மதுரை மாநாட்டில் 15 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 4) ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மதுரை மாநாடு, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநாட்டிற்கான லட்சினையை இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
“மதுரை மாநாட்டிற்காக கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு ஆலோசோனைக் கூட்டமும் குட்டி மாநாடு போல எழுச்சியாக நடைபெற்றது. கிராமங்களில் இருந்து மாநகராட்சி பகுதி வரை ஒவ்வொரு தொண்டனும் அந்த மாநாட்டிற்கு குடும்பத்தோடு செல்ல வேண்டும் என்ற வகையில் இன்றைய தினம் மாவட்டச் செயலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதன்படி மொத்தம் 15 லட்சம் பேர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்கள். உணவு, தண்ணீர், வாகன நிறுத்துமிடம், சுகாதார வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாகனங்கள் வருகை தரும். அந்த வாகனங்களை நிறுத்துவதற்கு எந்தெந்த இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஒரு கலந்துரையாடல் பொதுச்செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர்கள் கழகத்தின் நிலைப்பாடு மற்றும் எடப்பாடி பழனிசாமியின் கருத்தை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்ததன் காரணமாக தொண்டர்கள், செயல் வீரர்கள், வீராங்கனைகள் என 15 லட்சம் பேர் இந்த மாநாட்டிற்கு எழுச்சியோடு வருவார்கள்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த கேள்விக்கு,
“ராகுல் காந்தி வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சனம் செய்ய முடியாது. இதில் மத்திய அரசு தான் முடிவு செய்ய முடியும்” என்றார் ஜெயக்குமார்.
மோனிஷா