பிரதமர் மோடி 140 கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக எதன் அடிப்படையில் பேசுகிறார்? என்று திமுக எம்பி ஆ.ராசா மக்களவையில் இன்று (பிப்ரவரி 9) சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி நேற்று மக்களவையில் பதிலளித்தார்.
அப்போது “காங்கிரஸ் கட்சி எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு காண விரும்புவதில்லை. அவர்களை போல் இல்லாமல், நாங்கள் நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளோம். நான் 140 கோடி பேர் குடும்பத்தில் ஒருவன். அவர்களின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக நான் பெற்றுள்ளேன்” என்று பேசினார்.
இந்நிலையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா இன்று மக்களவையில் பேசினார். அப்போது பிரதமர் மோடியின் பேச்சினை சுட்டிக்காட்டி சரமாரியான பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
இடஒதுக்கீட்டை குறைத்துவிட்டு பாதுகாவலரா?
அவர், “மத்திய பாஜக அரசு பழங்குடியினருக்காக இதுவரை ஒரு பள்ளிக்கூடம் கூட திறக்கவில்லை. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டைக் குறைத்துவிட்டு, எதன் அடிப்படையில் அவர்களின் பாதுகாவலர்களாக நீங்கள் இருக்க முடியும்?
இங்கு பிரதமர் மோடியின் பாஜகவுக்கு எதிராக ஓட்டுப்போட்ட கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதியாக நாங்கள் (எதிர்கட்சி எம்.பிக்கள்) இருக்கிறோம்.
நிலைமை இப்படி இருக்கும்போது எதன் அடிப்படையில் பிரதமர் மோடி 140 கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக பேசுகிறார்? என்று ஆ. ராசா எம்.பி கேள்வி எழுப்பினார்.
கொரோனா கால துயரங்கள்
மேலும், “கொரோனா தடுப்பூசி குறித்து திரும்ப திரும்ப தனது பெருமையாக பிரதமர் மோடி பேசி வருகிறார். ஆனால் கொரோனா பாதிப்பு சூழலை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என்பதே உண்மை. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களை எந்த ஒரு பாஜக அமைச்சரோ, பிரதமர் மோடியோ நேரில் சென்று பார்த்தார்களா?.
கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்களையோ, மருத்துவ வசதிகளையோ பாஜக அரசு வழங்கவில்லை. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கூட முறையாக தகனம் செய்யவில்லை.
ஆனால் கொரோனா நெருக்கடி காலத்தில் பொதுமக்களை விளக்கு ஏந்த சொல்லி, தட்டுகளை அடித்து ஒலி எழுப்ப சொல்லி விளம்பரம் தேடினார் பிரதமர் மோடி.
ஆனால் அதே வேளையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அப்போது எதிர்கட்சியாக இருந்த போதும் நேரில் சென்று பார்த்து நம்பிக்கை அளித்தார் தற்போதைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின். இதனை ஆட்சியில் இருந்த எந்த பாஜக தலைவரும் செய்யவில்லை.” என்று கூறினார்.
திராவிட மாடல் – குஜராஜ் மாடல் ஒப்பீடு
”திராவிட ஆட்சி உள்ள தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிகை மிக மிக குறைவு. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் வறுமை ஒழிப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
குஜராத் மாடல் ஆட்சியில் அம்மாநிலத்தில் வறுமையை ஒழிக்கப்பட்டுள்ளதா அதேநேரத்தில் திராவிட மாடலை பின்பற்றும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது.
வேலைவாய்ப்பின்மை
நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க எந்த நடவடிக்கையும் பிரதமர் மோடியின் பாஜக தலைமையிலான மத்திய அரசு செய்யவில்லை. நாட்டில் இளைஞர்களுக்கு எந்தவிதமான வேலைவாய்ப்புகளும் வழங்கப்படவில்லை, விவசாயிகளுக்கு விளைபொருள் இரட்டிப்பு விலை வாக்குறுதி என்ன ஆனது?
இந்நிலையில் எதன் அடிப்படையில் 140 கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக பிரதமர் மோடி கூறுவது பொய்” என்று திமுக எம்.பி. ஆ.ராசா மக்களவையில் பேசியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஜடேஜா, அஸ்வின் மாய சுழலில் சரிந்தது ஆஸ்திரேலிய அணி!
எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலரும் : மோடி