பாமகவில் 14 மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்து அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பாமக தலைவராக இருந்த ஜி.கே.மணிக்கு கவுரவ தலைவர் பதவியை வழங்கிவிட்டு தனது மகன் அன்புமணிக்கு தலைவர் பதவியை வழங்கினார் ராமதாஸ். 2022 மே மாதம் அன்புமணி ராமதாஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்
“அப்போது முதல் கட்சியில் சில முடிவுகளை எடுப்பதில், நிறுவனரான ராமதாஸுக்கும், தலைவரான அன்புமணிக்கும் இடையே உரசல் போக்கும், முட்டல் மோதல் போக்கும் இருந்து வருகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி நிறுவனர் ராமதாஸ் அதிமுக கூட்டணியை விரும்பினார். கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பாஜக கூட்டணியை விரும்பினார்.
இதனால் இருவருக்குமிடையே வருத்தம் ஏற்பட்டது. தேர்தலுக்கு பிறகு கட்சியில் மாற்றத்தை கொண்டு வர, பாமக நிர்வாகிகளை மாற்றுவதற்கு ராமதாஸ் முயற்சி செய்து வந்தார். அதற்கு அன்புமணி முட்டுக்கட்டை போட்டு வந்தார்” என்கிறார்கள் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தரப்பில்.
இந்த நிலையில் இன்று (அக்டோபர் 8) 14 மாவட்ட செயலாளர்களை மாற்றி, புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ரா.ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர்.
ஜெகன் வடக்குத்து ஊராட்சி மன்ற தலைவராக இருந்தபோது, ஊராட்சிக்குட்பட்ட பொது இடத்தை மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு தெரியாமல் தீர்மானம் போட்டு பட்டா மாற்றி விற்பனை செய்வதற்கு உதவியாக இருந்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் பல கோடி முறைகேடு நடந்ததால், இவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் அக்டோபர் 10ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
ஜெகனை தொடர்ந்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆல்வின் அமல பிரசன்னா மாற்றப்பட்டு ஜான்கென்னடி நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.எல்.இளவழகன் மாற்றப்பட்டு, வேலூர் பில்டர்பெட் ரோட்டைச் சேர்ந்த பி. ஜெகன் நியமிக்கப்பட்டுள்ளார். கே.எல்.இளவழகன் பாமக துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலாளர் உட்பட 14 மா.செ.க்களை மாற்றி புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ளார் ராமதாஸ்.
இதே அக்டோபர் 8ஆம் தேதி பாமக மாநில துணை தலைவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கே.பி.பாண்டியன் பாமக நிர்வாகிகளுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சாப்ட்டீங்களா? விஜய் சேதுபதி பேச்சுக்கு கொதிக்கும் கொங்கு!
ரூ.20 கோடி முறைகேடு… அமலாக்கத்துறை முன் அசாருதீன் ஆஜர்!