அனைத்தும் ஏதோ எதிர்பாராதவிதமாக நடந்ததாகத் தெரியவில்லை. முன்விரோதம் காரணமாகவும், திட்டமிட்டும் இக்கொலைகள் நடந்துள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்ட ஒருசிலர் தங்கள் உயிருக்கு ஆபத்து என்று புகார் கொடுத்தும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் அலட்சியமாக இருந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன” என்று கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி அந்த கொலைகளை பட்டியலிட்டுள்ளார்.

15 murders in 36 hoursசென்னை பாடியநல்லூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அபிஷேக், நண்பர்களுடன் நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்து கொண்டிருந்த போது திண்டிவனம் அருகே அவரை, இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து கொடூரமாக வெட்டிக் கொன்றுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே தங்கராஜ் மற்றும் உதயகுமார் என்பவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் தங்கராஜை, உதயகுமார் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள் உதயகுமாரை தாக்கியதில், அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்பதில் ஆரம்பித்து செய்தித் தாள்களில் வந்த செய்திகளைப் பட்டியலிட்டுள்ளார் எடப்பாடி.

15 murders in 36 hours

ஆக, கடந்த 36 மணி நேரத்தில் சுமார் 15 படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

சட்டம்-ஒழுங்கை நானே நேரடியாக கவனித்து வருகிறேன் என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு கூறினார்.

இதுதான் அவர் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா? இதன் காரணமாக, மக்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். இந்தப் படுகொலைச் சம்பவங்களுக்கு காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழகக் காவல் துறை ஸ்காட்லாந்து காவல் துறைக்கு ஈடு இணையாக பேசப்பட்ட காலம் மாறி, இன்று சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாமல், கையறு நிலையில் செய்வதறியாது திறமையற்ற காவல் துறையாக மாறி நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இனியாவது இந்த திமுக அரசு விழித்துக்கொண்டு, கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் பலாத்காரம், போதைப் பொருள் விற்பனை போன்ற சமுதாய சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்தி, தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.

கலை.ரா
அதிமுகவை ஸ்டாலினால் அழிக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *