இனி 4 ஆண்டுக்கு ஒருமுறைதான் ஊதிய உயர்வு: அமைச்சர் சிவசங்கர்

அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம் 7ம்கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு நிறைவேறியுள்ளது. இதில் முக்கியமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம் 7ம்கட்டப் பேச்சுவார்த்தை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில், குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்துக்கழக பயிற்சி மைய வளாகத்தில் நேற்று காலை(ஆகஸ்ட்24) தொடங்கியது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 66 தொழிற்சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகளை தனித்தனியே சந்தித்து, அவர்களது கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

நேற்று மாலைவரை நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து, பேச்சுவார்த்தை இன்றும்(ஆகஸ்ட் 24) தொடர்ந்து நடைபெற்றது.

அதன்படி, இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவுற்று, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் பெரும்பான்மையான சங்கங்கள் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிகிற நிரந்தர பணியாளர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் சீர்செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய சம்பள விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டது.

அதை சீர்செய்து தர வேண்டும் என முக்கியக் கோரிக்கையாக தொழிற்சங்கங்கள் வைத்தன. பேமேட்ரிக் முறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு தமிழக முதல்வர் ஒப்புதல் அளித்த பிறகு, இன்று இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த ஒப்பந்தம் தொடங்கப்பட்டு நிறைவேறாமல் இருந்தது. அது, தற்போது 7கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இன்று வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.

இந்த பேமேட்ரிக் முறையில் அதிமுக காலத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் குறைக்கப்பட்டிருந்தது.

அது, தற்போது உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என்பது இனி நான்காண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றப்பட்டுள்ளது.

இது, நிதிநிலை காரணமாக 4 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்து துறைக்கு மட்டுமல்லாது, மற்ற பொதுத்துறை நிறுவனங்களிலும் 4 ஆண்டு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா காலத்தில் பணிபுரிந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பு நிதி வழங்கப்படும்” என்றார்.

ஜெ.பிரகாஷ்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts